அரசின் முடிவில் மாற்றமே இல்லை
ஜனாதிபதியின் உறுதியான கொள்கையினாலேயே மக்கள் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு
இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வருவதாகக் கூறும் நவிபிள்ளையின் குழுவுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற அரசின்
நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்தார்.
இவ்வாறானதொரு குழு அமைக்கப்படப் போவதாக அறிவிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அவர்களை இல ங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்ற அரசின் நிலைப்பாட்டிலும் ஜனாதிபதியின் முடிவிலும் மாற்றங்கள் இல்லை.
இதன் காரணமாகவே மக்கள் ஜனாதிபதியுடனும் இந்த அரசாங்கத்து டனும் உள்ளனர் என ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
ஸ்ரீல.சு.கவின் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று ஸ்ரீல.சு.க. தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் போர்க்குற்ற விசாரணை களை மேற்கொள்வதற்காக வரும் ஐ.நா. குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் கோரியுள்ளார்.
இந்த நிலையில் அந்தக் குழுவினருக்கு இலங்கை வர அனுமதி வழங்கப் போவதில்லை என அரசு தெரிவித்துள்ளது.
அனுமதி மறுக்கப்பட்டாலும் விசாரணைகளை நடத்தியே தீருவோம் என நவிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என அந்த செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
ஐ.தே.க.வுக்கோ அல்லது வேறு கட்சிகளுக்கோ தங்களது நிலைப்பாட்டில் தம்மை தக்கவைத்துக் கொள்ள முடியாதுள்ளன. எனினும் மக்களுக்காக ஜனாதிபதி அவர்களும் அரசும் எடுத்துள்ள நிலைப்பாட்டில் மாற்றங்கள் செய்யாததாலேயே மக்கள் அரசுடனும் ஜனாதிபதியுடனும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்திலுள்ள சுமார் ஒரு இலட்சத்து 28,000 தமிழ் வாக்காளர்களும் இம்முறை அரசுக்கே முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அரசின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களையும் திகாம்பரம் எம்.பியின் தேசிய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு வேட்பாளரும். மலையக மக்கள் முன்னணி சார்பில் ஒரு வேட்பாளரும் ஐ,ம.சு. முன்னணி சார்பில் ஒருவருமாக 6 பேர் களத்தில் இறங்கியுள்ளனர். பெருந்தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஊவாவில் இன்னமும் தேர்தல் சூடுபிடிக்கவில்லை என்று கூறிய அமைச்சர் அரசின் வளங்களை அரச தரப்பு வேட்பாளர்கள் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால் எதிர்க் கட்சிகளே அரச வளங்களை பயன்படுத்துவதை அங்கு காண முடிகிறது என்றார்.
புதிதாக கார்பர்ட் பண்ணப்பட்ட அழகான வீதிகளில் எதிர்க் கட்சிகள்தான் ஒவ்வொரு 150 மீற்றரிலும் தங்களது தேர்தல் சின்னத்துடன் பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும் பதுளை, மொனராகலை மாவட்டங்களில் அதிகப்படியான உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டும் என்றும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ஜோன் செனவிரட்ண தெரிவித்தார்.
ஸ்ரீல. சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எரிக் வீரவர்தனாவும் இதில் கலந்து கொண்டார்.
Post a Comment