BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் ஆப்பு இழுத்த குரங்கு போல்

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் தடுமாறிக்கொண்டிருப்பதன் மூலம் அந்தக்கட்சி பாரிய அச்சத்தில் இருக்கிறது என்பது தெரிகிறது என
உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளதாக சொல்லும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பெரும்பான்மை விருப்பத்தை ஏற்பதா அல்லது தங்களின் சுயநலன்களை கருத்திற்கொள்வதா என்ற தடுமாற்றத்தில் உள்ளது.

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக களமிறங்கி மிக மோசமாக மூக்குடைபட்ட முஸ்லிம் காங்கிரஸ் அதற்குப்பின் தமது பதவிகளுக்காக தமக்கு வாக்களித்த மக்களின் அபிலாசைகளை பெறாமல் தம் இஷ்டப்படி அரசிடம் சரணடைந்ததை கண்டோம்.

இப்போதுள்ள சூழ் நிலை அக்கட்சியை பெரும் இக்கட்டில் மாட்டியுள்ளது. அக்கட்சியினர் சொல்வது போல் ஆப்பு இழுத்த குரங்கு போல் இன்று முழித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தலில் மைத்திரியை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து அவர் தோல்வியுற்றால் அக்கட்சியின் தவைர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாது போய் விடும் என்ற அச்சத்தில் உள்ளனர். அதே போல் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து அவர் வெற்றி பெற்ற நிலையில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், மூதூர், கல்குடா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளில் மைத்ரி வென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம்கள் நிராகரித்து விட்டனர் என்பதாகி விடுவதுடன் அவர்கள் செல்லாக்காசாகி விட்டனர் என்பதும் உறுதியாகி விடும்.

ஆக இதுவரை காலமும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்த முஸ்லிம் காங்கிரஸ் இப்போது நன்றாகவே மாட்டிக்கொண்டு பரிதாபமாக முழிப்பது அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடமாகும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன அக்கட்சி சிந்தித்து செயற்பட்டு வந்திருந்தால் இத்தகைய சோதனை வந்திருக்காது. ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரித்து அவர் வென்று ஜனாதிபதியானால் மட்டுமே அக்கட்சி பிழைத்துக்கொள்ளும். ஆனால் அதற்கான சூழ் நிலை உள்ளதாக கள நிலவரம் இல்லை. இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே அக்கட்சி சேதாரம் இல்லாத அறுவடையை பெற முடியும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar