உயிரிழந்த பிரதேச சபை தலைவர் டானியல் ரெக்ஷிசனின் மனைவி எனிட்டா ரெக்சிசன் மற்றும் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரான க. கமலேத்திரனின் அலுவலக உதவியாளரான லண்டன் சசீந்திரன் ஆகிய இருவருமே இச்சம்பவத்தில் மேலும் கைது செய்யப்பட்டவர்களாவர்.
பிரதேச சபை தலைவர் டானியல் ரெக்ஷிசன் கொலை செய்யப்பட்ட விடயத்தை அவரது மனைவி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த போதிலும் அது தற்கொலையென அவர் மூடி மறைக்க முற்பட்டமை பொலிஸ் விசாரணைகள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளதெனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.
இதேவேளை, பிரதேச சபை தலைவர் டானியல் ரெக்ஷிசனின் மனைவியான எனிட்டாவு க்கும் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு மிடையே இருந்து வந்த கள்ள தொடர்பின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாமென ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரான டானியல் ரெக்ஷிசன் (44) கடந்த 26ம் திகதி புங்குடுதீவிலுள்ள அவரது வீட்டிற்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதன்போது அவரது தலையில் காயம் காணப்பட்டது. மரண விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், கணவனின் மரணம் குறித்து மனைவியிடம் வாக்கு மூலம் பெற்ற போது, தனது கணவரான டானியல் ரெக்ஷிசன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறிய மனைவி, மரணத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிப்பதற்கு எவரும் இல்லையெனவும் அவர் பொலிஸாரிடம் உறுதியாகக் கூறினார்.
இதன்போது, இவரது மரணம் கொலையென நிரூபணமானது. டானியல் ரெக்ஷிசனின் தலையில் காணப்பட்ட காயம் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதெனக் கண்டறியப் பட்டதுடன் ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கியின் சன்னமொன்றும் அவரது தலைக்குள்ளிருந்து மீட்கப்பட்டது.
வைத்திய அறிக்கையினைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவியுடன் கடந்த 29ம் திகதியன்று விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன் ஐந்து நாட்களுக்குள் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதாக திடசங்கற்பம் பூண்டிருந்தனர். இதற்கமைய, பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் மனைவி தனது கணவனின் கொலை குறித்து ஏற்கனவே அறிந்து வைத்திருந்த உண்மை தெரியவந்துள்ளது. வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரான க.கமலேந்திரன், அவரது அலுவலக உதவியாளரான லண்டன் சசீந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டிற்கு சென்று தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.