சீன, இலங்கை ஜனாதிபதிகளால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நினைவுப்படிகம் திரைநீக்கம்
அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றருக்கான விலையை 20 ரூபாவாலும், பெற்றோல் விலையை 5 ரூபாவாலும், டீசல் விலையை 3 ரூபாவாலும் குறைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய கட்டமைப்புக்கு நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இணைக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் 19 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதோடு, இரு நாட்டுத் தலைவர்களும் மின் அழுத்தியை இயக்கி நுரைச்சோலை அனல் மின்நிலைய நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்துவைத்தனர்.
இலங்கையின் நாளாந்த மின்தேவையானது 2015 மெகாவோட்ஸாக இருக்கும் நிலையில், 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதன் ஊடாக தேசிய மின்கட்டமைப்பு 3900 மெகாவோட்ஸாக அதிகரிக்கிறது. இதனூடாக நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தொடர்ச்சியாக தடையின்றி மின்சார வசதி அளிப்பது நூறு வீதம் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இன்று முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 21ம் நூற்றாண்டில் பட்டுப்பாதைத் திட்டத்தை உருவாக்கும் சீனாவின் திட்டத்துக்கு இந்த உடன்படிக்கை உதவும் என்றும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், துரித அபிவிருத்தி கண்டுவரும் இலங்கைக்கு சீனா பல்வேறு வகைகளிலும் உதவி வருவதாகவும், அதனடிப்படையிலேயே இங்கு பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படுவதாகவும் கூறினார். 21ம் நூற்றாண்டின் பட்டுப்பாதைத்
திட்டத்துக்கு உதவ இரு நாடுகளுக் குமிடையில் இணக்கம் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் கடல் பாதுகாப்பு, கடல் பொருளாதாரம் என்பவற்றுக்கு இலங்கை பக்கபலமாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
19 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீன ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்குமிடையில் நேற்று 19 ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் முன்னிலையில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தப் பரிமாற்றத்தில் வர்த்தகம், சட்ட ஒத்துழைப்பு, உயர்கல்வி, நெடுஞ்சாலை, துறைமுகம், மின்சக்தி, கலாசாரம், விவசாயம், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகள் அடங்குகின்றன.
குற்றவிவகாரம் தொடர்பான சட்ட ஒத்துழைப்புக் குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கைச்சாத்திட்டார். இலங்கை சீனா சுதந்திர வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தில் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகமவும், மின்சக்தி ஒத்துழைப்புத் தொடர்பான ஒப்பந்தத்தில் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் கைச்சாத்திட்டனர்.
கலாசார ஒத்துழைப்புத் தொடர்பான ஒப்பந்தத்தில் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக் கவும், உயர்கல்வி தொடர்பான ஒப்பந்தத்தில் அமைச்சர் எஸ்.பி.திசாநா யக்கவும், தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தத்தில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், விவசாயம் மற்றும் கால்நடை தொடர்பான ஒப்ப ந்தத்தில் மஹிந்தயாப்பா அபேவர்த்தனவும், சுங்க ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திலும், வெளிச்சுற்றுவட்ட நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்திலும் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவும் கைச்சாத்திட்டனர்.
இதேவேளை, கொழும்புத் துறைமுக நகரம் ஒப்பந்தம் மற்றும் தெற்கு நெடுஞ்சாலை நான்காம் கட்ட ஒப்பந்தம் ஆகியவற்றில் துறைமுக மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளரும், ஹம்பாந்தோட்டை துறைமுக கொள்கலன் பிரிவு விஸ்தரப்புத் தொடர்பான ஒப்பந்தத்தில் துறைமுக அதிகாரசபைத் தலைவரும், மின்சார தொழில்நுட்ப ஒத்துழைப்புத் தொடர்பான ஒப்பந்தத்தில் மின்சாரசபைத் தலைவரும் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தங்களில் சீனத்தரப்பில் வர்த்தக அமைச்சர் காவே ஹ¥கென்ங், வெளிவிவகார அமைச்சர் வுங் யி உள்ளிட்டவர்களும் கைச்சாத்திட்டிருந்தனர்.
சீன உதவியுடன் இங்கு நிர்மாணிக்கப்படவுள்ள கலாசார நிலையத்துக்கான நினைவுப்படிகத்தை இருநாட்டுத் தலைவரும் திரைநீக்கம் செய்துவைத்ததுடன் இரு நாட்டுத் தலைவர்களும் தத்தமது நாட்டுக்குரிய வரலாற்று சிறப்புமிக்க நூல்களைப் பரிமாறிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரவு 7.20 மணிக்கு நுரைச்சோலை அனல்மின் நிலையத்துக்கான நினைவுப் படிகத்தை இருவரும் இணைந்து திரைநீக்கம் செய்துவைத்தனர்.
Post a Comment