BREAKING NEWS

பசில் 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாளை 7 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
கொழும்பு பெரியாஸ்பத்திரியில் இருந்து அம்பியூலன்ஸ் மூலம் கடுவல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பெசில் ராஜபக்ஷ கடுவல நீதவான் தம்மிக கனேபொல முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இவருடன் மேலும் 3 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி யூ. ஆர். த சில்வா நீதிமன்றத்தை கோரினார். சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கும் கோரிக்கையை நீராகரித்த நீதவான், பசில் ராஜபக்ஷ அடங்கலான நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக கடந்த 22 ஆம் திகதி நிதி மோசடி பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பெசில் ராஜபக்ஷ பின்னர் கடுவல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த நிதி மோசடி தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக, திவிநெகும திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஆர். கே. கே. ஏ. ரணவக்க, திணைக்கள முன்னாள் மேலதிக பணிப்பளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்து’ சந்தேக நபர்கள் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர். அமைச்சரவை அனுமதி யுடனே திவிநெகும திணைக்களத்திற்கு நிதி வழங்கப்பட்டதாகவும் இது குறித்து நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி. பி. ஜயசுந்தர எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். அந்த நிதி தாமதமானதால் மேலிடத்து உத்தரவின் பிரகாரம் திவிநெகும பயனாளர்களின் பணத்தினூடாக கொடுப்பனவுகள் செய்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களை ஏழாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் அறிவித்தனர்.
திவிநெகும திணைக்கள பயனாளர்களின் பணத்தை மோசடியாக பயன்படுத்தியது தொடர்பில் பிரதிவாதிகளுக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து ஐ. ம. சு.மு பிரசார பணிகளை முன்னின்று மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனது குடும்பத்துடன் அமெரிக்கா பயணமானார்.
சுமார் 3 மாதங்களின் பின்னர் நாடு திரும்பியபோதே அவர் நிதி மோசடி பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப் பட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar