BREAKING NEWS

திருடன், பொலிஸ்!

திருடன், பொலிஸ்!
-----------------------------

நாங்கள் அதிகமாக
திருடர்களாகவே இருந்திருக்கிறோம்
விளையாட்டில்
முத்து பண்டாவும், சிறிபாலவும்
அதிகம் பொலிஸ்காரர்களாகவே
இருந்திருக்கிறார்கள்...

என்ன திருடினோம் என்பது
அக்கறையில்லை விளையாட்டில் - ஆனால்
பொலிஸார் எங்களை விரட்டிப்
பிடிப்பார்கள் -
பிடித்து அடிப்பார்கள்!

வயல் வெளி
காடு, மேடு,
ஒற்றையடிப் பாதைகள்
எல்லாம் ஓடி
ஊரே அமர்க்களமாகும்
எங்களது திருடன் - பொலிஸ் விளையாட்டில்!

நானும், அப்துல்லாஹ்வும்,
பெரியசாமியும், பரமநாதனும், ஜோனும்
திருடர்களாக இருந்தாலும்,
ஜோனுக்கு சில வேளை
பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி
கிடைக்கும்!

தென்னை மட்டையில்
கைத் துப்பாக்கி செய்து
எங்களை அவர்கள் விரட்டி, விரட்டிப்
பிடிப்பார்கள்!

இனம் என்றால் அப்போது
என்னவென்று தெரியாது!
ஆகவே –
இனவாதங்களைத் தூண்டி நாங்கள்
ஓடி ஒளிவதும் கிடையாது –
அவர்கள் பிடிப்பதாக விளையாடுவதும் கிடையாது!

ஊழல், மோசடி, லஞ்சம், கப்பம்
அதுவும் எங்களுக்குத் தெரியாது!
அதற்காக ஓடுவதும் கிடையாது!

இருந்தும் நாங்கள் ஓடுவதாகவும்
அவர்கள்பிடிப்பதுமாகவே
விளையாட்டு!

சின்ன ஊர்தானே
எங்கு ஓடி மறைந்தாலும்
பிடித்துவிடுவார்கள்!

நாங்கள் எங்கு போய் ஒளிவோம் என்பதும்,
எங்களை யார் ஒளித்து வைப்பார்கள் என்பதும்
அவர்களுக்குத் தெரியும் -
அதனாலேயே அவர்கள்
பொலிஸாராக வருவார்கள்!

அந்த விளையாட்டில்
பொலிஸாருக்கு யாரேனும்
லஞ்சம் கொடுப்பதில்லை
யாரும்
அழுத்தங் கொடுப்பதுமில்லை!

நாங்கள் நாங்களாகவே
ஓடி ஒளிவோம்
அவர்கள் அவர்களாகவே
துரத்திப் பிடிப்பார்கள் -

அது
விளையாட்டாக இருந்தாலும்
எவ்வளவு யதார்த்தமானது?

- இப்னு அஸூமத்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar