தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் கொழும்பு - தூத்துக்குடிக்குமிடையில் நேரடி கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின்போது இது குறித்து
ஆராயப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பு- கண்டிக்கிடையில் இரட்டை ரயில் பாதை அமைத்தல், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 4 ஆயிரம் தோட்ட வீடுகளை நிர்மா ணித்தல் என்பன குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்துவருதல், வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேம்படுத்தல், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பன தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்திய விஜயம் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவைக்கு விளக்கியுள்ளார்.
இந்த விஜயத்தின்போது புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு புதிய அரசாங்கத்தின் கீழ் இரு நாட்டு உறவுகள் மேலும் பலமடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர் தான் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளார். 1987 ஆம் ஆண்டின் பின்னர் இந்திய நாட்டு தலைவரொருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைய உள்ளது.
Post a Comment