மாத்தளை நாவுல பிரதேச விஹாரை ஒன்றிலிருந்த மன்னர் காலத்து விலைமதிப்பற்ற கஜமுத்துக்கள்
இரண்டைத் திருடி விற்பனை செய்ய முயற்சித்த பௌத்த பிக்கு ஒருவர் உட்பட ஐவரைக் கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அதிரடிப்படை பிரிவின் உளவுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இரவு கம்பளை ஹெட்காலை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த கஜ முத்துக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து முச்சக்கர வண்டியில் பயணித்த பௌத்த பிக்கு உட்பட ஐவரையும் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன் சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர். மேற்குறிப்பிட்ட விகாரையில் ‘தரந்துவ’ எனப்படும் பெட்டகத்தில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இதுவரையில் விலை மதிக்க முடியாத கஜமுத்துக்களையே நீண்டநாட்களின் முன் இவர்கள் திருடியுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதன்போது நாவுலபிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு உட்பட இருவர் மெதிரிகிரியவைச் சேர்ந்த ஒருவர் கம்பளை மீத்தலாவ மற்றும் கஹாடப்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருமாக ஐந்து பேரே கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை கம்பளைப் பொலிஸாரின் ஊடாக கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிரடிப்படையினர் மேலும் தெரிவித் தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment