இலங்கையின் எட்டாவது பாராளுமன்ற அமர்வு நிறை வடைந்த நிலையில் தென்புல முஸ்லிம்களின் உள்ளக்கிடக் கைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் தேசிய அ ரசியலுக்கான முஸ்லிம்களின் பங்களிப்புகளை மறுதலிக்க முடியாது.
வெலிகம, அகுரஸ்ஸ, போர்வை, துந்துவை போன்ற கிராமங்கள், நகரங்கள் என்பன முஸ்லிம்களை பெரும்பான்மை யாக கொண்ட பிரதேசங்கள். காலி ஹம் பாந்தோட்டை, கொடபிட்டிய போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
சிங்களச் சீமை என்று அழைக்கப்படும் இப்பெரும் நிலப்பகுதியிலுள்ள முஸ்லிம்களின் மத கலாசார அடை யாளங்கள் தனித்துவமாகவே உள்ளன. சிங்கள மொழியின் செல்வாக்கு தென்புல முஸ்லிம்களை தமிழ் பேசுவதிலிருந்து தூரப்படுத்தினாலும் இம்முஸ்லிம்களின் தாய் மொழியும் தமிழாகவே உள்ளது.
அரசியல் அதிகாரங்களைப் பொறுத்த வரை பிரதேச, நகர சபை தலைவர்கள் மேயர்களுக்கு அப்பால் செல்ல முடியா துள்ளது. இவ்வாறு இந்தப் பதவிகளைப் பெறுவதற்கு தேசிய கட்சிகள் இரண்டில் எதிலாவது போட்டியிட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸில் தனித்து போட்டியிட்டு தென் பகுதியிலுள்ள எந்தப் பிரதேச சபையையும் கைப்பற்ற முடியாதுள்ளது.
இதற்கான காரணங்களை கண்டறிய முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் கவனமெடுப்பது சிறந்தது. பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் சிதறி வாழும் தென்புல முஸ்லிம்களுக்கு திரட்சியான மக்களைக் கொண்ட ஓர் ஊரோ, நகரமோ இல்லாதுள்ளமையா இதற்கான பின்னணி அல்லது தனித்துவ கட்சிகளை இம்மக்கள் அங்கீரிக்காமையால் ஏற்பட்ட விளைவா என்பதில் கருத்து முரண்பாடுகள் உள்ளன.
ஆனால் ஒட்டுமொத்த தனி முஸ்லிம்களைக் கொண்ட ஊர்கள் நகரங்கள் ஒன்றிரண்டு இருந்தாலும் அவை முஸ்லிம் தலைமைகளின் செல்வாக்கில் இல்லை.
முஸ்லிம் பிரதேச, கிராம சேவக பிரிவுகளை உள்ளடக்கி தனியான பிரதேச சபை, நகர சபையைக் கோருவது சிங்களவர்களிடையே சந்தேகத்தை தோற்றுவிக்கும் அல்லது பிரிவினை வாதத்தை தூண்டி விடும் என்பதால் முஸ்லிம் தலைமைகளும் இவ்விடயங்களை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம்.
மேலும் தென்புல முஸ்லிம்களும் பிரதேச வாழ்விடங்களின் பாதுகாப்புக் கருதி தனித்துவக் கட்சிகளை அங்கிகரிக்காதிருக்கலாம் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது. இருந்தாலம் இங்குள்ள முஸ்லிம்களின் புவியியல் அமைப்பும் நிலத் தொடர்பற்ற பிரதேசமும் சனத் தொகை பரம்பலுமே தனித்துவ முஸ்லிம் கட்சிகளின் தேவைகளை இல்லாமற் செய்துள்ளன.
இவ்வாறான தென்புல முஸ்லிம்களின் அரசியல் ஆதங்கங்களை முஸ்லிம் தலைமைகள் அனுசரித்துப்போக வேண்டிய தார்மிக பொறுப்பு அக்கட்சி களுக்குண்டு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க வாதியும் கட்சியின் நீண்டகால விசுவாசியுமான அலவி மெளலானாவுக்கு அமைச்சுப் பதவிகள் ஆளுநர் பதவிகள் வழங்கி தென்புல முஸ்லிம்களை கெளரவித்த பெருமை சுதந்திரக் கட்சிக்கு உண்டு.
ஆனால் இதை கட்சி விசுவாசத்துக்கான காணிக்கையாகவே கருத முடியுமாயுள்ளது. வெலிகமையில் பிறந்த முஸ்லிம் என்பதற்காக அலவி மெளலானாவுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதாகக் கொள்ள முடியாது.
அவ்வாறு தென்புல முஸ்லிம்களுக்கான சு.க.வின் வெகுமதியாக இதைக் கருதினாலும் கட்சிக் கட்டுக்கோப்பையும் யாப்பையும் மீறி தான் சார்ந்த சமூகத்துக்கு அலவி மெளனாவால் எதையும் செய்ய முடியாமல் போனதை அவதானிக்க வேண்டியுள்ளது. எனினும் தென்புல முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைக ளுக்கு அங்கீகாரம் வழங்கிய கட்சியாக சுதந்திரக்கட்சி இன்று வரையுள்ளமை மகிழ்ச்சியானதே.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ¤க்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஒன்றை வெலிகமையைச் சேர்ந்த என்.எம். ஸுஹைருக்கு வழங்கப்பட்டமை ஓர் வரலாற்று நிகழ்வே.
மு.கா.வின் தேசியப் பட்டியல் எம்.பியான ஸ¤ஹைர் மு.காவுடன் கொண்டிருந்த பற்று, கல்விப்புலமை போன்ற நோக்கங்களுக்காக இந்த தேசியப் பட்டியல் வழங்கப்பட்டதாக கருத முடிகிறது. எனவே காலி, ஹம்பாந்தோட்டை முஸ்லிம்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த வரலாற்றுப் படிப்பினையை முஸ்லிம் தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. சிங்கள சமூகத்தோடு செறிந்து வாழும் தென்புல முஸ்லிம்களின் வெளிவராத பிரச்சினைகள், வெளியே வந்தும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளில் முஸ்லிம் தலைமைகள் கவனமெடுத்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது.
இப்பிரதேச முஸ்லிம்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினைகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மத, பொருளாதார, நில, வாழ்வாதாரப் பிரச்சினைகள் நிறையவே உள்ளன.
முஸ்லிம் பெண் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல், சிங்கள கலவன் பாடசாலைகளில் (ஆண், பெண்) கல்வி கற்கும் முஸ்லிம் பெண் பிள்ளைகளின் பர்தா உள்ளிட்ட பிரச்சினைகள், காணி உறுதி, அரச தொழில் வாய்ப்பு, வீடமைப்பு, பாதுகாப்பு போன்ற பல சிக்கல்களையும் சவால்களையும் தென்புல முஸ்லிம்கள் எதிர்கொள்கின்றனர்.
இவற்றை ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை காரணம் அங்குள்ள மக்களின் தமிழ் மொழி ஆற்றல் தொடர்பால் உறவுகள் போதாதுள்ளமையே.
போதுமான தகைமை திறமைகள் இருந்தும் முஸ்லிம் மாணவர்களுக்கு பிரத்தியேக பாடசாலைகளில் உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் சில பெரும்பான்மை இன சிங்கள அதிபர்களால் மறுக்கப்படுகின்றதாம். காரணத்தை ஆராய்ந்தால் பெரும்பான்மை பிள்ளைகளின் கல்விக்கான வாய்ப்பு தவறவிடப்படும் என்கின்ற அச்சம், முஸ்லிம் பிள்ளைகளின் பர்தா, ஹிஜாப் ஆடைகளை விரும்பாமை இன்னோரன்ன இதர காரணங்களும் சில சிங்கள அதிபர்களை பொறாமைக்குள்ளாக்குவதாக தெரிய வந்துள்ளது.
இத்தனைக்கும் சிங்களப் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவியர் தங்கள் பர்தா ஹிஜாப் என்பற்றை பாடசாலை வளாகத்துக்குள் அகற்றி விட்டு வகுப்பறையில் கல்வி கற்கும் சம்மத்துடனே சில முன்னணிப் பாடசாலைகளில் சேர்க்கப்படுகின்றனர்.
பெண்கள் பாடசாலை என்பதால் இது அவ்வளவு பிரச்சினைகளாக முஸ்லிம் மாணவியருக்கு தென்படுவதில்லை. ஆனால், சிங்கள கலவன் (ஆண், பெண்) பாடசாலைகளில் முஸ்லிம் மாணவியருக்கு இவ்வாறு செய்வது தர்மக சங்கடமாகவுள்ளது. எனவே இது போன்ற தென்புல முஸ்லிம்களின் பிரச்சினைகளில் முஸ்லிம் தலைமைகள் அக்கறையாக செயற்பட வேண்டும். முஸ்லிம்களுக்கென தனியான பாடசாலைகளை அமைப்பது அல்லது பெளத்த பாடசாலை அதிபர்களிடம் இது குறித்து இங்கிதமாகவும், புரிந்துணர்வுடனும் சமரச முயற்சிகளைச் செய்தல் போன்ற பொறுப்பு முஸ்லிம் தலைமைகளுக்கும் உண்டு. இதுபோன்று பிரதேச செயலகங்களில், தொழில் செய்யும் சிறுவனங்களில் இன்னும் மத விடயங்களிலும் தென்புல முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.
இவை தொடர்பில் தேசிய பெரும்பா ன்மைக் கட்சிகள் குரல் கொடுப்பதை விட தனித்துவ முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் வாய்திறப்பது சிறந்தது. தேசிய அரசியல் மாற்றத்திற்கான தென்புல முஸ்லிம்களின் பங்களிப்பை மறுக்க முடியாது.
கடந்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தலில் ஹம்பாந் தோட்டை, மாத்தறை, காலி மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்கள் வாழும் தேர்தல் தொகுதிகளில் ஐ.தே.க.வே வெற்றியீட்டியது.
எனவே மஹிந்த ஆட்சியில் தென்புல முஸ்லிம்கள் வெறுப்புற்றதன் வெளிப்பாடுகளாகவே இம்முடிவுகளை நோக்க வேண்டும்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து வந்த இஸ்லாமிய வழித்தோன்றலை உடையவர்கள் என்றும் தென்புல முஸ்லிம்கள் நேரடியாக அரபு நாட்டிலிருந்து வந்தவர்களின் தொடர்புகளால் இஸ்லாத்தைப் பின்பற்றினர் என்றும் பொதுவாக நம்பப்படுகிறது. இதனால்தான் தென்பகுதியில் வலிமார்கள், அவ்லியாக்கள், ஷேகுமார்கள், மெளலானாக்களின் (இறைநேசர்கள்) அடைக்கஸ்தலங்கள் அதிகமாக உள்ளதையும் இப்பகுதி மக்கள் இவர்களுக்கென வருடாந்தம் கந்தூரி, மெளலூது வைபவங்களை பெரிதளவில் நடத்துவதையும் இன்றும் காணக்கூடியதாகவுள்ளது.
எனவேதான், தென்பகுதி முஸ்லிம்களின் அரசியல் காணிக்கையாக முஸ்லிம் கட்சிகள் (மு.கா. ம.கா) பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை வழங்க வேண்டியுள்ளது. ஒப்பீட்டளவில் மக்கள் காங்கிரஸைவிட முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு சிறிதளவாவது இங்கு உண்டு. வாக்குகளுக்காக இல்லாவிட்டா லும் தென்புல முஸ்லிம்களின் மத, கலாசார, அரசியல் உணர்வுகளை கெளரவிப்பதற்காக ஓர் பாராளுமன்ற அல்லது மாகாண சபை பிரதிநிதித்துவத்தை வழங்குவதே முஸ்லிம் கட்சிகளின் தலையாய கடமை.
வாக்குகள் இல்லாத பகுதிகளுக்கு எம்.பிக்களை வழங்கி என்ன பலன் என்று சிந்திப்பதை முஸ்லிம் கட்சிகள் நிறுத்த வேண்டும்.
ஏனெனில் கடந்த காலங்களில் கட் சியை வளர்க்கும் நோக்கில் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரங்கள் எல்லாம் (எம்.பி. மாகாண சபை உறுப்பினர், இணைப்பாளர், அமைப்பாளர்) அந்தந்த பிரதேசங்களில் கட்சியை வளர்த்ததாக சான்றுகள் இல்லை. மாறாக தேசியப்பட்டியலில் எம்.பியைப் பெற்றுக்கொண்டு வேறு கட்சிகளுக்கு அவர்கள் தாவிச் சென்ற கசப்பான அனுபவங்கள் 2004, 2010 ஆண்டுகளில் முஸ்லிம்களின் பிரதான கட்சிக்கு ஏற்பட்டதுண்டு. இவற்றையெல் லாம சிந்தித்து முஸ்லிம் தலைமைகள் செயலாற்ற வேண்டும்.
அரசியல் பலம், வாக்குப் பலம் இல்லாது போனாலும் தென் பகுதி முஸ்லிம்கள் இன, மத உணர்வுடன் உள்ளதை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தயுள்ளனர்.
நாட்டில் நடைபெற்ற நீண்டகால யுத்தப் பதிப்புக்கள் இப்பகுதியில் முற்றாக இல்லாது என்பதற்கும் இல்லை.
2009 ஆம் ஆண்டு அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின் போது புலிகளின் தற்கொலைத் தாக்குதல் நடந்ததை எவரும் மறக்கவில்லை. சிங்கள, முஸ்லிம் கலவரங்களின் போதும் தென்புல முஸ்லிம்கள் பாதிப்புற்றுள்ளனர். தற்போது ஆடி ஓய்ந்துள்ள பொதுபலசேனா, சிங்கள ராவய போன்ற பெளத்த கடும்போக்கு அமைப்புக்களின் நெருக்குதல்கள், அச்சுறுத்தல்களையும் இப்பகுதி மக்கள் நிறைய அனுபவித்துள்ளனர்.
இவ்வாறான பின்புலங்கள் தென்புல முஸ்லிம்களை அரசியல் ரீதியாக விழிப்பூட்டவும் சிந்திக்கவும் தூண்டுகின்றன. இன உணர்வுடன் அலைமோதும் தென்புல முஸ்லிம்களை பத்திரமாக கட்டிக்காக்க அரசியல் பிரதிநிதித்துவம் தென்பகுதிக்கு தேவை என்பதை முஸ்லிம் தலைமைகள் உணருமா.
ஏ.ஜீ.எம்.தௌபிக்...
Post a Comment