BREAKING NEWS

ஒருவர் ஒருமுறையாவது மக்கா செல்ல வழிவகுக்கப்படும்

வசதியற்றோரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற விசேட பொறிமுறை


முஸ்லிம்கள் மக்கா யாத்திரையை மேற்கொள்வதற்கு முறையான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவதுடன் ஒருவர் ஒரு முறையாவது மக்கா செல்ல வழிவகுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

செல்வந்தர்களே பல தடவை மக்கா யாத்திரை செல்வதும் பணமில்லாதோருக்கு அது பகற்கனவாகி வாய்ப்புக்கள் தடுக்கப்படுவதும் தொடர்கிறது. இந்நிலையை மாற்ற அரசாங்கம் திட்டமொன்றை வகுத்துச் செயற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காகச் செயற்படு வோரும் சில மேற்குலக நாடுகளும் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. நாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரத்தைப் பாதுகாத்து சகல சமூகங்களும் ஒன்றிணைந்து ஐக்கியமாக வாழ வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானை அல் ஹிஜ்ரா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூட திறப்பு விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, எம்.எஸ். தெளபீக் எம்.பி., மாகாண அமைச்சர்கள் உதுமாலெவ்வை, விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம ஆகியோர் உட்பட கல்வித்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
முள்ளிப்பொத்தானை பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பகுதி மாணவர்களுக்காக மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடமொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
இதனை முழுமையான பிரயோசனத்திற்குட் படுத்தி உங்கள் பிள்ளைகள் தொழில்நுட்பத்திலும், கணிதம், மொழி போன்ற பாடங்களிலும் தங்களை மென்மேலும் வளர்த்துக்கொள்ள நீங்கள் உதவ வேண்டும். கணிதப் பயிற்சிக் கூடம், விஞ்ஞான தொழில்நுட்பக் கூடம் என 64 கணனிகள் இந்த நிலையத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இத்தகைய வசதிகளை தற்போது எமது அரசாங்கமே இப்பிரதேசத்துக்கு வழங்கி வருகிறது.
கடந்த மூன்று தசாப்த காலங்கள் நீங்கள் சந்தேகத்துடனும் பயத்துடனும் வாழ்ந்த யுகமாகும். எந்த வேளையில் நாம் கொலை செய்யப்படுவோமோ, அல்லது கிராமத்தை விட்டு விட்டு ஓட வேண்டி வருமோ என்று பயந்து பயந்து வாழ்ந்த யுகத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
இன்று அத்தகைய பயம் மக்களுக்குக் கிடையாது. அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய உரிமை இப்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சுதந்திரத்தின் பிரதிபலன்களை நீங்கள் முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை மீள இல்லாதொழிக்க நாம் இடமளிக்க முடியாது. இந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அதன் பிரதிபலன்களை அனுபவிக்கவும் தயாராக வேண்டும்.
கல்வியும், அறிவும் மட்டுமே எம்மிடமிருந்து எவராலும் களவாட முடியாத சொத்து.
பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகின்ற காலம் இது. ஏனைய சமூகங்களைப் போன்று முஸ்லிம் மக்களும் குறிப்பாக முஸ்லிம் பெண்களும் கல்வி கற்கும் காலம் இது. இது குறித்து நாம் பெருமிதமடைகின்றோம்.
கல்வி கற்க வேண்டும் அனைத்து சமூகங்களோடும் ஐக்கியமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். மதம், இனம், குலம் இவை எதுவுமே ஐக்கியமாக ஒன்றிணைந்து வாழ்வதற்குத் தடையாக இருக்க முடியாது.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுபவர்கள் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்கள். சில நாடுகள் எமக்கு அழுத்தங்களைப் பிரயோசிக்கின்றன. மக்களைப் பிரிப்பதே, பிளவுபடுத்துவதே அவர்களது நோக்கமாகவுள்ளது. இதை உணர்ந்து நாம் கைகோர்த்துச் செயற்பட வேண்டியது அவசியம்.
இது உங்கள் தாய் நாடு. நீங்கள் பிறந்ததும் மரணிப்பதும் இங்குதான். நீங்கள் இறந்ததும் உங்களை அடக்கம் செய்வதும் இந்த மண்ணில்தான். இந்த தாய் நாட்டைப் பாதுகாப்பது உங்களதும் எமதும் பொறுப்பாகும்.
பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள் சமய வழிபாடுகளுக்கான யாத்திரைகளில் ஈடுபடுவது போல் முஸ்லிம் மக்களும் மக்காவிற்குச் செல்கின்றனர்.
இதில் முக்கிய விடயம் என்னவெனில் பணம் உள்ளவர்களே எப்போதும் மக்கா செல்கின்றனர். மக்காவுக்கு ஒருமுறை சென்றால் போதுமானது என கூறப்பட்டுள்ளது. எனினும் சிலர் ஏனையவர்களுக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்காமல் தாமே பல முறை செல்கின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். வசதியற்றோரையும் ஒரு தடவையாவது மக்காவுக்கான யாத்திரையை மேற்கொள்ள வழிசமைப்பதே எமது நோக்கம்.
அதற்கான வேலைத் திட்டமொன்றை நாம் நடைமுறைப் படுத்தவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெற்றோரே உங்கள் பிள்ளைகளை கல்வி கற்க உந்துதல் அளியுங்கள். கல்வியை விடுத்து ஏனைய விடயங்களில் அவர்களை உட்படுத்த வேண்டாம்.
பாடசாலையிலிருந்து விலக்கி வேறு தொழில்களில் ஈடுபடுத்தவோ அல்லது அவர்களுக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைப்பதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பெண்களும் சுதந்திரமாகக் கல்வி கற்கக் கூடிய சுதந்திரத்தைக் கொண்ட ஒரே நாடு இலங்கையே. ஏனைய நாடுகளில் அதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதனைக் கருத்திற் கொண்டு பிள்ளைகளைக் கல்வி கற்க விடுங்கள். அவர்கள் நாட்டை மட்டுமன்றி உலகையும் வெல்லக்கூடிய வர்களாக உருவாக்குங்கள்.
அவர்களால் அதனை மேற்கொள்ள முடியும். அவர்களுக்கு அதற்கான பலம் உண்டு என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar