BREAKING NEWS

நிசாம் காரியப்பரின் காலம் கடந்த ஞானம்

எம். எச் எம் ஹசன். நன்றி :எங்கள் தேசம்.

கடும் சுகயீனத்தால் அவதியுறும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மருந்தை அவர் உயிருடன் இருக்கும் வரை கொடுக்க முடியாமற் போனதற்குப் பிராயசித்தமாக இறந்த பிறகு அதனைப் பருக்க முயல்வது போன்று இந்த நாட்டு முஸ்லிம்கள் முன்னைய அரசாங்கத்தின் இறுதி இரண்டாண்டு காலத்தில் உடல் உள ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் துன்புறுத்தப்படும் போது அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டு சௌகரியமாக இருந்தவர்கள் இன்று அந்த இன்னல்கள் எல்லாம் மறைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும்போது முஸ்லிம் காங்கிரஸின் உதவிச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்குப் போய் முறைப்பாடு செய்துள்ளார்.
முப்பது வருட யுத்தத்தில் சிங்கள, தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம், காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், கிழக்கு மாகாணத்தின் வயற் காணிகள் அபகரிப்பு, முஸ்லிம் புத்தி ஜீவிகள் கொலை என்று அந்தப் பட்டியல் நீளுகின்றது.
இன்று சொகுசாக அரசியல் நடத்துபவர்கள் 2009 இல் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை எப்படி இருந்தார்கள் என்பதை நாடறியும். யுத்தத்தில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் கையைப் பலப்படுத்தவென்று அவரது அரசாங்கத்தின் பங்காளியாகச் சேர்ந்து அமைச்சர், உதவியமைச்சர் பதவிகளை ஏற்று பல சலுகைகளை அனுபவித்தது மட்டுமன்றி, இந்த நாட்டின் ஜனநாயக விதிகளை குழிதோண்டிப் புதைத்தே 18 ஆவது யாப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ராஜபக்ஷவை குற்றம் சாட்டும் அருகதையுள்ளதா என்று பலரும் கேட்கின்றனர்.
முஸ்லிம் சமூகம் இனவாதக் கெடுபிடிகளை சந்திக்கும்போதும் அதனை உள்நாட்டு மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ளும் முடிவோடுதான் செயற்பட்டனர். முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கோ சர்வதேச மனித உரிமை ஸ்தாபனத்திற்கோ, கொண்டு செல்லும் தீர்மானத்துக்கு வரவில்லை. அப்படியிருக்கும் போது இப்போது ஜெனீவாவுக்குப் போய் மஹிந்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்வது அவசியம்தானா என்ற கேள்வி எழுகின்றது.
இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைபீடம் இது பற்றி எதனையும் கூறாத நிலையில், இது அக்கட்சியின் நிலைப்பாடே என்ற முடிவுக்கு வர முடியும். அது அப்படியாயின் முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறது. இப்படியொரு குற்றச்சாட்டை சமூகத்தின் சார்பில் முன்வைப்பதற்கு முன்னர், அதனை சமூகத்தின் புத்திஜீவிகள், உலமா சபை, சூரா கவுன்ஸில் போன்ற அமைப்புக்களுடன் கலந்துரையாடி இருக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட வன்முறைகள், மார்க்க அனுஷ்டானத்தில், இஸ்லாமிய உடையில், பள்ளிவாசலில், ஹலால் உணவில், மார்க்கம் சார் கல்வியில் கை வைத்த விடயம் பாரதூரமானவை. ஆயினும் விடுதலைப் புலிகளின் கெடுபிடிகளால் முஸ்லிம் சமூகம் அனுபவித்த கொடுமைகள் அதனை விட பன்மடங்காகும். அந்த வகையில் யுத்தத்தை வென்று நாட்டை மீட்ட தலைவனுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு செய்தவர்கள் என்ற ஒரு பெயர் முஸ்லிம்களுக்குத் தேவையா? அதன் எதிர்கால விளைவு முஸ்லிம்களின் இருப்புக்கு எந்த வகையில் பாதிப்புச் செலுத்தும்? எதிர்வரும் பொதுத் தேர்தலில் மேடைகளில் ஏறி முஸ்லிம்களிடம் கைதட்டல் வாங்குவதற்கு இதுபோன்ற விடயங்கள் தேவையாக இருக்கலாம்.
ஆனால், இதன் நீண்ட கால விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும். தோற்றவர்கள் மீண்டும் வர மாட்டார்கள் என்பது எவ்வளவு தூரம் நிச்சயம். இந்த விடயத்தை இந்த நாட்டின் பெரும்பான்மை புத்திஜீவிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar