BREAKING NEWS

பஸீர் சேகுதாவுத் வெளியிட்ட கருத்தே மேயர் விவகாரம் பூதாகரமாக வெடிக்கக் காரணமாக அமைந்தது

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் பஸீர் சேகுதாவுத் வெளியிட்ட கருத்தே மேயர் விவகாரம் பூதாகரமாக வெடிக்கக் காரணமாக அமைந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவரும் முன்னாள் வட-கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முழக்கம் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர புதிய முதல்வர் நிசாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  கட்சியின் உச்ச பீட உறுப்பினர் ஏ.சி.சத்தார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதீதியாக கலந்து கொண்டார்.  அங்கு அப்துல் மஜீத் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;  “மேயர் நிசாம் காரியப்பர், அஷ்ரப் அவர்களின் பாசறையில் அரசியல் கற்றவர். அவருக்கும் எனக்குமுள்ள தொடர்பு இருபத்து ஒன்பது வருடங்களாகும்.  இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி முஸ்லிம் காங்கிரஸுடன் கலந்துரையாடும் சந்திப்பொன்று கல்முனை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள தலைவர் அஷ்ரப் அவர்களின் இல்லத்தில் (1984.05.26) நடைபெற்றது.  அதில் அன்றைய தமிழ் தலைவர்களான அமரர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் உட்பட இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அக்கலந்துரையாடலில் நிசாம் காரியப்பரை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்போது அவர் சட்ட பீட மாணவராக இருந்தார்.அன்று தொடக்கம் இன்று வரை நாங்கள் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிப் பணியில் ஒன்றாக பயணித்து வருகிறோம்  அது மட்டுமல்ல தலைவர் அஷ்ரப் முன்வைத்த கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் வென்றெடுக்கும் பதவியிலும் நாம் கருத்தொருமை கண்டவர்களே.  2011.ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் நானும் ஒரு வேட்பாளராக நியமிக்கப்பட்டேன்.  கட்சியின் தலைவர், செயலாளர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ஆகியோரும் தேர்வு குழுவில் இடம்பெற்றிருந்தனர். நிசாம் காரியப்பர் அவர்களை கல்முனை மாநகரின் மேயராகவும் என்னை பிரதி மேயராகவும் நியமிக்க முடிவு செய்துள்ளதாக எனக்கு வாக்குறுதி வழங்கினர்.  சாய்ந்தமருதில் தேர்தல் பிரச்சார மேடை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. தலைவர் ரவூப் ஹக்கீம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கல்முனை பிரதேச அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து தலைவர் ஹக்கீம் தவிர்ந்து கொண்டார். ஆனால் அவருக்கு பதிலாக கட்சியின் தவிசாளர் பசீர் சேவுதாவுத் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அவரது உரையானது நிசாம் காரியப்பருக்கும் எனக்கும் கட்சி தலைமை அளித்த வாக்குறுதிக்கு மாறாக அமைந்திருந்தது. தெரிவு வாக்கின் அடிப்படையில் மாத்திரமே மேயர், பிரதி மேயர் தெரிவு இடம்பெறும் என்றும் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் இவ்வாக்குறுதியை அளிக்கிறேன் என்றும் அதிகார பூர்வமாக மேடையில் வைத்து அறிவிப்பு செய்தார்.  இந்த தன்னிச்சயான அவரது அறிவிப்பினால் தான் கல்முனை- சாய்ந்தமருது பிரதேசங்கள் இரண்டுபட்டு பிரதேசவாதம் தனைவிரித்தாடியது.  அதனால் கட்சியை முன்னிலைப்படுத்தி கொள்கைக்காக உழைக்கும் போராளிகள் தோற்கடிக்கப்பட்டு- அரசியல் சந்தர்ப்பவாதிகள் சிலர் வெற்றி பெற்றனர்.  தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டதன் பின் சாய்ந்தமருதில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தேர்தல் வெற்றி குறித்து தவிசாளர் பஷீர் சேவுதாவுத் பத்திரிகைக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருவதாகவும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தேர்தலில் யார் வெற்றி பெற்றனர் யார் தோல்வி அடைந்தனர் என்பதற்கப்பால் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பது சாரம்சமாக அமைந்திருந்தது.  கொள்கையும் இலட்ச்சியமும் கொண்ட ஒரு அரசியல் கட்சியின் தவிசாளரின் அறிக்கை எவ்வாறு அமைந்திருக்க வேண்டுமோ அவ்வாறு அமையாமல் படுமோசமான அரசியல் சந்தர்ப்பவாதிகளின் அறிக்கை போல் அமைந்திருந்தது.  தலைவர் அஷ்ரப் இன்று உயிருடன் இருந்திருந்தால் நான் அரசியல் அதிகாரம் பெற்றவனாக திகழ்ந்திருப்பேன். கட்சியின் இலட்சியங்களை தோழ் மீது சுமந்து கொண்டு கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் புறம் தள்ளப்பட்டு சந்தர்ப்பவாதிகள் முன்னிலைப்படுத்தப்படும் போக்கு தொடருமானால் கட்சியின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.  நிசாம் காரியப்பர் நவம்பர் மாதமொன்றில் கல்முனை மாநகர முதல்வராக கடமையேற்றுள்ளார். நவம்பர் மாதம் என்பது கட்சியின் வரலாற்றுடன் பின்னிப்பனைந்து நிற்கும் ஒரு மாதமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியற் கட்சியாக பிரகடணம் செய்யப்பட்டது இந்த மாதத்தில் தான்” என்றும் குறிப்பிட்டார்.  இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், மு.கா. மூத்த துணைத் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அசீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.றக்கீப், ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், உமர் அலி, எம்.எம்.முஸ்தபா உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar