ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் தேசிய சுதந்திர முன்னணி சமர்ப்பித்திருந்த 12 அம்சக் கோரிக்கைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்கிணங்க ஊவா மாகாண தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
இரு தரப்பினரினதும் இணக்கப்பாட்டை வெளிப்படுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் அமைச்சர் விமல் வீரவன்சவும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டிருந்த உயர் மட்டக் குழுவில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, பஷில் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, டளஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இடம்பெற்றிருந்ததுடன் தேசிய சுதந்திர முன்னணியின் 12 அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் ஆவனத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன பஷில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தேசிய சுதந்திர முன்னணியின் 12 அம்ச யோசனைகள் தொடர்பில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். இதில் எட்டு யோசனைகள் காலத்திற்கு பொருத்தமானது என்பதைக் கருத்திற்கொண்டு திருத்தங்களுடன் அவற்றை ஏற்றுக்கொண்டோம். மேலும் நான்கு யோசனைகள் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கிணங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டக் குழுவில் ஒப்பமிடப்பட்ட இணக்கப்பாட்டு ஆவணம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் விளக்க மளித்த அமைச்சர் விமல் வீரவன்ச:
கடந்த மே மாதம் எமது கட்சியின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கிணங்க நாடு மற்றும் மக்களுக்கு நன்மை தரும் 12 அம்சக் கோரிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் எட்டு கோரிக்கைகள் செயற்திட்டத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளன. இரு தரப்பின ருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு புரிந்துணர்வுடன் சம்பந்தப்பட்ட ஆவணத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் நடைமுறையில் இருந்த காலத்தில் பதுளை மாவட்டத்தில் தனித்து போட்டியிட சுதந்திர முன்னணி தீர்மானித்த போதிலும் மொனராகலை மாவட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தை விரைவில் மேற்கொள்ள வுள்ளோம் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்
Post a Comment