BREAKING NEWS

ஹஜ் கோட்டாவை மாகாண ரீதியில் வழங்க வேண்டும் - உலமா கட்சி

அமைச்சர் பௌசியால் பாதிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள் பொதுபலசேனாவை சந்தித்தமையை உலமா கட்சி வன்மையாக கண்டித்தருப்பதுடன் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது ஹஜ் கோட்டாவை மாகாண ரீதியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


இது சம்பந்தமாக ஊடகவியாலர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி இவற்றை விளக்கினார். அவர் மேலும் தொரிவித்ததாவது,

ஹஜ் விவகாரத்தில் பாரிய ஊழல்கள் நடைபெறுவதாக பல காலங்களாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இதற்கு அடிப்படை காரணம் முஸ்லிம் கலாச்சாரத்துக்கென தனியான அமைச்சு இல்லாமையாகும். ஐ தே க ஆட்சிக்காலத்தில் இருந்த இந்த அமைச்சு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தது முதல் இல்லாமலாக்கப்பட்டது. அத்துடன் முஸ்லிம் சமூகமும் இஸ்லாம் பற்றித்தெரியாத, சமூகத்தை வைத்து வியாபாரம் செய்வோரையே தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதால் இத்தகைய மத விவகாரங்களும் வியாபார மயப்படுத்தப்பட்டு விட்டதன் எதிரொலியே இத்தகைய பிரச்சினைகளாகும்.

முஸ்லிம் விவகாரத்துக்கு அமைச்சு உருவாக்கப்பட்டால் யாரை அதன் அமைச்சராக நியமிப்பது என கேள்வி எழுப்பப்படுகிறது. இதன் மூலம் இஸ்லாம் தெரிந்த ஒரு முஸ்லிமும் நாடாளுமன்றத்தில் இல்லை என்பதே தெளிவாகிறது. இதனால்த்தான் உலமாக்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியத்தேவை உள்ளதை உலமா கட்சி தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகிறது.

ஹஜ் கோட்டா இழுபறியில் முகவர்களுக்கு மத்தியில் இதனை விநியோகிப்பதை தவிர்த்து முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கேற்ப மாகாண ரீதியில் அந்தந்த மாகாண முகவர்களுக்கு விகிதாசார முறைப்படி வழங்க வேண்டும் என்பதை கடந்த ஏழு வருடங்காளக நாம் சொல்லி வருகிறோம். இதனை செய்யாமல் சில முகவர்களை  மட்டும் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகள் காரணமாகவே இப்பிரச்சினை முற்றியுள்ளது. ஆனாலும் இது விடயத்தை பேச்சுவார்த்ததையினூடாக அல்லது நீதி மன்றத்தினூடாக தீர்ப்பதை விடுத்து பொதுபல செனாவிடம் கொண்டு சென்றது வரலாற்று துரோகமாகும். இது தற்செயலான சந்திப்பு என்பது சிறு பிள்ளைத்தனமான கருத்தாகும். அவர்கள் இது பற்றிக் கேட்டால் இது எமது சமூகப்பிரச்சினை என்பதால் நாமே பார்த்துக்கொள்கிறோம் என பதில் தந்திருக்க முடியும்.

அதே போல் இந்த அரசாங்கத்தில் மூன்று முஸ்லிம் கட்சிகள் அமைச்சர்கள் தலைமைகளில் அங்கம் வகிக்கின்றன. அவர்கள் கூட இப்பிரச்சினை விடயத்தில் ஒன்று சேர்ந்து தீர்வு முயற்சிக்காமலிருப்பதன் மூலம் அந்தக்கட்சிகளின் கையாலாகா தனம் தெரிகிறது. ஊவா மாகாண தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்க்கட்சிகளுக்கு செல்லாமல் இருக்க ஒற்றுமைப்பட்டவர்கள் ஹஜ் முகவர்கள் பொதுபல சேனாவிடம் செல்லுமளவிற்கு இடமளிக்காமல் இது விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட முடியாதா என்று கேட்கிறோம்.

ஆகவே கிழக்கிலிருந்தே அதிகம் ஹாஜிகள் செல்வதால் ஹஜ் கோட்டாவை மாகாண ரீதியாக பிரித்து வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இப்பிரச்சினையை ஓரளவு தீர்க்க முடியும் என்பதை உலமா கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar