BREAKING NEWS

அமைதிப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்கு ஜோன் கெர்ரி அழுத்தம்

அமெரிக்காவின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெர்ரி இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இஸ்ரேல், பலஸ்தீன தலைவர்களை நேற்று சந்தித்த கெர்ரி மேற்குக்கரைக்கான பாதுகாப்புத் திட்டம் தொடர்பிலான எல்லைக்கோடொன்றை முன்வைத்துள்ளார். கடந்த ஜுலை மாதம் ஆரம்பமான இரு தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் கெர்ரி நேரடியாக தலையிடும் முதல் சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இழுபறிக்கு உள்ளாகி இருந்த இஸ்ரேல்- பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் பாரிய அழுத்தம் காரணமாகவே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்கொண்டு செல்ல ஜோன் கெர்ரி அடிக்கடி மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டு வருவதோடு நீண்ட தொலைபேசி உரைகளையும் நிகழ்த்தி வருகிறார். எனினும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என தெரியவருகின்றது. உடன்பா டொன்றை எட்டுவதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு, எல்லைகள், ஜெரூசலத்தின் அந்தஸ்து மற்றும் பலஸ்தீன அகதிகள் விடயத்தில் இரு தரப்புக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடு இருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மறுபுறத்தில் இஸ்ரேல் யூத தேசம் என்பதை ஏற்க பலஸ்தீன தலைவர் கள் தொடர்ந்து மறுத்து வருவதாக இஸ்ரேல் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆக்கிரமிப்பு மேற்குக்கரையில் இஸ்ரேல் தொடர்ந்து குடியேற்றங்களை அமைப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இஸ்ரேலின் இந்த தொடர்ச்சியான செயற்பாடு அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar