BREAKING NEWS

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி துறப்பேன்

வில்பத்தில் அத்துமீறிய குடியேற்றம் என்பது முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்


பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வில்பத்து சரணாலயத்திற்குள் அத்துமீறி குடியேற்றுவதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என அமைச்சர் ரிசாட் நேற்று தெரிவித்தார்.
இனவாதிகளால் தன் மீது அநாவசியமாக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தான் தயாரெனவும் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் பிரதிநிதியான என்னை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் முழு சமூகத்தையுமே அலட்சியப்படுத்தியிருப்பதால் இது தொடர்பில் ஆராய்ந்து குற்றமிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். வில்பத்து சரணாலயத்திற்குள் அத்துமீறி குடியேற்றம்  நடத்தப்படுவதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த அரசாங்கம் முதலே முஸ்லிம்கள் மீதான இனவாத செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. முஸ்லிம்களின் ஹலால் உணவு, ஆடை, குர்ஆன், நபிகள் முதல் அனைத்து விடயங்களையும் இனவாதிகள் அலட்சியம் செய்தனர். அளுத்கம பிரச்சினையினால் இரத்த வெள்ளம் ஏற்பட்டது. இதற்காக நாம் எவ்வளவு போராடியும் எமக்கொரு தீர்வு கிடைக்கவில்லை.
ஆனால் இன்று 99 சதவீதமான முஸ்லிம்களின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதியாகியுள்ள மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் உருவாகியுள்ள இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக தீட்டப்பட்ட சதித்திட்டமாகவே நாம் இதனைக் காண்கின்றோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் எந்தவொரு காலத்திலும் நாட்டை காட்டிக்கொடுக்கவோ பிரிக்கவோ முற்பட்டதில்லை. அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென நினைக்கும் இந்த சமூகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது அசாதாரணமானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வடக்கிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ.யினரால் விரட்டப்பட்ட சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்களும் 2009 ஆம் ஆண்டு மோதல் முடிவுக்கு வந்த பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டனர்.
இதேவேளை, குறித்த காணியில் மூன்றடிக்கு மேல் தாவரங்கள் வளரும் பட்சத்தில் அவை சுயமாகவே கானகமாக பிரகடனம் செய்யப்படும் என்ற சுற்றரிக்கைக்கு அமைய மறிச்சுக்கட்டு என்னும் பிரதேசமும் கானகமாக உள்வாங்கப்பட்டது.
எனினும் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் முறையான ஒழுங்கு விதிகளுக்கூடாக சட்டப்படி இடம்பெயர்ந்தவர்களது காணி அவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் தமது வீடுகளை அமைப்பதற்காக பிரதேச செயலாளரின் அனுமதியுடன் காணிகளை சுத்திகரித்துள்ளனர். தவிர எந்த வகையிலும் வில்பத்து சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவில்லையெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar