BREAKING NEWS

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை - ஏ.ஸி. யஹியாகான்

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை- சாய்ந்தமருவை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு உறுப்பினர்களும் இதனைப் பிரேரணையாக முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன்.

கல்முனை மாநகர சபையின் தற்போதைய ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநகர சபை அமர்விலேலேனும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை உருவாக்குவது தொடர்பில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.ஸி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்கும் அதேவேளை, முஸ்லிம்களுக்கான தனியான கரையோர மாட்டம் மற்றும் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை ஆகியனவும் இந்தக் கட்சியின் மூலம் கிடைக்க வேண்டுமென்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகிறன்றனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் கூட இவைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கரையோர மாவட்டக் கோரிக்கை எந்தளவு நிறைவேற்றப்படும் என்பது தொடர்பில் எதனையும் கூற முடியாத நிலைமையே தொடர்ந்து காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ காலம் முதல் இன்றைய தேசிய அரசாங்கம் வரை  கரையோர மாவட்டம் தொடர்பில் கரிசனை காட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், கரையோர மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையிலுமே கடந்த கால தேர்தல்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிகளவில் வாக்களித்தனர் என்பதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

எனவே, இந்த விடயம் இவ்வாறு கிடப்பிலுள்ள நிலையில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை விவகாரமும் கானல் நீராகப் போவது அந்த மக்களை ஏமாற்றத்துக்குள் ஆக்கிவிடும். எனவே, இதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

இதன் ஒரு கட்டமாகவே கல்முனை மாநகர சபை இது தொடர்பான பிரேரணை ஒன்றினை சபைக்கு கொண்டு வந்து அதனை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். எனவே, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள கல்முனை மாநாகர சபை அமர்வில் சாய்ந்தமருவை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு உறுப்பினர்களும் இதனைப் பிரேரணையாக முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறானதொரு பிரேரணை முன்வைக்கப்படாவிடில் அல்லது முன்வைக்கப்பட்டும் அது நிறைவேற்றப்படாது போனால் சாய்ந்தமருதுக்கு தனியாக உள்ளுராட்சி சபை உருவாவதனை எந்தப் தரப்பினர் விரும்பவில்லை என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவும் இது சந்தர்ப்பமாக அமைந்து விடும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar