ஐ.ம.சு.முவின் ஆட்சி அதிகாரத்திலுருந்த ஊவா மாகாண சபையை ஐ. தே. க. நேற்று கைப்பற்றியது. பெரும்பான்மையை நிரூபித்ததால் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஹரின் பெர்னாண்டோ நேற்று ஆளுநர் நந்தாமெத்தியு முன்னிலையில் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
|
|
இதற்கமைய, நேற்று (14) பிற்பகல் 1.14 மணி சுபவேளையில் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னான்டோ, மாகாண முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனுரவிதான கமகே, சபையின் முன்னாள் தலைவர் ஏ.எம். புத்ததாச, சபையில் ஆளும்கட்சி உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், கித்சிரி செனரத் அத்தநாயக்க, ஹரேந்திர தர்மதாச பண்டா உள்ளிட்ட, மாகாண சபையின் ஐ.தே.க விலிருந்து ஆளும்கட்சிக்கு தாவிய சமிந்த ஜானக்க திஸ்ஸ குட்டியாராச்சி மீளவும் ஐ.தே.கவுடன் இணைந்து, ஹரின் பெர்னான்டோவை முதலமைச்சராக்குவதற்கு ஆதரவினை வழங்கினர். ஊவா மாகாண சபையில் மொத்தமாக 34 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 18 பேர் ஐ. தே.க. வை சார்ந்துள்ளனர். தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 14 பேர் மட்டுமே உள்ளனர்.
இருவர் மக்கள் விடுதலை முன்னணியை சார்ந்தவர்களாவர். இவ்விருவருடன் 20 பேர் மாகாண முதலமைச்சராக ஹரின் பெர்னாந்துவை தெரிவு செய்ய ஆதரவு வழங்கியுள்ளனர். இதேவேளை முன்னாள் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமாச் செய்வதோடு, மாகாண சபையிலிருந்தும் வெளியேறி விடுவா ரென்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாகாண முதலமைச்சராக ஹரின் பெர்னாந்து சத்தியப் பிரமாணம் செய்ததையடுத்து, ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
Post a Comment