BREAKING NEWS

சட்டத்துக்கு மதிப்பளித்து விசாரணைக்கு முகம் கொடுக்கவே நாடு திரும்பினேன். பசில் ராஜபக்ஷ


சட்டத்துக்கு மதிப்பளிக்கும் குடிமகன் என்ற வகையில் தமக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காகவே தாம் நாடுதிரும்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று மீண்டும் நாடுதிரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கருகில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் பஷில் ராஜபக்ஷ ரிறி 348 விமானத்தில் சாதாரண உடையிலேயே வந்திறந்கினார். அவருடன் அவரது மனைவி புஷ்பா ராஜபக்ஷவும் வந்துள்ளார்.
இவரது வருகை தொடர்பில் கடந்த சில தினங்களாக பெரிதாகப் பேசப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தில் முக்கியமானவர் என்ற வகையில் கடந்த அரசாங்கத்தில் அவருடன் அங்கம் வகித்த எந்த முக்கிய புள்ளிகளும் அவரை வரவேற்க விமான நிலையம் சென்றிருக்கவில்லை.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களும் சில பெளத்த மத குருமாருடன் ஓரிரு மாகாண சபை உறுப்பினர்களே அவரை வரவேற்றுள்ளனர்.
ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக விமான நிலையத்தில் அதி விசேட பிரமுகர்கள் வெளியேறும் வாசல் மூடப்பட்டிருந்த நிலையில் வி.ஐ.பி. வாயிலின் அடியில் நுழைந்தே பஷில் ராஜபக்ஷ வெளியே வந்துள்ளார். மதகுருமார்களால் அவருக்கு அங்கு வைத்து பிரித் நூல் கட்டப்பட்டது.
நேற்றைய தினம் நாடுதிரும்பியதும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து சபை அமர்வுகளில் பங்கேற்பதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் நேற்று பாராளுமன்றம் முற்பகலிலேயே ஒத்திவைக்கப்பட்டதால் அது இடம்பெறவில்லை.
நாடுதிரும்பியுள்ள பசில் ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்த மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அரசியல் வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தாம் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar