BREAKING NEWS

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கான முபாறக் மௌலவியின் சவாலுக்கு


எஸ். ஹமீத் என்பவர் இணையத்தில் பதில் தந்திருந்தார். அதில் பொது பலசேனாவுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் கூறவில்லை என சொல்லியிருந்தார்.
நாம் ஒருவரால் சொல்லாத விடயம் பற்றி பேசவில்லை. சம்பந்தம் உண்டு என தெரிந்தும் ஏன் அதனை பாராளுமன்றில் சொல்லவில்லை என்றுதான் கேட்கிறோம். ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம்.
பொதுபல சேனாவுக்கு ஒத்துழைக்கும் அரசை விடுத்து பொது பல சேனாவை மட்டும் கண்டிப்பதனால் அரசாங்கத்தை பாதுகாக்கிறீர்கள் என்பதே எமது குற்றச்சாட்டு. அரசுக்கும் பொது பலசேனாவுக்குமிடையில் சம்பந்தம் இல்லை என்பதற்கு ஆதாரம் இல்லை என இவர் கூறியுள்ளதன் மூலம் எந்தளவுக்கு இவர்கள் நக்குத்திண்ணிகளாகி விட்டனர் என தெரிகிறது. இது இஸ்ரவேலுக்கும் மொசாட்டுக்கும் தொடர்பு இல்லை என கூறுவது போன்றதாகும்.
 சட்டப்படி ஆதாரம் இல்லாவிட்டாலும் மனச்சாட்சியின்படி ஆதாரம் உள்ளதா இல்லையா என்பதுதான் எமது கேள்வி. பாராளுமன்ற உறுப்பினரான ரிசாத் பதியுதீன் மனச்சாட்சிப்படி அங்கு ஏன் பேசவில்லை என்பதுதான் எமது குற்றச்சாட்டு.
பாராளுமன்றத்தில் பேசவில்லை என்பதற்காக அமைச்சர் மீது பழி போடலாமா என ஹமீத் கேட்டுள்ளார். இதன் மூலம் பாராமன்றத்தில் இவர்கள் பேசவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார். மகிழ்ச்சி. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஏன் அங்கே பேசத்தயங்குகிறார்? ஒரு சட்டத்தரணியை நாம் நீதிச்சபைக்கு அனுப்பி அங்கு எமக்காக பேசுங்கள் எனக்கூறி அனுப்பினால் அங்கு பேசாமல் வெளியில் வந்து பேசினால் அவர் தனது கடமையை சரியாக நிறைவேற்றியவாராவாரா? அமைச்சரவையில் வைத்து அமைச்சர் சம்பிக்கவுடன் பேசியதெல்லாம் அமைச்சர்களால் வழங்கப்பட்ட தகவல்களே தவிர ஊடகவியலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல. அமைச்சரவை கூட்டத்துக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது செயலாளரான ஹமீதுக்கு தெரியாது போலும். ஏன் இதே சம்பிக்கவுக்கு பாராளுமன்றத்தில் வைத்து பதில் தந்திருக்க முடியாது? சம்பிக்க வெளியில் வந்து பகிரங்க கூட்டத்தில் ஹலாலை கடுமையாக எதிர்த்தார். ஆனால் எமது அமைச்சர்கள் ஒரு ஊடக மாநாட்டை நடாத்தியாவது சம்பிக்கவின் கூற்றை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கண்டித்தனரா?
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது மாவட்ட மக்களுக்காக சிறந்த சேவை செய்கிறார் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்து இல்லை. இன்றிருக்கும் அமைச்சர்களில் தனக்கு வாக்களித்த மக்களை மறக்காதவர் என்பதும் எமக்குத்தெரியும். தனிப்பட்ட வகையில் எனக்கும் அமைச்சருக்கும் இடையில் எந்த மனத்தாங்கலும் இல்லை. அதற்காக முஸ்லிம்களின் பொதுவான விடயங்களை கண்டு கொள்ளாமல் விட்டதை விமர்சிக்காமல் இருக்க முடியுமா? நமது எதிரி தவறு செய்தால் கண்டிப்பது நமது நண்பர் தவறு செய்தால் கண்டு கொள்ளாமலிருப்பது என்பதை ஒரு முஸ்லிம் செய்ய முடியாது. இப்படித்தான் இன்று பலரும் இருக்கின்றனர்.
கல்முனையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ. ஆர். ஏம். மன்சூர் தனது தொகுதிக்கு மிகச்சிறந்த சேவைகளை செய்திருந்தார். ஊழலே அற்ற மனிதராக அவர் வாழ்ந்ததால் இன்று அவரது மகன் இன்னொரு அமைச்சருக்கு பைல் தூக்கித்திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மக்களை ஏமாற்றி பணம் சேர்க்கவில்லை என்பது தெரிகிறது. அப்படியிருந்தும் முஸ்லிம்கள் பற்றி அவர் பாராளுமன்றத்தில் பேசவில்லை என மறைந்த தலைவர் அஸ்ரப் அடிக்கடி பத்திரிகை அறிக்கை விட்டார் என்பது ஹமீதுக்கு தெரியாதா? அத்துடன் இதே காரணத்துக்காக முஸ்லிம் காங்கிரசார்; அமைச்சர் மன்சூரின் வீட்டுக்கு குண்டும் வீசினார்கள். அவர் மௌனமாக இருந்தால்; குற்றம் இன்றைய அமைச்சர்கள் மௌனமாக இருந்தால் குற்றம் இல்லையா? இதனை நாம் சுட்டிக்காட்டி விமர்சித்தால் வீண் பழி போடுகிறோமா?
இஸ்லாத்தில் வீண் பழி போடுவதுதான் குற்றமே தவிர ஆதாரப+ர்வமாக குற்றச்சாட்டு வைப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. தொழுகையில் ஒரே சூராவை தொடராக ஓதுகிறார் என ஓர் இமாம் பற்றி நபியவர்கள் முன்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அது கேட்ட நபியவர்கள் ஏன் ஒரு இமாமின் மீதே பழி போடுகிறாய் என திருப்பிக்கேட்டார்களா? இல்லை. மாறாக சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரித்தார்கள். இது போன்று பல சம்பவங்கள் உள்ளன. இஸ்லாத்தின் சில விடயங்களை மட்டும் படித்து விட்டு அதனை மேற்கோள் காட்ட முனைய வேண்டாம்.
அம்பை எய்தவர்கள் யார் என்பது நன்கு தெரிந்த நிலையில் நாம் சட்ட நடவடிக்கை எடுக்கலாமே என ஹமீத் கூறியுள்ளார். நாம் பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட கட்சியல்ல. வங்கிக்கணக்கே இல்லாத ஒரேயொரு முஸ்லிம் கட்சி நாம்தான். தேர்தல் கமிசனர் கூட இது பற்றி ஆச்சர்யப்பட்டார். அப்போது நாம் அவரிடம் கூறினோம் எம்மிடம் இருப்பது பணம் அல்ல, ஆண்டவன் தந்த அறிவுதான். அதற்கு வங்கி தேவையில்லை மூளை போதும் என்று.  சட்டத்தை நாட வசதிகள் எம்மிடம் இல்லைத்தான். இருந்திருந்தால் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுத்திருப்போம். கொலை செய்தவனுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றம் என்கிறது சட்டம். பள்ளிவாயல்கள் தாக்கப்பட்ட போது அதனை பார்த்துக்கொண்டிருந்த அரசும் அதற்கு ஒத்துழைத்த முஸ்லிம் கட்சிகளும்  குற்றவாளிகளா இல்லையா என்பது மனச்சாட்சியுள்ள அனைவருக்கும் தெரியும். எம்மிடம் சட்ட நடவடிக்கை எடுக்க வசதி இல்லை என்பதனால்த்தான் மக்களின் நீதி மன்றத்தில் கூறியுள்ளோம். எமது குற்றச்சாட்டு சரியா பிழையா என்பதை மக்கள் என்ற நீதிபதிகள் பதில் சொல்லட்டும். நாம் அமைச்சரின் மீது எந்தப்பழியும் போடவில்லை. தனிப்பட்ட வகையில் அவரது எந்தக்குறையையும் நாம் தேடவும் இல்லை. பொது விடயத்தில்;  குற்றம் சொல்லியுள்ளோம். பாராளுமன்றத்தில் பேசவில்லை என்ற குற்றச்சாட்டை ஹமீத் எற்றுக்கொண்டுள்ளதன் மூலம் எமது குற்றச்சாட்டு உண்மை என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அல்ஹம்து லில்லாஹ்.
“தம்புள்ள பள்ளி தாக்கப்பட்ட போது அங்கு அமைச்சர் ரிசாத் சென்ற”தாக ஹமீத் கூறியுள்ளதன் மூலம் தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்டது என்பதை இவர் ஏற்றுக்கொள்கிறார். அப்படியாயின் எந்தப்பள்ளியும் தாக்கப்படவில்லை என அரசு பாராளுமன்றத்தில் கூறிய போது ஏன் அமைச்சர் ரிசாதை போன்ற அமைச்சர்கள் இக்கூற்றை உடனடியாக மறுக்கவில்லை? ஏன் இதற்காக அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை? ஒருவனை அடிக்க, அடித்தவனுக்கு ஒத்துழைப்பும் கொடுத்து விட்டு  காயத்துக்கு மருந்து போட்டதை பற்றி ஹமீத் வக்காலத்து வாங்குகிறார். நாம் ஏன் அடித்தீர்கள்? ஏன் அடித்தவரின் செயலை மறைத்து அநியாயத்துக்கு துணை போகிறீர்கள் என்றுதான் கூறுகிறோம்.
நடைமுறையில் நாம் காணும் செயல்களுக்கு எதனையும் உதாரணமாக கூறலாம். அறபு மொழியில் பல விடயங்களுக்கு ஜாஹிலிய்யா கால சம்பவங்கள் உதாரணமாக காட்டப்படுவதுண்டு. அதற்கு இஸ்லாத்தில் தடையில்லை. நபியவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஏன் ய+தர்கள் செய்ததை போன்று நீங்கள் செய்கிறீர்கள் என கேட்டுள்ளார்கள். யூத நசாராக்கள் தங்கள் இறை நேசர்களின் கப்றுகளை வணங்குமிடமாக மாற்றியது போன்று நீங்களும் செய்ய வேண்டாம் என கூறியுள்ள ஹதீத் பிரபல்யமானது. அதற்காக அன்னார் ய+தர்கள் செயலை ஈமான் கொண்டார்கள் என்பதா? இதே போன்றுதான் கர்ணன் கதையை கூறினேன். நாம் தமிழ் பேசுபவர்கள் என்பதால் தமிழ் கதைகளை உதாரணம் கூறுவதில் எந்தத்தப்பும் இல்லை. அதற்காக அந்தக்கதையை நாம் ஈமான் கொண்டதாக ஆகாது. கடமையை செய் பலனை எதிர் பாராதே என்றுதான் நாம் அரசியல் செய்கிறோம் என்பது ஹமீதின் மனச்சாட்சிக்கு தெரியும்.
அடுத்தவன் மீது தேடித்தேடி குறை சொல்வது என்பது ஒருவன் தனிப்பட்ட வகையில் மூடிய அறைக்குள் செய்யும் குற்றத்தை தேடித்திரிவதைத்தான் குறிக்கிறது. இதையே இஸ்லாம் தடுக்கிறது. அதே நேரம் ஒருவன் பகிரங்கமாக குற்றம் செய்தால் அவர் மீது குற்றம் சாட்டுவது ஒரு முஸ்லிமின் கடமை என்பதை இஸ்லாம் மிகத்தெளிவாக சொல்கிறது. அதிலும் ஒரு சமூகத்தையே பகிரங்கமாக ஏமாற்றும் போது அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதுதான் குற்றமாகும்.
ஒரு முறை நபிகளார் ஒரு வியாபாரியை கண்டபோது அவரது கூடைக்குள் கைவிட்ட போது மேலே நல்லதும் கீழே ஈரமுமாக இருந்ததைக்கண்டு யார் எம்மை ஏமாற்றுகின்ராரோ அவர் எம்மை சார்ந்தவரல்ல என கண்டித்தார்கள்.  இங்கு நபியவர்கள் அந்த வியாபாரியின் குறையை கண்டு பிடிக்க கூடைக்குள் கைவிட்டு துருவித் துருவி ஆராய்ந்தது குற்றமா? இல்லை. இது அந்த மனிதனின் தனிப்பட்ட குற்றம் அல்ல. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் என்பதால் இதனை பகிரங்கமாக கண்டித்தார்கள். இன்று சுய நல அரசியலால் ஒரு சமூகமே ஏமாற்றப்படும் போது அதனை கண்டும் காணாமல் இருக்கும்படித்தான் இஸ்லாம் சொல்கிறது என ஒருவன் நினைத்தால் அவன் தன்னை முஸ்லிம் என அழைத்துக்கொள்ள தகுதியற்றவன்.
எது நடந்ததோ அல்லது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர்களோடு ஒட்டித்திரிபவர்களுக்கும். வஸ்ஸலாம்.  
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் மக்கள் கட்சி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar