BREAKING NEWS

கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் "முதலீட்டாளர்கள் மகாநாடு - 2024"

கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் "முதலீட்டாளர்கள் மகாநாடு - 2024" - ஆரம்ப நாள் நிகழ்வு கொழும்பு "ஜெட்வின்" ஹோட்டலில் - ஐ. ஏ. காதிர் கான் - கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, வியாபார மற்றும் "முதலீட்டாளர்கள் மகாநாடு - 2024" தொடர்பிலான ஆரம்ப நாள் நிகழ்வும், வர்த்தக பாரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும், அண்மையில் கொழும்பு - 07 இல் அமைந்துள்ள "ஜெட்வின்" ஹோட்டலில் நடைபெற்றன. இலங்கையில் உள்ள கொமன் வெல்த் ஐகொனிக் சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்தக இணைப்பாளர் கூட்டிணைப்பு ஆகியன ஒன்றிணைந்து, மேற்படி நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தன. கொமன் வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிஸாம் மற்றும் சர்வதேச வர்த்தக இணைப்பாளரும் கூட்டிணைப்பின் பணிப்பாளருமான தன்வீர் ஆர்.எம். ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், சிங்கப்பூர் வர்த்தக போரத்தின் ஆளுநர் கலாநிதி சிந்தியா சாங் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் பங்கேற்றிருந்த கலந்துரையாடல் நிகழ்வில், சர்வதேச வர்த்தக இணைப்பாளரும் கூட்டிணைப்பின் பணிப்பாளருமான தன்வீர் ஆர்.எம். கருத்துத் தெரிவிக்கும்போது, "இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், எமது கூட்டிணைப்பு பல்வேறு செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, பாரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை, சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான மிகச் சிறந்த வாய்ப்பை, எமது கூட்டிணைப்பு மூலம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம். இதனூடாக, இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், சர்வதேச வர்த்தகத்தையும் மேலும் மேம்படுத்த முடியும். திறந்த பொருளாதாரக் கொள்கையின் மூலமாகவே நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சியடையும். அத்துடன், இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தகர்கள் போட்டிச் சந்தைக்கு முகம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வுகளுக்கு, இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் பிரசன்னமாகியிருந்த சிறு முயற்சியாளர்கள், தங்களது உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. 25/01/2024.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar