BREAKING NEWS

எதிர்க்கட்சி எம்.பிக்கள் கட்சித்தாவும் சாத்தியம்

அரசியல் திருப்பங்கள் இவ்வாரம் நிகழலாம்! - 30 June 2024 பாராளுமன்றம் இவ்வாரம் கூடவுள்ள நிலையில், அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படலாமென உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆளுங் கட்சிக்குத் தாவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படும் அதேசமயம், ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் திடீர் வாக்கெடுப்புக் கோரல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகவே இவ்வாறு எம்.பிக்களைத் தயார் நிலையில் இருக்குமாறு கேட்கப் பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வு   இதேவேளை, வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜூலை 2 மற்றும் 3ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் பங்கேற்புடனும் (28) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய ஜூலை 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், பி.ப. 5.00 மணிவரை விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அன்றையதினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாகவும் பிரதிச் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.   ஜூலை 3ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டாவது நாளாகவும் விவாதத்தை நடத்த இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணிக்கு தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.   இந்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவும் (OCC) கடந்த 2024.06.26ஆம் திகதி கைச்சாத்திட்ட இறுதி உடன்படிக்கை, இலங்கை அரசாங்கம் மற்றும் சீன ஏற்றுமதிஇறக்குமதி வங்கி (EXIM Bank) ஆகியவற்றுக்கிடையில் 2024.06.26 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இறுதி உடன்படிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதியை, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar