ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது?
Posted by aljazeeralanka.com on April 06, 2026 in | Comments : 0
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் பல நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் தலையிட்டுள்ளன.
ஆனால், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் ஈரானை எதிர்ப்பதற்காக இஸ்ரேலை ஆதரிக்கும் ஒரு போக்கு சில தமிழர்களிடையே காணப்படுகிறது.
"ஈரான் தமிழர் போராட்டத்தை அழித்தது" என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், வரலாற்றின் கசப்பான பக்கங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வித்தியாசத்தை உணராமல், இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் வரலாற்றின் யதார்த்தத்தை உற்றுநோக்க வேண்டும்.
ஈரானின் நிலைப்பாடு என்பது ஒரு நட்பு நாட்டிற்கான இராஜதந்திர ஆதரவே தவிர, தமிழினத்தை அழிப்பதற்கான நேரடித் திட்டம் அல்ல.
ஈரான் ஈழப் போராட்டத்தை அழிக்க ஆயுதங்களை அள்ளி வழங்கவில்லை. மாறாக, இலங்கை அரசுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு என்பது இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மட்டுமே.
போர் உச்சத்தில் இருந்தபோது இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் கடனுதவிகளையும், எரிபொருள் சலுகைகளையும் வழங்கியது. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கும் நடவடிக்கையே தவிர, தமிழர்களுக்கு எதிரான நேரடித் தாக்குதல் அல்ல.
போர்க்குற்ற விசாரணைகளில் இலங்கைக்கு ஆதரவாக ஈரான் வாக்களித்தது, தனது நட்பு நாட்டிற்கு இழைக்கும் துரோகத்தைத் தவிர்க்கவே.
சர்வதேச அரசியலில் நாடுகள் தங்கள் நட்பு நாடுகளைக் கைவிடாமல் இருப்பது ஒரு பொதுவான இராஜதந்திர நடைமுறை.
விடுதலைப் புலிகள் அமைப்பு உலக அரங்கில் "இரக்கமற்ற பயங்கரவாதிகள்" (Ruthless Terrorists) என முத்திரை குத்தப்படுவதற்கு அவர்கள் செய்த சில மூலோபாயத் தவறுகளே காரணமாக அமைந்தன.
காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல் அரபு நாடுகள் மற்றும் ஈரானின் பார்வையில் புலிகள் மீதான நன்மதிப்பை முற்றாகச் சிதைத்தது. இஸ்லாமிய நாடுகள் புலிகளை இஸ்லாமிய எதிர்ப்பு சக்தியாகப் பார்க்க இது வழிவகுத்தது.
ராஜீவ் காந்தி மற்றும் பிரேமதாச ஆகியோரின் அரசியல் படுகொலைகள், புலிகளை ஒரு பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்ட அமைப்பாக உலகிற்குச் சித்திரரித்தன.
இலங்கை அரசு இந்தத் தவறுகளை மிகச்சரியாகப் பயன்படுத்தி, அரபு உலகிற்குப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் காட்டியது. இதனால் ஈரான் போன்ற நாடுகள், ஒரு பயங்கரவாத அமைப்பை ஒழிப்பதற்கான போராகவே இதைக் கருதி இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கின.
ஈரான் பொருளாதார உதவி செய்த நிலையில், இஸ்ரேலோ தமிழர்களைக் கொல்ல நேரடித் தொழில்நுட்பத்தையும் பயிற்சியையும் வழங்கியது.
இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கத்திலிருந்தே, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தேவையான நவீன ஆயுதங்களையும், போர்த்தந்திரங்களையும் இலங்கை அரசுக்கு வழங்கியதில் இஸ்ரேலுக்குப் பெரும் பங்கு உண்டு.
ஈரானை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேலை ஆதரிக்கும் சில தமிழர்கள், இந்த கசப்பான உண்மைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
1970-களில் அரபு நாடுகளின் அழுத்தத்தால் இலங்கையுடனான உறவை இஸ்ரேல் இழந்திருந்தது. ஆனால், 1983 இனக்கலவரத்திற்குப் பிறகு, தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசுக்குத் தொழில்நுட்பமும் ஆயுதமும் தேவைப்பட்டன.
1984ம் ஆண்டு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஒரு பகுதியாக "இஸ்ரேலிய ஆர்வப் பிரிவு" (Israeli Interests Section) தொடங்கப்பட்டது.
இதன் நோக்கம் "தமிழ் பயங்கரவாதப் பிரச்சினையை" தீர்க்க இலங்கை அரசுக்கு உதவுவது என்று இஸ்ரேலிய ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன.
1984 முதல் 1988 வரையிலான குறுகிய காலத்தில் மட்டும், சுமார் 30 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் இலங்கைக்கு விற்றுள்ளது.
இலங்கை காவல்துறையின் விசேட அதிரடிப்படை (Special Task Force - STF) உருவாக்கப்பட்டதே இஸ்ரேலின் வழிகாட்டுதலில்தான்.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் (Mossad) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவான சின் பெட் (Shin Bet) ஆகியவை STF வீரர்களுக்குப் பயிற்சி அளித்தன.
இலங்கை இராணுவம் மற்றும் STF (Special Task Force) எனப்படும் விசேட அதிரடிப்படை செய்த படுகொலைகள் இஸ்ரேலுக்குத் தெரிந்தே இருந்தது.
அமெரிக்கத் தூதரகமே எச்சரித்தும், "STF ஒரு கொடூரமான படை" என்று தெரிந்தும் அவர்களுக்கு இஸ்ரேல் பயிற்சி அளித்தது.
மக்களைக் கொல்வது மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தையே அச்சுறுத்துவது எப்படி என்ற 'உளவியல் போர்' (Psychological Warfare) முறையை இஸ்ரேல் இலங்கைப்படைக்கு கற்றுக்கொடுத்தது. சுற்றிவளைப்புகள், சித்திரவதைகள், பொதுமக்களிடையே பீதியை உருவாக்குதல் மற்றும் 'காணாமல் ஆக்குதல்' போன்ற நுணுக்கங்கள் இதில் அடங்கும்.
கதிர்காமம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள STF முகாம்களில் இஸ்ரேலியப் பயிற்சியாளர்கள் நேரடியாகப் பணியாற்றியதை அமெரிக்கத் தூதரக ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கை விமானப்படை தமிழ்ப் பகுதிகள் மீது குண்டுமழை பொழிவதற்குப் பயன்படுத்திய பெரும்பாலான விமானங்கள் இஸ்ரேல் வழங்கியவை .
இலங்கை விமானப்படையின் மிக முக்கியமான தாக்குதல் விமானமான 'கிஃபிர்' இஸ்ரேல் தயாரிப்பாகும். இவை 1996 முதல் இலங்கை வான்படையில் இணைக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் போர் வரை பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்கப் பயன்படுத்தப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க Searcher மற்றும் Hermes ரக ஆளில்லா உளவு விமானங்களை இஸ்ரேல் வழங்கியது.
போர் தீவிரமடைந்த காலக்கட்டத்தில், இலங்கை விமானப்படை விமானிகளைப் பயிற்றுவிக்கவும், சில நேரங்களில் போர் விமானங்களை இயக்கவும் இஸ்ரேலிய விமானிகள் (Mercenaries) ஒப்பந்த அடிப்படையில் இலங்கையில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்புலிகளின் கடல் விநியோகத்தைத் தடுக்கவும், கடற்போர் புரியவும் அதிவேகத் “ டோரா” படகுகள் இஸ்ரேலால் வழங்கப்பட்டன.
நெருக்கமான சண்டைகளில் பயன்படுத்தப்படும் 'mini Uzi' துப்பாக்கிகள் மற்றும் இராணுவ வாகனங்களை இஸ்ரேல் பெருமளவில் வழங்கியது.
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் உயர் பாதுகாப்பு வலையங்களைச் சுற்றி அமைக்கப்படும் மின்னணு கண்காணிப்பு வேலிகள் இஸ்ரேலியத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை.
இஸ்ரேலிய இராணுவப் பயிற்சியாளர்கள் இலங்கையில் தங்கியிருந்தபோது, அவர்கள் தங்களை "விவசாய ஆலோசகர்கள்" என்றே அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால், உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான உத்திகளை இலங்கை இராணுவத்திற்குப் பயிற்றுவித்தனர்.
1997ல் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை "மின்னல் வேகத் தாக்குதல்" மூலம் எப்படிக் கைப்பற்ற வேண்டும் என்பதற்கு இஸ்ரேலியப் பயிற்சியாளர்களே வழிகாட்டினர்.
இன்று ஈரான் - இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலை ஆதரிக்கும் தமிழர்கள் ஒன்றை உணர வேண்டும்.
ஈரான் தனது பிராந்திய நலன்களுக்காகச் செயல்பட்டிருக்கலாம், ஆனால் நேரடியாக தமிழர்களைக் கொன்று குவிக்க ஆயுதங்களையும், பயிற்சியையும், விமானிகளையும் வழங்கியது இஸ்ரேல் மட்டுமே.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்குப் பின்னால் இருந்த முக்கிய மூளை இஸ்ரேலுடையது.
மனித உரிமை மீறல்களைப் பற்றி எவ்விதக் கவலையும் படாமல், பணத்திற்காக ஆயுதங்களையும், படுகொலை செய்யும் கலையையும் விற்பனை செய்த நாடு இஸ்ரேல்.
ஈரான் ஒருபோதும் தமிழர்களுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தி வரவில்லை. ஆனால், இஸ்ரேலோ தமிழர்களின் இரத்தத்தில் தனது ஆயுத வியாபாரத்தைச் செழிக்க வைத்தது.
வரலாறு என்பது உணர்ச்சிவசப்படுவதற்கானது அல்ல; உண்மைகளை உள்வாங்கிச் செயல்படுவதற்கானது.
ஒரு இனத்தின் அழிவில் லாபம் பார்த்த தேசத்தை, இஸ்லாமிய மத வெறுப்பு அல்லது அரசியல் காரணங்களுக்காக ஆதரிப்பது வரலாற்றுத் துரோகமாகும்.
ஈரானை வெறுப்பதற்காக இஸ்ரேலை ஆதரிப்பது என்பது, தன்னைக் கொல்லத் தூண்டியவனை விட்டுவிட்டு, அவனுக்கு நட்புறவிற்காக உதவி செய்தவனை மட்டும் குற்றம் கூறும் முட்டாள்தனமான செயலாகும்.
வரலாற்று உண்மைகளைத் தேடிப் பார்த்தால், ஈழத் தமிழர்களுக்கு இஸ்ரேல் இழைத்த துரோகம் எவராலும் மன்னிக்க முடியாதது என்பது தெளிவாகும்.
Mukinthan Thursirai
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment