BREAKING NEWS

மக்கள் காங்கிரசின் திருத்திய யாப்பு வெளிப்படைத்தன்மை கொண்டது

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் திருத்திய யாப்பும் அதன் உயர் பீடமும் ஜனநாயக முறையிலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருப்பது முஸ்லிம் சமூகத்தின் அரசியலுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும் என அ. இ. மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் உலமா கட்சி தலைவருமான மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
குருணாகலில் நடைபெற்ற அ. இ. ம. காங்கிரசின் பேராளர் மாநாடு அக்கட்சி உருவான காலம் முதல் நடாத்தப்படாத அளவு மிகவும் சிறப்பானதாகவும் ஜனநாயக தன்மையை கொண்டதாகவும் அமைந்ததுடன் மக்களின் அமோக  வரவேற்பையும் பெற்றமையானது மக்கள் அக்கட்சி தலைமை மீது கொண்டுள்ள பற்றையும், அபிமானத்தையும் வெளிக்காட்டுகிறது. இதன் மூலம் 2010ம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தின் பிரபல்யமான எந்த அரசியல்வாதியும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சியை ஆதரிக்க முன்வராத போது அவரை சரியாக இனங்கண்டு இணைந்தவன்  என்ற  வகையில் நான் சந்தோசமடைகிறேன். அத்துடன் 2010ம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர தேர்தலில் நாம் அ. இ. மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்கி கட்சியை அறிமுகப்படுத்தினோம். அதுவே அம்பாரை மாட்டத்தில் அக்கட்சி முகம் கொடுத்த முதலாவது தேர்தலாகும்.
கட்சி பாரிய வெற்றி பெறக்கூடிய நிலையில், சிலரின் கபட நாடகம் காரணமாகவும், முஸ்லிம் காங்கிரசின் பிரதேச வாதத்துக்கும், இனவாதத்துக்கும், பொய்களுக்கும் மக்கள் மயங்கி அவர்களுக்கு வாக்களித்து விட்டு இன்று கல்முனை மாநகர சபை உலகிலேயே மிக மோசமான மாநகரசபையாக, குப்பையாக இருப்பது கண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றே நாம் கூறினோம், சமூக உணர்வு கொண்ட, சமூகம் பற்றிய கவலையுள்ள அமைச்சர் ரிசாத் தலைமையிலான அ இ ம காங்கிரசை கல்முனை மாநகர சபையின் ஆட்சியில் வைக்கும்படி. எமது பேச்சை கேட்காமையின் விளைவை இன்று அம்மக்கள் அனுபவிப்பது கண்டு கவலையடைகிறோம்.
2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளி தாக்குதலை தொடர்ந்து நாம் அரசாங்க ஆதரவிலிருந்து விலகியதால் நாம் உயர் பீட உறுப்பினராக இருந்த அ. இ. ம. காங்கிரசிலிருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தற்போது அத்தகைய சூழல் இல்லாமை காரணமாகவும் தலைவரின் அன்பான அழைப்பையும் ஏற்று அக்கட்சியுடன் நாம் மீண்டும் இணைந்து செயல்படுகின்றோம். எதிர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எமது இந்த வழிகாட்டலை ஏற்று அமைச்சர் ரிசாதின் தலைமையில் தேசிய ரீதியாக ஒன்று படுவதன் மூலம் இறைவன் உதவியால் முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar