2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய உறுதிமொழியின் படி விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி பீ. எம். எஸ். பட்டகொட தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் அம்பாந்தோட்டையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வின்போது விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் நன்மைபெறும் ஒரு இலட்சத்து 28,659 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ள விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் மூலம் இவர்கள் நன்மையடையவுள்ளனர்.
18 வயதில் இப்புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு சேரும் ஒருவர் 59 வயதுவரை சந்தாப்பணத்தை செலுத்த வேண்டும். 60 வயது முதல் ஓய்வூதிய கொடுப் பனவுகள் வழங்கப்படும். 1000 ரூபா முதல் 5000 ரூபா வரை 60 வயது முதல் 78 வயது வரை ஓய்வூதியமாக பெறமுடியும் என்றும் மேலதிக செயலர் பட்டகொட தெரிவித்தார்.