உமாஓயா திட்டத்தால் சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதால் முழுமையான அறிக்கை கிடைக்கும் வரை திட்டத்தை இடை நிறுத்தவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
உமாஓயா திட்டத்தால் பண்டாரவளைப் பிரதேசத்தில் வீடுகள்
வெடித்தல் நிலம் தாழிறங்கல் கிணறுகளில் நீர் வற்றல் போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இத்திட்டம் குறித்த சுற்றுச்சூழல் அறிக்கை கிடைக்கும் வரை உமாஓயா திட்டத்தை இடைநிறுத்த ஜனாதிபதி பிரதமர் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோரிடம் மகஜரொன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தொடர்ந்து தமதுரையில், உமாஓயா வேலைத்திட்டத்தினால் பண்டாரவளைப் பகுதியின் பல்வேறு இடங்களிலும் நீர் ஊற்றுக்கள் மற்றும் கிணறுகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் பண்டாரவளை பிரதேச மக்கள் நீர் தட்டுப்பாட்டினால் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் குளிர் பிரதேசமான பண்டாரவளை பிரதேசம் நீரற்ற பாலைவனமாக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
உமாஓயா வேலைத்திட்டத்தின் ஊடாக சுரங்க வழியாக மொனராகலை, அம்பாந்தோட்டைப் பகுதிக்கு நீர் கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் கூரை ஆகியவற்றில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சுரங்கங்கள் தோண்டப்படுவதினாலேயே, மேற்படி வெடிப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
மீறியபெத்தையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவும், மேற்படி உமாஓயா திட்டத்தினால் ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகமும் தற்போது வலுப்பெற்றுள்ளது. அத்தோடு, பண்டாரவளை அப்புத்தளை போன்ற பல்வேறு இடங்களிலும் மண்சரிவுகள் இடம்பெற்றமையும் மேற்படி திட்டத்தினால் இடம்பெற்றிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அத்துடன் இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஊவா மாகாண சபையிலும் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இத்திட்டத்தினால் இதுவரை 250 கிணறுகளில் நீர் முழுமையாக வற்றியுள்ளது. இருநூறுக்கு மேற்பட்ட வீடுகள், பாடசாலைக் கட்டடங்கள் ஆகியவற்றில் பெரும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் முன்னூறு ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் வனாந்தரமாக மாறியுள்ளன. இந்நிலங்களில் எவ்வித விவசாயமும் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment