BREAKING NEWS

சிங்கள பௌத்த அரசாங்கத்தை முறியடிக்க சிறுபான்மை மக்கள் ஒன்று பட வேண்டும்

அரசாங்க கட்சிக்கு ஆதரவு வழங்கும் கிழக்கு மாகாண சபை அமைச்சரின் இணைப்பாளராக இருந்து கொண்டு சிங்கள பௌத்த அரசாங்கத்தை முறியடிக்க சிறுபான்மை மக்கள் ஒன்று பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் அப்துல் மஜீத் கூறுவது சிறுபிள்ளைத்தனமானதாகும்
என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
 
இன்றைய சூழலில் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் ஆப்பு இழுத்த குரங்கு போல் விழி பிதுங்கி என்ன பேசுவது எதனைப்பேசுவது என்ற சிந்தனையின்றி தினமும் உளறுவதை அன்றாடம் ஊடகங்களில் காணலாம். ஒரு மாதத்தில் அரசாங்கத்துக்கு பாடம் படிப்பிப்போம் என செயலாளர் கூறுவார். அடுத்த தினங்களில் அரசாங்கம் விரட்டாத வரை வெளியேற மாட்டோம் என்பார். அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் காவடி ஆட மாட்டோம் என தலைவர் கூறுவார் அடுத்த கணம் அரசாங்கத்தை தலையில் வைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடுவார்.

அதே போல் பொதுபல சேனா விடயத்தில் தாங்கள் மௌனம் காத்ததன் மூலம் சிங்கள முஸ்லிம் கலவரத்தை தடுத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறுகிறார். மௌனம்தான் இவர்களின் மொழி என்றால் ஏன் அரசியலுக்கு வந்துள்ளார்கள் என்பது புரியவில்லை. அதே போல் சிங்கள பேரினவாதத்துக்கெதிராக ஜிஹாத் செய்ய முன் வரவேண்டுமென ஜவாத் கூறுகிறார். இந்தக்கட்சியில் ஒட்டியிருந்தால்த்தான் ஏமாந்த மக்களை இன்னமும் ஏமாற்றி வாக்குகள் பெறலாம் என்ற தமது சுயநலத்திற்கெதிராக முதலில் ஜிஹாத் செய்யாமல் மக்களை ஜிஹாத் செய்ய அழைக்கிறார். இதே போன்று இக்கட்சியின் தலைவர் அரசாங்கம் தமது கட்சியை ஓரங்கட்டுகிறது என்கிறார் இன்னொரு சமயம் அரசாhங்கம் சரியான பாதையில் செல்வதாக முரண்பட்டு கூறுகிறார்.

    இவ்வாறு சீரான அரசியல் கொள்கை ஒன்று இல்லாமல் சுயநலம் என்ற ஒரேயொரு கொள்கையை மட்டும் வத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்றி வருவதின் இன்னொரு கட்டம்தான் பிரதி தலைவர் அப்துல் மஜீதின் மேற்படி கருத்தாகும். இந்த சிங்கள இனவாத அரசாங்கத்துக்கெதிராக சிறுபான்மை மக்கள் ஒன்று பட வேண்டும் என அழைக்கும் இவர் தனது கருத்து என்னவென்பதில் தெளிவானவராக இருந்தால் அரசுக்கு ஆதரவான அமைச்சரின் இணைப்பாளராக இருப்பது பொருத்தமானதா என கேட்கிறோம். அந்தப்பதவியையும் இவர் போராடியே பெற்றார். அதே போல் மாகாண சபைகளிலும், பாராளுமன்றத்திலும் இந்த அரசாங்கத்துக்கு முழுமையான அடிமைகளாக முட்டுக்கொடுத்துக்கொண்டு அரசுக்கெதிராக ஒன்றுபட சிறு பான்மை மக்களை அழைப்பது மிக மோசமான ஏமாற்று வேலையும், சிறு பி;ள்ளைத்தனமுமாக தெரிகிறது.

ஆகவே மு. காவினர் அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றுவதை விடுத்து முஸ்லிம் மக்கள் எதிர் நொக்கும் பிரச்சினைகளுக்கு தமது கொள்கை என்ன என்பதை இவர்கள் முதலில் கற்றுக்கொண்டு அதன் பின் அறிக்கை வெளியிட முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar