BREAKING NEWS

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நித்திரையை முஸ்லிம் காங்கிரஸ் கலைத்துள்ளது.

 


இன்றைய வீரகேசரி கட்டுரை 15.10.2023


இக்கட்டான நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

++++++++++++++++++++++++++++

எம்.எஸ்.தீன் -

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விட்டு மாறிக் கொள்வதும் ஒரு முக்கிய காரணமாகும். ஆளுங் கட்சியில் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காகவும், ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்டால் கொந்தராத்து உள்ளிட்ட பல சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தமது பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் என்ற காரணத்தினாலும், தாம் தேர்தலில் போட்டியிட்ட கட்சியை விட்டு விலகி ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்ட பல  சம்பவங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிறையவே இருக்கின்றன.


இவ்வாறு கட்சி மாறுகின்றவர்களுக்கு பல கோடிகள் கைமாறப்பட்ட கதைகளும் உள்ளன. ஆளுந் தரப்புக்கு சென்று தாம் ஏற்கனவே போட்டியிட்ட கட்சிக்கும், அதன் தலைமைக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டு சவாலுக்குட்படுத்திய சம்பவங்கள் இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றன. கட்சி தாவும் இவர்கள் தமக்கு வாக்களித்தவர்களின் அபிப்ராயங்களுக்கு மாற்றமாகவும், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற போலிக் காரணத்தையும் சொல்லிக் கொண்டே தமது சுயதேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இவர்களின் கட்சி தாவும் செயலுக்கு பின்னால் எந்தவொரு சமூகக் காரணிகளும் கிடையாது.  

இத்தகைய சம்பவங்களை எல்லா அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைமைகளும் அனுபவித்துக் கொண்ட போதிலும், முஸ்லிம் காங்கிரஸ் அதிக அனுபவத்தைக் கொண்டுள்ளன. அக்கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டதன் பின்னர் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினார்கள். ரவூப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தே ஆளுந் தரப்புக்கு மாறினார்கள். இவர்களின் உள்நோக்கம் அமைச்சர் பதவிகளையும், வேறு சலுகைகளையும் பெற்றுக் கொள்வதாகும்.

ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், றிசாட் பதியுதீன், அமீர் அலி, நஜீப் ஏ.மஜீட், ஹுஸைன் பைலா, ஹப்ரத் என பலரும் ரவூப் ஹக்கீமோடு முரண்பட்டுக் கொண்டார்கள். இவர்களில் பலர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியோடு முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகிக் கொண்டார்கள். அதாவுல்லாஹ், றிசாட் பதியுதீன் ஆகியோர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட தேவைக்களுக்காக கட்சி மாறிக் கொள்வதனால் கட்சிகள் பலவீனப்பட்டன. கட்சி மாறியவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றங்களை நாடிய போதிலும் அது நடக்கவில்லை. அவ்வாறு அன்று நடந்திருந்தால் முஸ்லிம்கள் மத்தியில் பல கட்சிகள் உருவாகி இருக்காது.


மேலும், சிலர் முஸ்லிம் காங்கிலரஸில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஆளுந் தரப்புக்கு செல்வது, பின்னர் மன்னிப்பு கேட்பது. மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வது. தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்லித்தான் அனைத்தையும் செய்தோம் என்று சொல்லிக் கொள்ளும் நடைமுறையும் முஸ்லிம் காங்கிரஸிற்குள் அடிக்கடி நடந்து கொண்டன. இன்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், கட்சியினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதனால் கட்சியின் ஆதரவாளர்கள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று பொது வெளியில் பேசிக் கொண்டார்கள்.

இக்கதைகளுக்கு மத்தியில் கோத்தபாய ராஜபகஸ ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்ஸ பிரதமராகவும் இருந்த வேளையில் முஸ்லிம் காங்கிரஸினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட சட்ட மூலங்களுக்கும், வரவு – செலவுத் திட்டத்திற்கும் கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி ஆதரவு வழங்கினார்கள். இதனால் இரு கட்சிகளும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்தன. ஒழுக்காற்று நடவடிக்கைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸை முந்திக் கொண்டது. கட்சியின் இஸாக் ரஹ்மான், ரஹீம் அலி சப்ரி, முஸரப் ஆகிய 03 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து நீக்கியது. இதனால், முஸ்லிம்கள் மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு காணப்பட்ட செல்வாக்கில் ஒரு படியேற்றம் காணப்பட்டது.

 இதன் பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தியது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் நினைக்கும் போதெல்லாம் கட்சி மாறும் நடவடிக்கைகள் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு வருவதற்கு முன்னதாகவும் நடந்துள்ளது. இதனை தடுக்க வேண்டுமென்ற காரணத்தினால்தான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியின் உறுப்பு உரிமையை இழக்கும் பட்சத்தில் அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் போகுமென்பதை அந்த யாப்பில் இடம்பெறச் செய்தார். ஆயினும், ஆட்சியாளர்களின் அதிகார துஸ்பிரயோகத்தினால் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டன.

இந்த விவகாரத்தில் நல்ல அனுபவத்தைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய அரசாங்கத்திற்கு பல விதத்திலும் ஆதரவு வழங்கிய கட்சியின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர்கள் கட்சியிடம் மன்னிப்பு கோhரியதனால் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நசீர் அஹமட் கட்சியின் உயர்பீடம் திருப்தியடையும் வகையில் தமது விளக்கத்தை அளிக்கவில்லை. இதனால், அவரை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நிரந்தரமாக நீக்கியது. தம்மை கட்சியிலிருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாதென்று நசீர் அஹமட் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


இந்த வழக்கின் தீர்ப்பு 06.10.2023 வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்த தீர்ப்பு நசீர் அஹமட்டின் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட மற்றுமொரு வேட்பாளரான செய்யத் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு அரச வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.


நசீர் அஹமட்டுக்கு உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிகப் பெரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இக்கட்சியும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முதுநபீன் முஸரப்பை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. அது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸரப்பை கட்சியிலிருந்து நீக்கிய போதிலும், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டுமென்று துணியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். முஸ்ரப்பின் விவகாரத்தையும், அவரது விமர்சனத்தையும் ஏதோ சில காரணங்களுக்காக தட்டிக் கழித்துக் கொண்டே வந்தது.


அதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது விவகாரத்தில் ஒரு மெத்தனப் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் கவனத்திற் கொள்ளவில்லை. அவர் ஆளுந் தரப்புக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தமது முடிவுக்கு நியாயம் கற்பிக்கவும், றிசாட் பதியுதீனை மக்கள் மத்தியில் பிழையாகக் காண்பிக்கவுமே முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார். முஸ்ரப்பின் இந்த முன்னெடுப்புக்கு அரசியலை சரியாகப் புரிந்து கொள்ளாத, அவரின் பின்னால் இருந்த ஒரு சிலர் காரணம் எனலாம். அவர்களின் உந்துதலினால் தனக்கு அரசியல் களம் அமைத்துக் கொடுத்த றிசாட் பதியுதீனை பல இடங்களில் சவாலுக்குட்படுத்தினார்.


 இதனால் கட்சியின் ஆதரவாளர்கள் முஸரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டனர். ஆயினும், றிசாட் பதியுதீனும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடமும் முஸ்ரப்பின் விவகாரத்தை கிடப்பில் போட்டுக் கொண்டது என்று சொல்வதே பொருத்தமாகும்.

இந்த நிலைப்பாட்டில் இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நித்திரையை முஸ்லிம் காங்கிரஸ் நசீர் அஹமட் விவகாரத்தில் பெற்றுக் கொண்ட தீர்ப்பானது கலைத்துள்ளது.


முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதனாலும், அவர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமையாலும் கட்சியின் ஆதரவாளர்கள் தலைமையோடும், பாராளுமன்ற உறுப்பினர்களோடும் பலத்த அதிருப்தியைக் கொண்டிருந்தார்கள். இதனால் கட்சியினதும், தலைமையினதும் செல்வாக்கில் சரிவு காணப்பட்டது. இப்போது நசீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடையேயும், மாற்றுக் கட்சியின் ஆதரவாளர்களிடையேயும் முஸ்லிம் காங்கிரஸிற்கும், அதன் தலைமைக்கும் செல்வாக்கு அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு கட்சியிலிருந்து நீக்கியுள்ள முஸரப்புக்கும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோல்வியடையுமாயின் அம்பாரை மாவட்டத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்தில் அக்கட்சிக்கான செல்வாக்கில் வீழ்;ச்சியை ஏற்படுத்திவிடும். இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் முதல் உயர்பீட உறுப்பினர்கள் விரும்பமாட்டார்கள். அதனால், கிடப்பில் போட நினைத்த விவகாரத்தை தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி நசீர் அஹமட்டுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது இன்றைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுள்ள எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த வேளையிலும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற பயத்தை விதைத்துள்ளது. இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும் உள்ளன. இதனால், இந்த வழக்குகளின் தீர்ப்புக்கள் எவ்வாறு அமையும் என்பதை இனிவரும் நாட்களில் கண்டு கொள்ளலாம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar