BREAKING NEWS

* மாகாண மட்ட தேர்தலை மட்டுமல்ல எந்த தேசிய மட்ட தேர்தலையும் வெல்வோம்

ஐ.தே.கவின் சவாலை ஏற்கத் தயார் முன்கூட்டியே

தேசிய மட்ட தேர்தல் நடத்த அரசு தயங்கவில்லை
* அரசியல் வங்குரோத்தை மறைக்க ஐ.தே.க மாணவர்களை கோவணமாவ பயன்படுத்த முயற்சி

 
தேசிய மட்ட தேர்தலொன்றை நடத்துமாறு ஐ.தே.க. விடுக்கும் சவாலை ஏற்க அரசாங்கம் தயாராக உள்ளது. உரிய காலத்துக்கு முன்னர் பிரதான  தேர்தலொன்றை நடத்த நாம் பயப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல் மட்டுமன்றி எந்த தேர்தல் நடத்தினாலும் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

அரசியல் வங்குரோத்து அடைந்துள்ள எதிர்க்கட்சி தமது அரசியல் நிர்வாணத்தை மறைக்க மாணவர்களை கோவணமாக பயன்படுத்த முயல்வதாக குற்றஞ்சாட்டிய அவர்கள் உயர்தர பொருளியல் பாட வினாத்தாள் விவகாரத்தை அரசியலாக்கி மாணவர்களின் கல்வியை நாசப்படுத்த வேண்டாமென கோரிக்கை விடுத்தனர். ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
இங்கு அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும,
நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பொருளியல் பாட வினாத்தாளில் குளறுபடி இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கல்வி அமைச்சரும், பரீட்சை ஆணையாளரும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். வங்குரோத்து அரசியல்வாதிகள் இந்த விடயத்தை அரசியலாக்க கேவலமான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பரீட்சை முறை தொடர்பில் மாணவர் மத்தியில் சந்தேகம் ஏற்படுத்த முயல வேண்டாம் என அரசியல் கட்சிகளைக் கோருகிறோம், மாணவர்கள் சந்தேகத்துடனும் பயத்துடனும் பரீட்சை எழுதினால் அவர்களுக்கு அநீதியே ஏற்படும். அரசியல் இலாபம் பெறுவதற்காக பூதாகரமாக்கப்பட்ட இந்த விவகாரத்தில் சிக்காது பரீட்சை எழுதுமாறு மாணவர்களை கோருகிறோம். இந்த பிரச்சினை தொடர்பான விவாதத்தை பரீட்சை முடிந்த பின் தொடருமாறு கட்சிகளை கோருகிறோம் என்றார்.
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறியதாவது, வரட்சியை வைத்து அரசியல் இலாபம் பெற எதிர்க்கட்சி முயல்கிறது. ஆனால் கடந்த வடமத்திய மாகாண தேர்தலின் போதும் வரட்சி நிலை காணப்பட்டது. ஆனால், மக்கள் ஐ.ம.சு.மு.வுக்கே வாக்களித்தனர். மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக இல்லை.
தேசிய மட்ட தேர்தலொன்றை நடத்துமாறு ஐ.தே.க. செயலாளர் கோரியுள்ளார். ஆனால், இறுதியாக நடந்த தென், மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில் நாம் எதிர்க்கட்சியை விட 19 இலட்சம் மேலதிக வாக்குகளை பெற்றோம்.  நாம் எந்தத் தேர்தலுக்கும் பயப்படவில்லை ஐ.தே.க. சவாலை நாம் ஏற்கத் தயாராக உள்ளோம். முன் கூட்டடி தேசிய மட்ட தேர்தலொன்றை நடத்த நாம் தயார்.
அரசியல் வங்குரோத்து அடைந்துள்ள எதிர்க்கட்சி சேறு பூசும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் முடிந்த பின் ஐ.தே.க. முதலமைச்சர் வேட்பாளர் ஐ.ம.சு.மு.வுக்கு வரலாம் என்றார்.
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியதாவது,
அடுத்த பிரதான தேர்தலொன்று நடைபெறும் எதிர்பார்ப்பில் ஐ.தே.க. ஊவாவில் தனது முழுப் பலத்தையும் பிரயோகித்து வருகிறது. தூங்கிக் கிடக்கும் கட்சியை தட்டி எழுப்ப ஹரீன் பெர்னாண்டோ தேர்தலில் குதித்திருக்கிறார். பல நிபந்தனைகளுடன் எம்.பி. பதவியை இராஜினாமா செய்து விட்டு வந்த போதும் அவருக்கு முதன்மை வேட்பாளர் பதவி கூட வழங்கப்படவில்லை.
காரியாலயமொன்றை அமைக்கக்கூட அவர் முதன்மை வேட்பாளரான சமரவீரவை தான் நாடவேண்டும் ஐ.தே.க. அவரை நட்டாற்றில் விட்டுள்ளது. தேர்தல் செயற்பாடுகளில் இருந்து அவர் ஒதுங்கியுள்ளார். அவருக்கு ஐ.தே.க. எதுவித உதவியும் வழங்கவில்லை. வாக்குறுதிப் படி செயற்படாது ஐ.தே.க. தலைமை வேறு நபர்களுக்கு உதவுகிறது. ஊவா மாகாணத்திலும் ஐ.ம.சு.மு. 2/3 பெரும்பான்மை பெறும். பிரதமர் வேட்பாளராக இட்டு ஹரீனை ஐ.தே.க. அநாதரவாக்கியுள்ளது என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar