BREAKING NEWS

ACJU அரசியலை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும் (கடிதம்)

ஹலால் பிரச்சினையின் வடுக்கள் இன்னும் மாறவில்லை, அதற்குள் மீண்டும் அரசியல் விடயங்களில் ஜம்மியத்துல் உலமாவின் தலையீடு ஆரம்பிப்பது ஆரோக்கியமான விடயமாகத் தெரியவில்லை.
முஸ்லிம் அரசியல் வாதிகளை அழைத்து அவர்களுக்கு ஆசி வழங்குவதற்கும், வழி காட்டுவதற்கும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு உரிமையில்லையா? எனக் கேள்வி கேட்பது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவசியமற்ற ஒன்று என்பதில் அனேகர் உன்படுவர். ஏனெனில், மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று ஒத்துழைத்த காரணத்திற்காக நாட்டின் பொருளாதாரத்தில் கை வைக்கும் உரிமை தமக்குண்டு என இறுதி வரை நம்பிய ஜம்மியத்துல் உலமாவின் புண்ணியத்தில் தான் பொது பல சேனா எனும் அமைப்பு பெரும் பூதமாய் வளர்ந்தது என்பது அண்மையில் நிகழ்ந்த வரலாறு.
நம்பி ஏமாந்த அல்லது நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட எனும் அரசியல் சூழ்ச்சியிலிருந்து மீண்டும் தம்மை அன்னியப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டிய ஜம்மியத்துல் உலமா மீண்டும் என்னவோ ஒரு காரணத்திற்காக அரசியலில் தமது ஈடுபாட்டை நியாயப்படுத்த முனைந்திருக்கிறது. அதற்காக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 21 முஸ்லிம் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களுக்கு சில வழிகாட்டல்களை எழுத்து மூலமும் வழங்கியுள்ளது.
ஒரு கோணத்தில் ஜம்மியத்துல் உலமா இதனைக் கடமையாகவே நினைத்துச் செயற்படுத்தியிருப்பினும் கூட அது விளம்பரமின்றி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். ஏனெனில் சமூகத்தின் அரசியல் தலைமைகளுக்கு வழி காட்டும் தமது கடமையைச் செய்திருப்பதனால் அதன் பின்னர் அவர்களது நடத்தைகளுக்கு ஜம்மியத்துல் உலமா பொறுப்பேற்கவோ இல்லை அவர்கள் தவறிழைத்தால் பகிரங்கமாக அதற்கெதிராகக் குரல் கொடுக்கப் போவதோ இல்லை.
எனவே, இவ்வாறான சம்பிரதாய நிகழ்வுகளின் அவசியமும் அவற்றிற்கான விளம்பரமும் குறித்து கேள்விகள் எழுவதும், அது பெரும்பான்மை சமூகத்தில் எவ்வாறு பார்க்கப்படும் என்பதும் துளிர்விட்டு சில மாதங்களேயாகியுள்ள நல்லாட்சியில் நிச்சயமாக அவதானத்துடன் அணுக வேண்டிய விடயங்களாகும்.
மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட யுத்தத்தின் வடுக்களிலிருந்து இலங்கை இன்னும் முழுமையாக மீளவோ அல்லது இனவாத முன்னெடுப்புகள் முழுமையாக முறியடிக்கப்படவோ இல்லை என்பது மாத்திரமன்றி பெரும்பான்மை – சிறுபான்மை உளவியல் நிலைப்பாடு மாறவில்லையென்பதையும் நடைபெற்று முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒரு அணியினரின் நிலைப்பாட்டையும் அதற்கும் பரவலாகக் கிடைத்திருக்கும் ஆதரவைக் கொண்டும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இவ்வாறான ஒரு நிலையில், முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டலில் தான் செயற்படப்போகிறார்கள் என்ற தோற்றப்பாடும் அவர்களின் எதிர்காலத் தவறான செயற்பாடுகளும் ஜம்மியத்துல் உலமாவின் அங்கீகாரத்துடனேயே இடம்பெற்றது எனும் வாதங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலைக்கே சாதாரண வாக்காளர்கள் தள்ளப்படுவார்கள்.
ஹலால் பொறிமுறை இன்று கையாளப்படுவது போல் அந்தப் பிரச்சினை உருவான கால கட்டத்தில் உடனடி மாற்று வழியாகக் கையாளப்படவில்லை. காரணம், அன்றைய அரசியல் தலைமை மீது வைத்திருந்த நம்பிக்கை. பின்னர் அத்தனை பிரச்சினைகளையும் சந்தித்து இன்னோரன்ன மன உளைச்சலின் பின்னரே மாற்றங்கள் காணப்பட்டது. அது போலவே இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மீதான திடீர் நம்பிக்கையும் செயற்பாடுகளும் பின்நாளில் தரக்கூடிய விளைவுகள் குறித்த சிந்தனைத் தெளிவும் அவசியப்படுகிறது.
குறிப்பாக, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் என்று இருக்கைகளில் அமரப் போகிறவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக சமூகக் குற்றச் சாட்டுகள், அதிகார துஷ்பிரயோகம், மக்கள் விரோத செயற்பாடு என அடுக்கிக் கொண்டு செல்லக்கூடிய நீளமான குறைபாடுகள் இருக்கும் நிலையில், அரசியலில் குளிர்காயப் பழகிய இவர்கள் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளில் தம்மை முஸ்லிம்களாகக் காட்டிக்கொண்டாலும் செயற்பாட்டு ரீதியில் எவ்விதமான மாற்றத்தையும் கடந்த காலத்தில் காட்டியதில்லை. அதற்காக எதிர்காலத்தில் காட்டமாட்டார்கள் என தவறாக நினைக்கும் அவசியம் இல்லையாயினும் அவதானத்துடன் கையாளப்பட வேண்டியவர்கள் என்கிற ரீதியிலும் கடந்த கால அரசிய அனுபவத்திலும் பகிரங்கமான உரிமை கோரல் செயற்பாடுகள் தவிர்க்கப்படுவது நல்லதாகிறது.
இலங்கையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழும் தேவையுள்ளவர்கள் என்ற நிலைப்பாட்டின் விளைவை கடந்த மூன்று வருடங்கள் எமக்கு கற்பித்துத் தந்த சம்பவங்களிலிருந்து வரலாற்றுப் பாடத்தைக் கற்றுக்கொள்ளும் பொறுப்பு எம்முடையது. மார்க்க அறிஞர்களின் அரசியல் வரையறை உணரப்பட்டதாகவே நினைக்கப்பட்ட இடைவெளியில் திடீரென ஜம்மியத்துல் உலமாவின் தலையீடு பலரைப் புருவமுயர்த்தச் செய்துள்ளது என்பதே உண்மை.
சமூக விடயங்களில் குறிப்பாக இலங்கை போன்ற நாட்டில் தேவைப்படும் பரந்த சிந்தனையும் முஸ்லிம்களாக நம்மிடம் இருக்கும் மார்க்கப் பற்றும், கொள்கையும் அதேவேளை நம்மிடையே நிலவும் கொள்கைக் கோட்பாடுகள், ஒவ்வாமைக் கொள்கைகள் என பல்வேறு காரணிகள் இன்னும் எமக்கான எச்சரிக்கையை உணர்த்திக்கொண்டேயிருக்கின்றன.
இங்கு பதியப்பட்டிருக்கும் கருத்துக்களை தகுந்த முறையில் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
– இ. ஷான்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar