முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர் ஒருவர் மேயரா கி விடுவார்
Posted by
aljazeeralanka.com
on
December 23, 2013
in
|
கடந்த கால தேர்தல்களில் கல்முனை முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர் ஒருவர் மேயராக வந்து கல்முனையை அபரித்து விடுவார் என்று முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தோர் பூச்சாண்டி காட்டி இனவாதம் பேசியே கல்முனை தேர்தல்களில் வென்று வந்தததன் காரணமாகவே இன்று தமிழர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் கல்முனை தமிழ் மக்களையும் இணைத்து ஒரு பொதுவான கூட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர் ஒருவரும் மேயராக இருக்க சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தால் இன்று கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற பேச்சுக்கள் எழுந்திருக்காது. உண்மையில் தற்போதுள்ள கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் பிரதேச செயலகம்தானே தவிர சிங்கள செயலகம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு தமிழ் மொழியிலேயே அனைத்து காரியங்களும் நடை பெறுகின்றன. அப்படியிருந்தும் தமிழ் பிரதேச செயலாளர் ஒருவர் தமக்கு இருக்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர் பார்ப்பதுதான் இங்கு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்கும் நிலையில் அம்மாகாணத்தில் முஸ்லிம்கள் பாதிப்பின்றி வாழ்ந்தார்கள் எனும் போது கல்முனை மேயராக ஒரு தமிழர் வந்தால் என்னதான் அநியாயம் நடந்து விடப்போகிறது என முஸ்லிம்கள் சிந்திக்கக்கூட மு. காவினர்; விடவில்லை.
இன்று கிழக்கு மாகாண சபையில் ஒரு முஸ்லிம் இருப்பது போல் கல்முனை மாநகர மேயராக ஒரு தமிழர் வரக்கூடிய வழி வகை எதுவுமே இல்லை என்ற காரணத்தினாலேயே தமிழர் தரப்பு தமக்கென தனியான பிரதேச செயலகத்தை உருவாக்கி அதனை பிரதேச சபையாக மாற்றி தாமும் ஆள வேண்டும் என நினைத்து செயற்படுகிறார்கள். அவர்கள் இதற்கான முழு முயற்சிகளையும் செய்து கொண்டிருந்த போது குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த ஹக்கீமும் ஹரீசும், அரசு இதனைத்தர முயற்சித்த போதுதான் முழித்துக்கொண்டு அலறியிருக்கிறார்கள். அதுவும் இப்படியானதொரு முயற்சி நடக்கிறது என அரச தரப்பினர் இவர்களிடம் கூறும் வரை இவர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கவில்லை என்பதன் மூலம் முஸ்லிம் அரசியல் எத்தகைய படுபாதாளத்தில் இருக்கிறது என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியும்.
கல்முனையை பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரசோ, தமிழ் தேசிய கூட்டமைப்போ போட்டியிடாமல் இவ்விரு கட்சிகளும் மற்றும் இதற்கு உடன்படும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து பொதுக்கட்சி ஒன்றை நிறுத்தி போட்டியிடும் நிலை வருமானால் நிச்சயம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமை ஏற்படும். அவ்வாறு அப்பொதுக்கட்சி வெல்லும் பட்சத்தில் முதல் இரண்டு வருடங்களுக்கு தமிழர் மேயராக இருக்க முடியும் என்று கூட சொல்லலாம். நிச்சயம் அந்த தமிழ் மேயர் தானே தொடர்ந்தும் பதவியில் இருக்கப்போகிறேன் என அடம்பிடிக்க மாட்டார் என்பதை எம்மால் உறுதியாக கூற முடியும். இவ்வாறான சின்னப்புத்தி பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருந்துள்ளதை வரலாறு தெளிவாக சொல்கிறது.
ஆகவே இந்த விடயம் பற்றி கல்முனையில் உள்ள முஸ்லிம், மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை கல்முனைக்கு அழைத்து தமிழ் பேசும் மக்களின் தானைத்தலைவர் என முஸ்லிம் காங்கிரசால் கிரீடம் சூட்ட முடியுமானால் ஏன் தமிழர் ஒருவர் கல்முனை மேயராக வருவதை மட்டும் அனுமதிக்க முடியாது? இவ்வாறு முடியுமாயின் நிச்சயம் இதற்கு தமிழ் மக்கள் உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. ஆனால் முஸ்லிம் காங்கிரசினர் முன் வருவார்களா என்பதுதான் சந்தேகமானது.