இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம்
Posted by aljazeeralanka.com on November 25, 2025 in | Comments : 0
கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஸ்ரீ. ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடக பேச்சாளர் முபாறக் மஜீத் தெரிவித்ததாவது,
அண்மைக்காலமாக தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையில் முரண்பாடு தோன்றுவதும் கவலைக்குரிய விடயமாகும்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்திலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களிலும், இது போல் பல இடங்களிலும் தொல்பொருள் அடையாளங்கள் உள்ளதாக கூறி பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது இந்திய மத வாதிகள் மசூதிகளில் இந்து மத தொல்பொருள் உள்ளது என கூறி மசூதிகளை இடிக்க முனைவது போன்றே உள்ளது.
தொல்பொருள் என்பது ஆதி கால அடையாளங்கள் என்பதற்கப்பால் நவீன காலத்தில் புதைக்கப்பட்டு மீண்டும் தோண்டப்படுபவை என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
ஒரு தொல்பொருள் என்றால் பூமிக்கு அடியில்தான் இருக்கும் என்பது போன்ற பிரேமை இந்தியாவிலும் இலங்கையிலும்தான் உள்ளது.
அது மட்டுமல்ல, இலங்கையின் ஆதிகால தமிழ் மக்கள் தமது இந்து மத கடவுள்களுடன் புத்தரையும் வணங்கி வந்ததை வரலாற்றில் காண்கிறோம். இப்போதும் கூட இந்தியாவின் தமிழ் நாட்டில் பலர் புத்த சிலைகளையும் வைத்துள்ளனர்.
அந்த வகையில் புத்தர் சிங்கள மக்களுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் தமிழ் மக்களுக்கும் உரியவர்கள் என்பதால் சில பொருட்கள் தமிழ் மக்களாலும் பாவிக்கப்பட்டிருக்கலாம். அவற்றை தோண்டி எடுப்பதாக கூறி இனங்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
இது போன்ற செயலைத்தான் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சில ஹாமதுருமார் கோட்டாபயவின் உதவியுடன் அரங்கேற்றியதால் நாட்டுக்கு நல்லது செய்த மஹிந்தவையும் சிறு பான்மை மக்கள் மிகக்கடுமையாக வெறுக்கும் நிலை ஏற்பட்டது.
ஆகவே தொல்பொருள் திணைக்களம் சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆய்வு செய்தால் அவர்களுக்கு நிறைய தொல்பொருள்கள் கிடைக்கும் என்பதால் அதில் கவனமெடுக்கும் வகையில் அரசு அறிவிறுத்தல்கள் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment