BREAKING NEWS

பொய் வாக்குறுதிகளை வழங்கி ஐ.தே.கவை திட்டமிட்டு ஏமாற்றினார் மைத்திரி



ஒவ்வொரு கட்சிகளுடனும் பொதுவேட்பாளர் செய்துகொண்டுள்ள இரகசிய ஒப்பந்தங்களினால் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், சந்திரிகா மைத்திரிபால கூட்டினால் ஐ.தே.க மேலும் நலிவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து
அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட முன்னாள் ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கலந்துகொண்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பத்தரமுல்ல அப்பேகம மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, மைத்திரிபால சிறிசேன பொய்யான உறுதிமொழி களை வழங்கி ஐ.தே.கவை ஏமாற்றியுள்ளதாகவும், கட்சி தொடர்பான முடிவுகளை கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க அன்றி வேறொரு குழுவே எடுப்பதாகவும் குறிப்பிட்டார். தான் பெருந்தொகை பணம் எடுத்துக்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த அவர், தனது மனசாட்சியை பணத்திற்கு அடிமைப்படுத்த முடியாது எனவும் ஐ.தே.க செயலாளர் பதவியை ராஜினாமா செய்த போதும் கட்சியை விட்டும் ஒதுங்கவில்லையெனவும் தெரிவித்தார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, சுசில் பிரேமஜயந்த், அநுர பிரிய தர்ஷனயாப்பா, திஸ்ஸ வித்தாரன, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன மற்றும் ஜயந்த கட்டகொட எம்.பி அடங்கலான முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க,
ஐ.தே.கவுக்குள் இருக்கும் குழு மோதல்களால் கட்சி தனது நோக்கத்திலிருந்து விலகி வேறு திசைநோக்கிப் பயணிக்கிறது.
மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவை ஏற்க முடியாது. வேட்புமனு தாக்கலுக்கு முன் நிறைவேற்றுவதாகத் தெரிவித்த மூன்று அம்சங்களும் நிறைவேற்றப்படவில்லை.
நான் கட்சி செயலாளராக இருந்தபோதும் மைத்திரியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் குறித்து எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
ஹெல உறுமய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொன்சேகா ஆகியோருடன் தனித்தனியாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொரு தரப்புக்கும் வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன. இது மிகப் பயங்கரமான நிலையையே நாட்டில் ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தங்களினால் ஐ.தே.க ஆதரவாளர்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதானால் கட்சியின் தனித்துவம் பேணப்பட வேண்டும். ஆனால் பொது வேட்பாளரின் பதவியோடு ஐ.தே.க மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றிபெறும் கூட்டணி அல்ல. ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நிறுத்துவதற்கு நான் கடும் பிரயத்தனம் எடுத்தேன். அவர் பேட்டியிடாத பட்சத்தில் சஜித் பிரேமதாசவை நிறுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் திடீரென ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தும் முடிவு மாற்றப்பட்டு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலவாரங்கள் சிந்தித்து மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முடிவை எடுத்தேன்.
பொது வேட்பாளர் ஒவ்வொரு தரப்புடனும் செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தங்களில் என்ன இருக்கின்றது என்று தெரியாது. டயஸ்போராவுடன் தொடர்புள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஹெல உறுமய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இனவாத குழுக்களுடன் இணைந்து நாட்டில் எப்படி அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்.
மைத்திரிபால சிறிசேனவை விட நான் திஸ்ஸ அத்தநாயக்க சிறந்த செயலாளர் என்று என்னிடம் கூறிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேனவை பற்றி என்னிடம் விமர்சித்துப் பேசியிருந்தார். பொது எதிர்த்தரப்புக்கு ஒழுங்கான நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஐ.தே.க தேர்தல் இயந்திரம் செயற்படாமல் எதிர்தரப்பு பிரசாரம் பயனளிக்காது. இந்த நாட்டுக்கு மைத்திரி ஆட்சியன்றி ஜனநாயக ஆட்சியே தேவை. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரு வெற்றிபெறுவது உறுதி.
எனக்கு வாக்குப் பலம் கிடையாது என்று விமர்சிக்கின்றனர். 27 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் நான் 6 தடவைகள் தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றேன். 2010ஆம் ஆண்டு தேர்தலில் ரவூப் ஹக்கீமும், மனோ கணேசனும் கண்டியில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே எனக்கு தேசியப் பட்டியலில் இடமொதுக்கப்பட்டது. நான் இறுதிவரை கட்சிக் கொள்கையுடன் இருந்து போராடியுள்ளேன். ஆனால் கட்சி மாறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar