BREAKING NEWS

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனா? வெல்கமவா?


எதிர்தரப்பு எம்.பிக்களில் பெரும்பான்மையினர் விரும்பும் ஒருவரை எதிர்க் கட்சித் தலைவராக நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவில் தான் தலையிடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.ம.சு.மு. தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐ.ம.சு.மு. தலைவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் ஐ.ம.சு.மு.வாக இணைந்து செயற்படுவது உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக அறிய வருகிறது.
இந்த சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார, மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ் குணவர்தன, தேச விமுக்தி மக்கள் கட்சி தலைவர், இலங்கை மக்கள் கட்சி தலைவர் உட்பட கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது ஐ.தே.க.வுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஐ.ம.சு.மு. தலைவர்கள் பலரும் தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி,
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாம் அவருடனான சந்திப்பில் பங்கேற்றோம். ஐ.தே.க. எதிர்ப்பு
ஆட்சியொன்றை ஸ்தாபிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினோம். கூட்டரசாங்கத்திற்கும் எமது எதிர்ப்பையும் தெரிவித்தோம். ஐ.தே.க.வுடன் இணைவதால்
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐ.ம.சு.மு.வுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தோம்.
எதிர்தரப்பில் சுதந்திரமாக செயற்பட இடமளிக்குமாறும் அவரிடம் கோரினோம் எதிர்தரப்பில் இருக்கும் எம்.பிகளில் பெரும்பான்மையினர் விரும்பும் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க இடமளிக்குமாறும் கேட்டுக்கொண்டோம்.
தனக்கு விருப்பமானவாறு எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்ய தான் தயாராக இல்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்தரப்பில் அமரும் எம்.பிகள் தாம் விரும்பிய ஒருவரை தெரிவு செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இது தவிர ஐ.ம.சு.மு. தேசியப் பட்டியல் விவகாரம், ஐ.ம.சு.மு. செயலாளர் நியமனம் என்பன தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார எம்.பி,
ஐ.தே.க. - ஐ.ம.சு.மு. தேசிய அரசாங்கம் அமைக்கும் ஒப்பந்தத்திற்கு எமது எதிர்ப்பை வெளியிட்டோம். எமக்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிட இருக்கும் உரிமையை ஜனாதிபதி ஏற்றார்.
எதிர்த்தரப்பில் அமரும் எம்.பிகளின் விருப்பத்திற்கமைய எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.
நாட்டை முன்னேற்ற ஐ.தே.க. அல்லாத அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் எனவும் நாம் கோரினோம் என்றார். இதேவேளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மம்பில பங்கேற்கவில்லை என அறிய வருகிறது. தனக்கு இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து ஐ.ம.சு.மு. செயலாளர் இன்று எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவிக்க இருப்பதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்தரப்பில் பெரும்பான்மை பலமுள்ள கட்சித் தலைவரோ செயலாளரோ, அறிவிக்கும் ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாவதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நில் இத்தாவெல தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு அந்தக் கட்சி கோரியுள்ளது. ஆனால் சுமார் 40 ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்தரப்பில் அமர இருப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி. ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ளதோடு ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்படலாம் என அறிய வருகிறது. 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar