BREAKING NEWS

எம்முடன் கல்முனை மாநகர மக்கள் ஒன்றுபட்டால் இறைவனுதவியால் பாரியளவில் சாதிக்க முடியும்

ஒருவர் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டபின் அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் தானாய் ஒதுங்குவது ஜென்டில்மேன் டைப். மாறாக மக்கள் பிரதிநிதியாக இருந்துவிட்டு தேர்தலில் தோல்வியடைவது மிகப்பெரிய அவமானம். ஆனால்  எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை என்பதற்காக ஒருவர் அரசியலில் இருந்து ஒதுங்குவது கோழைத்தனமான செயலாகும்.
அவரது தோல்விகள் வெற்றிப்படிகள் என்பதை உணர்ந்தால் அவர் அறிவுள்ள மனிதர் என்று பொருள்.
கல்முனை முஸ்லிம்கள் தமக்கான தனியொரு கட்சியில் ஒற்றுமைப்படுவதன் மூலம் மட்டுமே மீண்டும் கல்முனையை கிழக்கின் முகவெற்றிலையாக மாற்ற முடியும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இன்று கல்முனை பட்டினம் என்பது சோபை இழந்து காணப்படுகிறது. மிகவும் பின்தங்கியிருந்த பல கிராமங்கள் அபிவிருத்தி பெறும் போது கிழக்கு மாகாணத்தின் முதன்மை பிரசித்தி பெற்ற பிரதேசமான கல்முனை இன்று பின்தங்கியுள்ளமைக்கான காரணம் அரசியலில் நமது பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சுயநல கட்சிகளின்  வாலாக இருப்பதுதான்.

ஒரு காலத்தில் முஸ்லிம் அரசியலில் தலைநகரமாக கல்முனையே விளங்கியது. இதற்கு காரணம் இப்பிரதேச மக்கள் பொருளாதாரத்திலும், கல்வியிலும், சமூகத்துக்காக தியாகம் செய்வதிலும் முன்னிலை வகித்தார்கள். அதன் பின் முஸ்லிம் காங்கிரஸ் உருவான பின் அதன் தலைவர் அஷ்ரப் காலத்தில் அக்கட்சியை வளர்த்தெடுத்த ஊர் என்ற பெருமையை மட்டும் கொண்டிருந்தது. அதன் பின் 2000ம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில்  முஸ்லிம் காங்கிரசினால் கல்முனை பெரிதாக ஒன்றையும் பெறவில்லை. இத்தனைக்கும் அக்கட்சியின் கோட்டை கல்முனை என கூறப்படுவதுடன் கல்முனைக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் இருப்பதுடன் முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியில் மாநகர சபையும் உள்ளது.

அந்தக்கட்சி ஒரு சாதாரண கட்சி என்றால் நாம் மன்னித்து விடலாம். ஆனால் பல அமைச்சர்களையும், பல அரச பதவியில் உள்ளோரையும் கொண்ட கட்சியாக இருந்தும் கல்முனை புறக்கணிக்கப்பட்டமைக்கு காரணம் கல்முனை மக்கள் அந்தக்கட்சியின் வால்களாக இருப்பதும் கல்முனை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து அவர்கள் கழுத்தை அறுக்கும் தலைமையும்தான். இந்த நிலையை மாற்ற வேண்டுமாயின் கல்முனை மக்கள் கல்முனைத்தலையை கொண்ட எமது கட்சியை பலப்படுத்த வேண்டும் அல்லது கல்மனையை தளமாகக்கொண்ட கட்சி ஒன்றை நடாத்தும்  முயற்சியில் எம்மோடு இணைய வேண்டும். பலரும் எமது இக்கருத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என சிந்திப்பதில் காலம் கடத்துகிறார்களே தவிர ஏற்கனவே நாம் ஒரு கட்சியை ஆரம்பித்து பூனைக்கு மணி கட்டி விட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இன்னமும் கல்முனை மக்களுக்கு வந்ததாக தெரியவில்லை.

அரசியலில் நாம் தனிமனிதர்கள் பின்னால் செல்வதிலோ அல்லது தனி மனிதர்களை மாற்றுவதிலோ எந்த நன்மையையும் அடையப்போவதில்லை என்பதை மேயர்களை மாற்றி கண்டு கொண்டோம். அதே போல் பாராளுமன்ற மாகாண சபை தேர்தல்களிலும் அதே சயநல கட்சியில் ஆட்களை மாற்றுவதால் ஆகப்போவது எதுவுமில்லை. காரணம் அவர்களும் சுயநலத்தை மட்டுமே கருத்திற்கொண்ட கட்சிகளின் வால்களாய் இருந்து கொண்டு தம்மால் எதவும் முடியவில்லை என ஒப்பாரி வைப்பார்கள். நாமும் கையாலாகாதவர்களாக பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமே மிச்சமாகும். ஆகவேதான் நாம் கட்சியை மாற்ற வேண்டும் என கூறுகிறோம். அதுவும் கல்முனையை தலைமையாக கொண்ட கட்சியை பலப்படுத்துவதன் மூலம் கல்முனை வாக்காளர்களின் ஒற்றுமையால் பலம் பெறும் இக்கட்சியால் மீண்டும் கல்முனையை கிழக்கின் முகவெற்றியலையாக மாற்றுவதுடன் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு அரசியல் வழி காட்டலை செய்ய முடியும்.

இன்று கல்முனையில் பலர் அரசியல் செய்தாலும் மறைந்த தலைவருக்குப்பின் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து அதற்கு தலைமை தாங்கி நடத்திச்செல்லும் கல்முனை மாநகரை சேர்ந்த ஒரேயொருவர் நாம் மட்டுமே என்பதை அனேகர் அறிவர். கல்முனை மக்களின் வாக்கு பலம் இன்றியே இக்கட்சியை ஆட்சியின் பங்காளராக முன்னைய ஆட்சியின் அருகில் கொண்டு போய் வைத்ததோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக்கட்சியை தலைமைக்கட்சியாக கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோழமைக்கட்சியாகவும் ஏற்றுக்கொள்ள வைத்துள்ளோம். இந்த சாதனையை எவராலும் இது வரை செய்ய முடியவில்லை என்ற யதார்த்தத்தை கல்முனை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட எம்முடன் கல்முனை மாநகர மக்கள் ஒன்றுபட்டால் இறைவனுதவியால் பாரியளவில் சாதிக்க முடியும். இது தவிர வேறு மாற்றீடு கல்முனை மக்களுக்கு இருப்பதாக தெரியவில்லை என முபாறக் மௌலவி தெரிவித்தார். 


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar