BREAKING NEWS

வடக்கும் கிழக்கும் இணைவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை?

அரசியலமைப்பின் 154A (3) சரத்தின் பிரகாரம் வடக்கும் கிழக்கும் இணைவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை? சாதாரண சட்டத்தின் மூலமே இதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும்....!!! இது ஆச்சரியமாக இருக்கின்றதா....???? ​இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்பது நாட்டின் அதிகாரப் பரவலாக்கல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இதில் உள்ள 154A (3) சரத்து, இரண்டு அல்லது மூன்று அண்டை மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரு நிர்வாக அலகாகச் செயற்பட பாராளுமன்றத்தில் இயற்றப்படும் ஒரு சட்டத்தின் மூலம் வழிவகை செய்யலாம் எனக் கூறுகிறது. எனினும், இந்தச் சரத்தில் "சர்வஜன வாக்கெடுப்பு" (Referendum) பற்றிய நேரடி நிபந்தனைகள் காணப்படவில்லை. இது ஏன் என்ற கேள்வி அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது யாருமே நிராகரித்துவிட முடியாது. ​ ​அரசியலமைப்பின் 154A (3) சரத்தின் படி, மாகாணங்களை ஒன்றிணைக்கும் செயல்முறை ஒரு சாதாரண சட்டத்தின் (Ordinary Law) மூலமே நிறைவேற்றப்பட முடியும் என்பதே உண்மையாகும். அரசியலமைப்பின் 83வது சரத்தின் படி, நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, மக்களின் இறைமை போன்ற அடிப்படை அம்சங்களைப் பாதிக்கும் சட்டமூலங்களுக்கு மட்டுமே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும். ​மாகாணங்களை ஒன்றிணைப்பது என்பது ஒரு நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு மாற்றமே தவிர, அது நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையோ அல்லது மக்களின் அடிப்படை இறைமையையோ மீறுவதாக அமையாது என அரசியலமைப்பு சட்டவரைஞர்கள் கருதினர். இதனால், இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு என்ற கடினமான நிபந்தனை சேர்க்கப்படவில்லை எனராம். ​ இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்ட விளக்கமும் என்னவென்று பார்ப்போம்.... ​13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அது அரசியலமைப்புக்கு முரணானதா என்பதைத் தீர்மானிக்க உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதனை ஆராய்ந்த உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையைச் சிதைக்கவில்லை எனத் தீர்ப்பளித்தனர். ​குறிப்பாக, 154A (3) சரத்தின் கீழ் மாகாணங்களை இணைப்பது, நாட்டின் மைய அதிகாரத்தை அல்லது அரசியலமைப்பு கட்டமைப்பை மாற்றியமைக்காததால், இதற்கு மக்களின் நேரடித் தீர்ப்பு (சர்வஜன வாக்கெடுப்பு) தேவையில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது எனலாம். ​ 1987 இல் நடந்த வடக்கு - கிழக்கு இணைப்பின் பின்னணி..... ​154A (3) சரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு பற்றிச் சொல்லப்படாத நிலையில், 1987 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது மட்டும் சர்வஜன வாக்கெடுப்பு நிபந்தனை விதிக்கப்பட்டதே அது ஏன் என்ற ஐயம் யாருக்காவது எழலாம். ​இதற்குப் பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கருதப்பட வேண்டும்... ​அதாவது, அந்த இணைப்பு என்பதுஅிசியலமைப்பின் 154A (3) இன் கீழ் இயல்பாக நடந்த ஒன்றல்ல; மாறாக, இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு விசேட தற்காலிக ஏற்பாடாகும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால்தான் அது ​நிபந்தனைக்குட்பட்ட இணைப்பாக கருதப்பட்டது எனலாம்... அன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் போது, அந்த இணைப்பு நிரந்தரமாவதற்கு கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை மாகாண சபைகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ​நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படாத காரணத்தினாலேயே, 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த இணைப்பை செல்லுபடியற்றது எனத் தீர்ப்பளித்து, மாகாணங்களை மீண்டும் பிரித்தது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். ​ ​சுருக்கமாக சொல்வதாக இருந்தால், 154A (3) சரத்து என்பது ஒரு பொதுவான நிர்வாக ஏற்பாடாகும். இது நாட்டின் அடிப்படை அரசியலமைப்புச் சட்டகத்தை மாற்றாததால், இதனை நிறைவேற்ற சாதாரண சட்டமூலமே போதுமானது. இருப்பினும், மாகாணங்களை இணைக்கும் போது மக்களின் அடிப்படை உரிமைகளோ அல்லது நாட்டின் ஒருமைப்பாடோ கேள்விக்குள்ளாகும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் அதனை மீண்டும் பரிசீலிக்க முடியும். ஆனால் ​தற்போதைய சட்ட நிலவரப்படி, 154A (3) சரத்தின் கீழ் மாகாணங்களை இணைப்பதற்குப் பாராளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மை போதுமானதே தவிர, சர்வஜன வாக்கெடுப்பு தேவையல்லை என்பதே எங்களின் கருத்தாகும்.... -#முனைமருதவன்*

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar