BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வால்?


அரசின் வாலாக தேசிய சுதந்திர முன்னணி செயற்படும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாலாக செயற்படுவதாக முஹம்மட் முஸம்மில் கூறுவது நகைச்சுவையான  கூற்றாகும்
என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் பேசும் மக்களின் விடுதலை போராட்டத்தில்  விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை அரவணைத்துச்செல்லாமையே அவர்களின் அழிவுக்கு பிரதான காரணம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அதே தவறை இன்றைய அரசாங்கமும் செய்வதனை பார்த்துக்கொண்டு அரசால் ஆட்டுவிக்கப்படும் வாலாக செயற்படும் கட்சியின் உறுப்பினர் முஸம்மில் இவ்வாறு கூறுவது அண்ணாந்து பார்த்துக்கொண்டு துப்புவதாகும்.

எம்மைப்பொறுத்த வரை ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ், இந்த அரசாங்கத்தின் வாலாகவே செயற்படுகிறது என்பதே உண்மையே தவிர த. தே. கூட்டமைப்பின் வாலக அல்ல. அதனால்த்தான் எந்தப்பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என்ற அரசின் கருத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்ததோடு, ஹலாலை ஒழித்த அரசின் நடவடிக்கைக்கும் வாலாட்டிய முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் த. தே. கூட்டமைப்பின் அருகே நெருங்க முடியாத அக்கட்சியை கூட்டமைப்பின் வால் என கூறுவது சிரிப்பை தருகிறது.

விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களுக்கு பல அநியாயங்கள் செய்தார்கள் என்பதற்காக அவர்கள் உங்களது காணிகளை பறிக்கலாம் நாங்கள் மட்டும் பறித்தால் குற்றமா என்பது போல் அரச தரப்பு நடந்து கொள்வது நியாயமாகாது. காத்தான்குடி, ஏறாவூர் கல்முனை என அனைத்து ஊர்களிலும் புலிகள் முஸ்லிம்களை தாக்கியுள்ளார்கள். இச்செயல்கள் மூலம் அவர்களை முஸ்லிம் சமூகம் எதிரிகளாக பார்த்ததனாலேயே   அவர்களுக்கெதிரான யுத்தத்துக்கு எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக துணை நின்றது. புலிகள் ஒழிக்கப்பட்டதும் அடுத்த இலக்கு முஸ்லிம்களே என கூறப்பட்ட போதும் ஜனாதிபதி இதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டார் என்று நம்பினோம். அந்த நம்பிக்கை வீண் போன நிலையெ இன்று காணப்படுகிறது.

ஆனால் முஸ்லிம்களின் உரிமைக்குரல் என கூறி அதிக வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசுக்கு வாலாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து விடயங்களுக்கும் துணை போகிறது. இந்த ஏமாற்று வித்தையை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கவே அக்கட்சியின் செயலாளர், மற்றும் கீழ் மட்ட உறுப்பினர்களை பயன்படுத்தி அரசாங்கத்தை நேராக குற்றம் சாட்டாமல், காணி பறிபோகிறது என்றும் பொது பலசேனா அநியாயம் செய்கிறது என்றும் பேச வைத்து துக்ளக் நாடகம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் இருந்த போது த. தே கூட்டமைப்பு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது உண்மை. அதற்காக புலிகள் இல்லாத நாட்டின் இன்றைய அனைத்து பிரதேசங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் மீண்டும் பழைய புலி பல்லவி பாடுவதும், புலிகளின் பழைய கதைகளை சொல்லி தமிழ் மக்களின் ஜனநாயக தெரிவான தமிழ் கூட்டமைப்பை கொச்சைப் படுத்து முனைவதும் ஜனநாயக விரோத செயலாகும்.  அவ்வாறு கொச்சைப்படுத்துவது சரியாயின் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் ஒரு காலத்தில் ஆயுதம் தூக்கிய ஜே வி பியின் உறுப்பினர்தான் என்பதை மறந்து விட முடியாது. ஜே வி பியினர் தென்னிலங்கையின் பலநூறு அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக்கொன்றமை முஸம்மிலுக்கு தெரியாதா என்று நாம் கேட்கிறோம்.

இன்று முஸ்லிம்கள் பல இன்னல்களை அனுபவிக்கும் நிலையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் த. தே. கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்றுவது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. இத்தகைய செயற்பாட்டுக்கு தென்னிலங்கையை தலைமையாகக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் முன் வராது என்பதே உண்மை.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar