BREAKING NEWS

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை மோசடிகள்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணை எடுக்கப்படும் அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. தெரிவிப்பு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் தனக்குத் தொடர்ந்து பல தகவல்களையும் புகார்களையும் வழங்கியவண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும், வைத்தியசாலையின் தற்போதைய பின்னடைவு குறித்துப் பேசியுள்ள ஆதம்பாவா எம்.பி, ஒரு சில தரப்பினர் வைத்தியசாலையின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, அரசியல்வாதி ஒருவரின் உறவினர் முறையான நபர் ஒருவர், இவ்வைத்தியசாலையைத் தரம் குறைந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருந்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையிலுள்ள 25 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு பணிமனைகள் காணப்படுவதை நினைவு கூர்ந்த அவர், கல்முனைப் பிரதேசத்தில் சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூர இடைவெளியில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை என இரு பிரமாண்டமான வைத்தியசாலைகள் மிக உயர்ந்த மட்டத்திலான சுகாதாரச் சேவைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாளொன்றுக்குச் சுமார் 1500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருவதாகவும், எனவே இத்தகைய பாரிய மக்கள் சேவை வழங்கும் நிறுவனத்தின் குறைபாடுகள் களையப்பட்டு, ஊழல்களுக்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர்.ஆதம்பாவா மேலும் தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar