புத்திஜீவிகள் நாடு திரும்ப அழைப்பு அரச வளத்தை துஷ்பிரயோகம் செய்தோருக்கு தண்டனை
எதிர்ப்பு அரசியல் செய்வதைவிடுத்து நல்லிணக்க அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.
இலங்கை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முகங்கொடுக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு நல்லிணக்க அரசாங்கமொன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ‘மைத்திரி ஆட்சி’ கொள்கைப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு நல்லிணக்க அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் வகுக்கப்படும் என்றும் கூறினார்.
8ஆவது பாராளுமன்றத்தின் சம்பிரதாய பூர்வமான அமர்வில் சிம்மாசன உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பிரதாய பூர்வ அமர்வு நேற்று பாராளுமன்ற வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 2.25 மணியளவில் வாகனப் பேரணிமூலம் பாராளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவரை சபாநாயகர் கரு ஜெயசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்தும் இராணுவ மரியாதையும், 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. பாராளுமன்றத்துக்குள் செங்கம்பளத்தின் ஊடாக ஜனாதிபதி அழைத்துச் செல்லப்பட்டதுடன், பாடசாலை மாணவிகள் ஜயமங்கள கீதமிசைத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி சபைக்கு அழைத்துவரப்பட்டார். அவரை ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்பிக்கள் எழுந்து நின்று வரவேற்றனர். ஜனாதிபதிக்கு சிம்மாசன உரை நிகழ்த்துவதற்கான சபாநாயகரின் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
ஆட்சி மாறுவதோடு மாறாத பொதுவான தேசிய கொள்கைத் திட்டமொன்றை உருவாக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்டநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பையும் ஐக்கியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
இணக்கப்பாட்டு கூட்டமைப்பின் பிரதான செயற்பாடு சகல இனக்குழுக்களுக்கிடையேயும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதும், சமூகப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி 2020ல் மலரும் புதிய உலகிற்கும், அதற்கு அப்பால் காணப்படும் தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுக்கக் கூடிய உயர்மனித வள அபிவிருத்தியை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்வதுமாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் நான் முன்வைத்த ‘மைத்திரி ஆட்சி’ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு நல்லிணக்க அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். நாட்டின் தேசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக இரண்டு வருடங்களுக்கு நல்லிணக்க அரசு ஸ்தாபிக்கப்படுகிறது. இது நாட்டின் முன்னேற்றகரமான அரசியல் கலாசாரத்துக்கான ஆரம்பம் என்று நம்புகிறேன்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க முன்வைத்த ‘ஐம்பெரும் திட்ட’ கொள்கைப் பிரகடனம், ஐ.ம.சு.மு முன்வைத்த ‘எதிர்காலத்துக்கான வாக்குறுதி’ ஜே.வி.பி முன்வைத்த ‘தேசத்தின் மனசாட்சி’, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் பிரகடனம் என்பவற்றை ஆராய்ந்து நல்லாட்சிக்குத் தேவையான விடயங்களை உள்ளடக்கியதாக நல்லிணக்க அரசின் கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்படும்.
கடந்த 60 வருட காலத்தில் மூன்று அரசியலமைப்புக்களை நாம் செயற்படுத்தியிருக்கிறோம். ஆனால் சகல தரப்பினரும் இணங்கக் கூடிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற முடியாமல் போனது துர்ப்பாக்கியமாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்ந்தும் இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது இந்தப் பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.
அண்மையில் நான் சமர்ப்பித்த 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக இதற்கான அடித்தளம் இடப்பட்டது. சகல அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகத்திற்கும் உடன்படக்கூடிய மிகவும் பொருத்தமான தேர்தல் முறையொன்றை உருவாக்கி நிறைவேற்றவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு இந்தப் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படுகிறது.
நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட கெளரவமான நாடாக எழுந்து நிற்பதற்குத் தேவையான அரசியல் தீர்மானங்களையும் புனரமைப்பு செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் இந்தப் பாராளுமன்றத்தையே சார்கிறது.
மோசடியை ஒழிப்பதும் அரச சொத்துக்களைப் பாதுகாப்பதுமாகும். அதனால் மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயத்தை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக இருக்கும்.
மோசடியைத் தடுப்பதற்காக தற்பொழுது காணப்படும் நிறுவன வலையமைப்பை மேலும் பலப்படுத்து வதற்கும், அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களை தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தவும் நான் பின்நிற்க மாட்டேன்.
வெளிப்படைத் தன்மையையும், நட்புறவையும் அடிப்படையாகக் கொண்டதாக எமது வெளிநாட்டுக் கொள்கை அமையும். கடந்த ஆறுமாத காலத்தில் எமது நாட்டுக்கு சாதகமான வகையிலும் நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் வகையிலும் மாற்றங்களை எனது அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
நல்லிணக்க அரசியல் சூழலில் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள புத்திஜீவிகளின் அறிவை நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். நாடு திரும்பவிரும்பும் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு என் கண்காணிப்பின் கீழ் விசேட செயலணியொன்றை உருவாக்கவிருக் கிறோம் என்றார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை மூன்றாம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment