(vi) ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபை நன்மையானதும்
செயற்றிறன் மிக்கதுமென பௌத்த பீடம் ஏற்றுக்கொள்ளுமேயானால்
மாத்திரமே தலைமைத்துவ சபையில் இணைந்து செயலாற்றுவேன் என்று ஐ. தே. க.
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கட்சி ஆதரவாளர்களை சந்தோஷத்திற்கு உள்ளாக்கும் நோக்குடன் போலியான
மறுசீரமைப்புக்களை செய்வதால் கட்சி இன்னும் தோல்வியை நோக்கியே
செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையில் ஆரம்பத்தில்
நியமிக்கப்பட்டதன் பிற்பாடு தலைமைத்துவ சபையிலிருந்து நான்
விலகிய போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எனக்கெதிராக
முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் அன்றிருந்த முடிவினை மீள்பரிசீலனை செய்வதை காலத்திற்கு உகந்தது என்றே நம்புகிறேன்.
இதேவேளை 65 வருட பழைமையான ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின் படி
அதிகாரமிக்க தலைவரொருவர் இருக்கையில் குறித்த தலைவரின்
அதிகாரத்தை மீறிய சபையொன்று தேவையற்றது என்றே நான் எண்ணுகிறேன்.
இவ்வாறான செயற்பாட்டினால் கடந்த தேர்தல்களில் தோல்வியடைந்தது போன்று
கட்சி மீளவும் தோல்வியை நோக்கியே செல்லும் இதனால் கட்சி செயற்றிறனற்ற
நிலைமைக்கு தள்ளப்படும்.
இந்நிலையில் கட்சியின் நிலைமைகளை சீர் செய்வதற்காக பௌத்த சங்க
பீடம் தலையிட்டமை நன்மை பயப்பதாகவே நான் கருதுகின்றேன். இதனூடாக
பிளவடைந்துள்ள கட்சி ஒன்றிணைவதே ஆதரவாளர்களின்
அபிலாஷையாகவுள்ளது. கட்சி தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்விகளை
சந்தித்துவரும் நிலையிலேயே மேற்படி தலைமைத்துவ சபை
உருவாக்கப்பட்டது. எமது கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல
வேண்டுமாயின் அனைத்து அதிகாரத்தையும் உள்ளடக்கிய தலைமைத்துவ சபையே
தேவைப்படுகிறது.
இத் தறுவாயில் பெளத்த சங்க பீடத்தின் முன்னிலையில் நானும் கரு
ஜயசூரியவும் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறியே 4 ஆம் திகதி
தலைமைத்துவ சபை உருவாக்கப்பட்டது. அவற்றில் முக்கிய விடயங்கள்
செயற்படுத்தப்படவில்லை. மேற்படி தலைமைத்துவ சபையில் இணைந்து
எவ்வாறு செயலாற்ற முடியும் இதனால் நாங்கள் பொறுப்புடன்
செயற்பட்டாலேயே கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் ஏமாற்றமடைவதனை
தடுக்க முடியும். இந்நிலையில், மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக
செயற்பட்டால் கட்சி தோல்வி அடைவதை தடுக்க முடியாது ஆகையால் மக்களுக்கு
துரோக மிழைக்காமல் சரியான மாற்றமொன்றை ஏற்படுத்துவதே
தேவையாகவுள்ளது.
தற்போது சர்வாதிகார போக்குடன் செயற்படும் மோசடிமிக்க
இவ்வரசாங்கத்தின் செயற்பாட்டை கடந்த மாகாண சபை தேர்தலின் போது
மக்களிடம் எடுத்துச்சென்று குறித்த தேர்தலின் வெற்றிக்காக முயற்சி
எடுத்தமையை எவரும் மறக்க முடியாது.
இந்நிலையில் கட்சியை தோல்வியி லிருந்து மீட்பதற்காக பௌத்த சங்க பீடம்
பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில் சங்க பீடம் ஐக்கிய தேசிய கட்சியின்
தலைமைத்துவ சபையை ஏற்றுக் கொள்ளுமேயானால் தான் நிச்சயமாக தலைமைத்துவ
சபையில் இணைந்து செயலாற்றுவேன் என்றார்.