கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிங்களவர் ஒருவரை நியமிக்கவும்.
Posted by aljazeeralanka.com on August 14, 2026 in | Comments : 0
சிங்கள வைத்திய அத்தியட்சகர் ஒருவரை நியமிப்பதன் மூலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் தமிழர் இனவாத்தை ஒழிக்க முடியும் என ஸ்ரீலங்கா ஜம்மியதுல் உலமா கவுன்சில் ஜனாதிபதிக்கு கடிதம்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலமாகத் தொடரும் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் அண்மையில் பெண் சிற்றூழியர்களின் ஆடை தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக தமிழ்–முஸ்லிம் மக்களிடையே மீண்டும் இன முறுகல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளமை கவலைக்குரியது என ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா கவுன்சிலின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) தெரிவித்துள்ளார்.
ஒரு வைத்தியசாலை நிர்வாகப் பிரச்சினை இன மற்றும் மத முரண்பாடாக மாறுவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது. உடனடியாக சுயாதீன விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து, எந்தத் தரப்பாக இருந்தாலும் தவறு இருந்தால் சட்டம் மற்றும் நிறுவன விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து சமூகங்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நிர்வாக அனுபவமும் நேர்மையும் கொண்ட, இன–மத பாகுபாடின்றி செயற்படக்கூடிய சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒரு வைத்திய அதிகாரியை கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிப்பது தொடர்பில் கௌரவ ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கை எந்தவொரு தமிழ் அல்லது முஸ்லிம் வைத்திய அதிகாரியையும் குறைத்து மதிப்பிடுவதற்கானதல்ல என்றும், தற்போதைய நம்பிக்கையின்மையை நீக்கி அனைத்து சமூகங்களுக்கும் சமமான நிர்வாகத்தை உறுதி செய்வதே நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஐக்கியம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நம்பியே மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமது வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் முபாரக் அப்துல் மஜீத் முப்தி அவர்கள் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த கருத்து வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டிருந்ததை நினைவுகூருகிறோம் எனவும் அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) தெரிவித்துள்ளார்.
“நாம் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல; அநீதிக்கும் இனப் பாகுபாட்டிற்கும் மட்டுமே எதிரானவர்கள்” எனத் தெரிவித்த அவர், கல்முனை ஆதார வைத்தியசாலையை அனைத்து இன மக்களும் நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி அவர்கள் உடனடியாக தலையிட்டு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
— அஷ்ஷேய்க் சதீக் (முப்தி)
பொதுச் செயலாளர்
ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபை
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment