ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை 126 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஐ.தே.கவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய தேசிய அரசாங்கம் அமைக்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாயின் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்காக குறித்த பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இது தொடர்பான விவாதம் நேற்றுக் காலை 9.30 மணி முதல் 6.30 மணிவரை நடைபெற்றது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஜே.வி.பி ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.
விவாதம் முடிவடைந்ததும் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துமாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார். இதற்கமைய பெயர்குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கரு ஜெயசூரிய தீர்மானித்தார்.
இந்த வாக்கெடுப்பில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 143 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 126 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதேவேளை 63 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் பிரதி அமைச் சர்களாக 45 பேரும் நியமிக்கப்படும் வகையிலேயே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தேவரப்பெரும சத்தியப்பிரமாணம் செய்யாததால் அவரது பெயர் கணக்கிலெடுக்கப்படவில்லை. அதேநேரம் தமிழ்க்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
Post a Comment