கடந்த ஆட்சியில் இருந்து விலகுவதற்காக ஜனாதிபதி தேர்தலின் போது கரையோர மாவட்ட கோரிக்கையை முன்வைத்த முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்துடன் இணையும் போது கரையோர மாவட்டத்துக்கான எந்த வித எழுத்து மூல உத்தரவாதத்தையும் பெறாமல் அமைச்சுப்பதவிகளை மட்டும் பெற்றுக்கொண்டமை
கவலை தரும் விடயம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி குறிப்பிட்டார்.
கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற உயர் சபை கூட்டத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறியதாவது,
கடந்த காலங்களிலெல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையும் போது முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் எந்த வித எழுத்து மூல உத்தரவாதமும் பெறாமல் தமது சொந்த பதவிகளை மட்டுமே பெறுவதையும் பின்னர் அரசுடன் முரண்படும் சந்தர்ப்பம் வந்தால் தமது உரிமை கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என புலம்புவதையும் கண்டு வந்துள்ளோம். இதில் ஒரு கட்டமாக கல்முனை கரையோர மாவட்டம் பெறும் விடயத்தில் எழுத்து மூல ஒப்பந்தம் செய்யாமல் 2010ல் மஹிந்த அரசுக்கு மாறிய முஸ்லிம் காங்கிரஸ் தமக்கான பதவிகளை மட்டுமே பெற்று அந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்தது.
முஸ்லிம்களுக்கெதிரான பாரிய அநியாயங்கள், பேருவல கலவரம் போன்றவை நடந்த சந்தர்ப்பத்திலும் கூட அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் பதவிகளில் ஒட்டியிருந்து வேடிக்கை பார்த்தவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கரையோர மாவட்டம் என்ற பூதத்தை ஒரு சாட்டாக முன்வைத்து முஸ்லிம்கள் பற்றிய இனவாதத்தை தமிழ். சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து அரசை விட்டு வெளியேறினர்.
மீண்டும் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் இனவாதத்தை தூண்டி அரசியல் குளிர்காயும் நோக்குடனும் மைத்திரிபால சிறிசேனாவின் நல்லாட்சியை குழப்புவதற்காகவுமே இவர்கள் கரயோர மாவட்ட கோரிக்கையை இந்த ஆட்சியில் முன்வைக்காமல் தற்போதைக்கு அமைச்சுப்பதவிகள் கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளதாக தெரிகிறது.
முஸ்லிம் கட்சிகள் அரசாங்கங்களுடன் இணையும் போது சமூகத்தின் தேவைகள் முன்வைக்கப்பட வேண்டும் அல்லது இணைந்தபின் அவற்றை பெற முயற்சிக்க வேண்டும். தவிர தேர்தல் ஒன்று வரும் போது உரிமைகளை ஒரு சாட்டாக வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் மு. காவின் இத்தகைய சமூக அக்கறையற்ற அரசியல் செயல்பாடு முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்தும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதை உலா கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Post a Comment