மினாவில் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள்,?
Posted by aljazeeralanka.com on June 07, 2026 in | Comments : 0
இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் கொழும்பு டைம்ஸ் நாளிதழுக்கு சனிக்கிழமை (ஜூன் 6) வழங்கிய உத்தியோகபூர்வ அறிக்கையின் முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது:
இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழுத் தலைவரின் அறிக்கை:
"மினாவில் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள், வாக்குறுதியளிக்கப்பட்ட மட்டத்தை விட மிகவும் குறைவாக இருந்ததாகக் காட்டும் வகையில் அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்த தொடர்ச்சியான விமர்சனக் கட்டுரைகள் குறித்து எங்களது கவனம் திரும்பியுள்ளது. பல்வேறு கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாங்கள் விளக்கமளிக்க விரும்புகிறோம்.
சேவை வழங்குநர் மற்றும் முகாம் தெரிவு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாமிற்கான உத்தியோகபூர்வ சேவை வழங்குநராக *ரெஹ்லத் ஏ மனாஃபே* நிறுவனம் நியமிக்கப்பட்டிருந்ததால், அவர்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர ஹஜ் குழுவுக்கு வேறு வழி இருக்கவில்லை. எங்களது சேவை வழங்குநரை கடந்த வருடமிருந்த 'அல் பைத்' நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டன.
கட்டணங்கள் மற்றும் சேவைத் தரம் குறித்த குற்றச்சாட்டுகள் ‘ரெஹ்லத்' நிறுவனத்தால் வழங்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தில் 'ஏ' தரம் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நாங்கள் ‘பி' தரத்திற்கான தொகையை மட்டுமே செலுத்தினோம். உண்மையில், கடந்த வருட 'பி' தரச் சேவைகளுக்காகச் செலுத்திய தொகையை விட இம்முறை சுமார் 373 சவூதி ரியால்கள் குறைவாகவே செலுத்தியுள்ளோம். எனவே, ஹாஜிகளிடம் 'ஏ' தர உயர் வசதிகளுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
ரெஹ்லத் நிறுவனம் அகலமான சோபா படுக்கைகள், தனிநபர் ரகசியத்தன்மையைப் பேணும் வகையிலான பிரிப்பான்கள் மற்றும் நாள் முழுவதும் தடையற்ற சிற்றுண்டிகள், பழங்கள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம், தயிர், தேநீர் , காபி, தண்ணீர் போன்ற சில 'ஏ' தர வசதிகளை வழங்கியிருந்த போதிலும் கடந்த வருடம் அல் பைத் நிறுவனம் இவ்வாறு வரம்பற்ற பொருட்களை வழங்கியிருக்கவில்லை , அவர்கள் வழங்கிய உணவு எமது நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அது பெரும்பாலும் அதிக இறைச்சியைக் கொண்ட அரபு உணவாகவே இருந்ததுடன், அவர்களின் சேவை வழங்கல் தரம் எங்களது எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக அமையவில்லை.
இங்கு 'சி' தரம் பற்றிய கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், அத்தகைய கூடாரங்களில் சோபா படுக்கைகள் வழங்கப்படுவதில்லை. மாறாக பாய்களும் , பொதி செய்யப்பட்ட உணவுகளும், தண்ணீரும் மட்டுமே வழங்கப்படும். 'பி' தரத்தில் வழங்கப்படும் கூடுதல் வசதிகள் எவையும் அதில் இருக்காது. இவ்வாறானதொரு கூற்றைக் கூறுபவருக்கு 'சி' தரம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி எந்தவொரு அறிவும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
உணவு வரிசை தொடர்பான பிரச்சினை பஃபே முறையில் உணவைப் பெறுவதற்காக நீண்ட வரிசைகள் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், யாத்திரிகர்களுக்கு வசதியாக நான்கு பஃபே சேவை மையங்களை அமைக்குமாறு ஹஜ் குழு உத்தரவிட்டிருந்தது. எனினும், எங்களுக்குத் தெரியாமல், இரண்டு குழுத் தலைவர்கள் தங்களது யாத்திரிகர்களுக்கு சுமார் 1200 யாத்திரிகர்கள் பொதி செய்யப்பட்ட உணவுப் பொதிகளை வழங்குமாறு சேவை வழங்குநருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, சேவை வழங்குநர் எஞ்சிய யாத்திரிகர்களுக்காக பஃபே சேவை மையங்களை இரண்டாகக் குறைத்திருந்தார்.
இருப்பினும், வழங்கப்பட்ட உணவுப் பொதிகளில் பழங்கள், இனிப்புப் பண்டங்கள் , பழச்சாறுகள் போன்றன உள்ளடக்கப்படாததால், உணவுப் பொதிகளைப் பெற்ற பெரும்பாலான யாத்திரிகர்களும் எஞ்சிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக பஃபே வரிசையில் இணைந்துகொண்டனர். இதனால் இரண்டு சேவை மையங்கள் மட்டுமே இருந்ததால் நீண்ட வரிசைகள் உருவாகின. இது குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடனேயே, உணவுப் பொதி வழங்கும் முறையை நிறுத்துவதற்கு நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்ததுடன், 2ஆம் நாள் முதல் மீண்டும் நான்கு பஃபே சேவை மையங்களுடன் கூடிய பழைய உணவு ஏற்பாட்டிற்குத் திரும்புமாறு சேவை வழங்குநருக்கு உத்தரவிட்டோம். இது நீண்ட வரிசைப் பிரச்சினைக்கு பெருமளவில் தீர்வாக அமைந்தது.
*கழிவறைப் பிரச்சினை *
இலங்கை யாத்திரிகர்கள் வலயம் 2 இல் அமைந்துள்ள இரண்டு அடுத்தடுத்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஒரு முகாமில் 2900 யாத்திரிகர்கள் 36 கழிவறைகளுடனும், மற்றைய முகாமில் 600 யாத்திரிகர்கள் 36 கழிவறைகளுடனும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இரண்டாவது முகாம் அங்கு தங்கியிருந்த இந்திய யாத்திரிகர்களுடனும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. எமது முகாமில் யாத்திரிகர்களுக்கும் கழிவறைகளுக்கும் இடையிலான விகிதம் 80:1 ஆக இருந்தது. அதேநேரம் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி மினாவின் சராசரி விகிதம் 100:1 ஆகும் .அதாவது சுமார் 1.7 மில்லியன் யாத்திரிகர்களுக்கு 17,000 கழிவறைகள்.
இந்த விகிதம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், இது 'கிதானா' மினா பகுதியின் உள்கட்டமைப்புக்கான சவூதி அதிகாரசபை அமைப்பின் கீழ் வருவதால், எங்களாலோ அல்லது சேவை வழங்குநராலோ இதில் எதுவும் செய்ய முடியாது. கழிவறைகளில் இருந்து குளியல் வசதிகளை அகற்றுவது, உளுச் செய்வற்கான குழாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற மாற்றங்களைச் செய்யுமாறு சேவை வழங்குநர் ஊடாக 'கிதானா' அமைப்பிடம் நாங்கள் விடுத்த பல கோரிக்கைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன.
பல வருடங்களாக ஹஜ் கடமைக்குச் சென்றவர்கள், கழிவறைகளின் பற்றாக்குறை காரணமாக உள்கட்டமைப்புப் பிரச்சினையே எப்போதும் எதிர்கொள்ளும் மிகக் கடினமான சவால் என்பதை அறிவார்கள். சவூதி அதிகாரிகள் இரண்டு அடுக்குக் கழிவறைகளை அமைப்பதன் மூலம் இதற்குத் தீர்வு காண முயற்சித்து வரும் போதிலும், அதிகரித்த கழிவறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வடிகால் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியிருப்பதால் இத்தகைய முயற்சிகளுக்கு காலம் எடுக்கிறது. மேலும், இந்த கழிவறைகள் அனைத்தும் வருடத்தின் 5 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, அடுத்த ஹஜ் பருவம் வரும் வரை பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்!
கடந்த வருடம், அதிர்ஷ்டவசமாக எமது முகாமிற்கு எதிரே ஒரு இரண்டு அடுக்கு பொதுக் கழிவறை அமைந்திருந்ததுடன், எமது யாத்திரிகர்கள் பலர் முகாமிற்குள் இருந்த கழிவறைகளின் நெரிசலைக் குறைக்க அந்த வசதியைப் பயன்படுத்தினர். ஆனால், இம்முறை எமது முகாமிற்கு அருகில் அத்தகையதொரு வசதி இருக்கவில்லை. இவ்வாறான உள்கட்டமைப்பு சிக்கல்கள் மற்றும் மினாவில் உள்ள குறைந்த இடவசதிக்குள் 1.7 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்களுக்கு இடமளிக்க வேண்டியிருப்பதன் காரணமாகவே, இந்த ஐந்து நாட்களும் ஹஜ் யாத்திரையின் மிகவும் சவாலான நாட்களாகக் கருதப்படுகின்றன.
குழு உறுப்பினர்களுக்கான வசதிகள் குறித்த வதந்திகள் ஹஜ் குழு உறுப்பினர்களுக்கு பிரத்தியேக கழிவறை வசதிகளுடன் கூடிய வி.ஐ.பி (VIP) கூடாரங்கள் வழங்கப்பட்டதாக கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் அப்பட்டமான பொய் பிரசாரமாகும். பிரதி அமைச்சர், சவூதிக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஜித்தாவிலுள்ள தூதரக அதிகாரி உட்பட அனைத்து ஹஜ் குழு உறுப்பினர்களும் ஏனைய யாத்திரிகர்கள் தங்கியிருந்த அதே முகாமில் உள்ள ஒரு கூடாரத்திலேயே தங்கியிருந்ததுடன், அனைவருக்கும் பொதுவான கழிவறை மற்றும் குளியலறை வசதிகளையே பயன்படுத்தினர். இதற்கு அங்கு வந்த யாத்திரிகர்களே சாட்சிகளாவர். இது ஹஜ் குழு உறுப்பினர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டுவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் தவறான தகவலாகும்.
நிதி மற்றும் கோட்டா முறைமை ஒழிப்பு
ஹஜ் குழுவானது யாத்திரிகர்களிடமிருந்து 5,000 ரூபாய் பதிவுக்கட்டணத்தைத் தவிர ஹஜ் யாத்திரைக்காக வேறு எந்தப் பணத்தையும் நேரடியாகப் பெற்றுக்கொள்வதில்லை. யாத்திரை தொடர்பான ஏனைய அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் யாத்திரிகர்களால் முகவர்களுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன. எமது பணி குறைந்தபட்ச தரநிலைகளை நிர்ணயிப்பதும், முகவர்கள் யாத்திரிகர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதும் மட்டுமேயாகும். சேவை வழங்குநருடனான (SP) ஒப்பந்தம் ஆறு முனாசிம்களுக்கும் (Munazims - குழுத் தலைவர்கள்) 'ரெஹ்லத் ஏ மனாஃபே' நிறுவனத்திற்கும் இடையிலேயே கையெழுத்திடப்பட்டது.
முன்னர் குறிப்பிட்டபடி, ஹஜ் குழு இம்முறை கோட்டா ஒதுக்கீடு முறையை ஒழித்தது. இதன் மூலம் பல முறைகேடான முகவர்கள் இந்த கோட்டாக்களை விற்பனை செய்து வந்தனர், இது யாத்திரிகர்கள் செலுத்த வேண்டிய தொகையை அதிகரித்திருந்தது. இந்த கோட்டா விற்பனை மூலம் பிழைப்பு நடத்தி வந்த முகவர்களை எங்களது இந்நடவடிக்கை கடுமையாகப் பாதித்துள்ளது என்பதில் ஐயமில்லை. கோட்டா முறை ஒழிக்கப்பட்டதன் காரணமாக, இம்முறை ஹஜ் பேக்கேஜ்களின் ஆரம்பக் குறைந்தபட்ச விலை சுமார் 350,000 ரூபாவினால் குறைவடைந்தது.
இதனால் அதிருப்தியடைந்த முகவர்கள், கோட்டா முறை ஒழிப்பை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடித் தோல்வியடைந்தனர். தற்போது அவர்கள் ஹஜ் குழு உறுப்பினர்களை அவதூறு செய்வதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். கௌரவ அடிப்படையில் சம்பளமின்றி சேவை செய்யும் ஹஜ் குழு உறுப்பினர்களை விரக்தியடைந்து வெளியேறச் செய்வதன் மூலம், தங்களது ஊழல் நிறைந்த பழைய கோட்டா முறையை மீண்டும் நிலைநாட்டுவதே அவர்களின் நோக்கமாகும். 'டெய்லி மிரர்' நாளிதழில் வெளியான கட்டுரையின் இறுதிப் பகுதியில், ஹஜ் குழு உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு கோரியிருப்பது அவர்களின் இந்த உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
எதிர்கால சவால்கள் ஹஜ் 2027 க்கான காலக்கெடு இம்முறை மேலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதுடன், முகாம்களைத் தக்கவைப்பதற்கான கால அவகாசம் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 13 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும், இம்முறை இருந்த ஆறு முனாசிம்களுக்குப் பதிலாக ஒரேயொரு முனாசிம் “குழுத் தலைவர்” மட்டுமே இருக்க வேண்டும் என்ற சவூதி ஹஜ் அலுவலகத்தின் புதிய நிபந்தனையும் புதிய சவால்களைத் தோற்றுவித்துள்ளன. இது குறித்து அடுத்த வாரத்திற்குள் ஹஜ் குழு கூடி ஆராயவுள்ளது.
ஹஜ் 2026 இன் பின்னூட்டங்கள் (feedback) தொடர்பான சவூதி ஹஜ் அலுவலகத்தின் கோரிக்கையைப் பயன்படுத்தி, குறிப்பாக இந்த கழிவறைப் பிரச்சினையையும், எமக்குத் திணிக்கப்படும் சேவை வழங்குநரை ஏற்பதை விடுத்து எமக்குப் பிடித்தமான சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கான அவசரத் தேவையையும் நாங்கள் வலியுறுத்தவுள்ளோம்.
ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள குறிப்பிட்ட தனித்துவமான திறன்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் கௌரவ அடிப்படையில் சம்பளமின்றி முழுமையான சேவையை வழங்கும் இத்தகையதொரு குழுவை வழிநடத்துவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்."
#Hajj2026 #SriLankaHajj
#HajjCommittee #ReyazMihular #MinaCamps #ColomboTimes #HajjPilgrimage #QuotaSystem
#SMR
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment