BREAKING NEWS

8வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம்: பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர் நீரில் மூழ்கி பலி


அக்மீமன பகுதியில் 8வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர் கடந்த புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாகவும்,
இவர் தான் உடுத்தியிருந்த உடையொன்றை அடையாளம் காண்பிப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்வதற்காக ஆற்றில் பாய்ந்துள்ளார். இவரை காப்பாற்றுவதற்காக இரண்டு பொலிஸாரும் நீரில் குதித்துள்ளனர்.
எனினும் சந்தேகநபர் உயிரிழந்ததுடன், இரண்டு பொலிஸாரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு எதிரான மோசடிச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் குறிப்பாக பெண் பிள்ளைகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கைவிடுத்தார்.
பாடசாலை சென்று திரும்பும் வழிகள், பாடசாலை வான், மற்றும் வகுப்புக்களுக்குச் செல்லும் இடங்கள் தொடர்பாக பிள்ளைகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், அண்மையில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமியை மீட்பதற்கு உதவிய அல்லது தகவல்களை வழங்கியவர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதுஇவ்விதமிருக்க அத்துருகிரிய பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட குடு லிலித்த என்பவர் 685 இலட்சத்துக்கும் அதிகமான சொத்துக்கள் வைத்திருந்தமை விசாரணைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டி ருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவருக்கு மாளிகாவத்தை, அவிசாவளை உள்ளிட்ட பல இடங்களில் பல லட்சம் பெறுமதியான காணிகள் வீடுகள் காணப்படுவதுடன், 3 வாகனங்களும் அவருடைய பெயரில் காணப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் உள்ளூரில் போதைப் பொருட்களை விநியோகிக்கும் நபர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar