உள்ளூராட்சி சபைகளில் வரவு- செலவுத் திட்டம் இனிமேலும் தோற்கடிக்கப்பட முடியாத வகையில் புதிய சட்டத்தில் மீண்டும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
இணையத்தளம் மூலம் வரிப்பணம் செலுத்தும் முறைமையை நேற்று கொழும்பு மாநகர சபையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த முறை வரவு, செலவுத் திட்டத்தை நிறைவேற்ற சில உள்ளூராட்சி மன்றங்கள் தவறியிருந்தன. அதற்கான பிரதான காரணம் அரசியல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தலைவர்களுடன் அதன் உறுப்பினர்கள் கொண்டிருந்த தனிப்பட்ட பகைமை என்றே கண்டறியப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தலைவரை பதவி விலக்க வேண்டு மென்பதற்காகவே பலர் திட்டமிட்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளனர் என்பதும் நிரூபணமாகியுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகள் தொடராத வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம் .
இது தொடர்பில் சட்டவாக்க திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள போதிலும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தே ஆராயப்படுகிறது.
இது தொடர்பில் சட்டவாக்க திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள போதிலும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தே ஆராயப்படுகிறது.
இரண்டாவது தடவையாகவும் திருத்தங்களுடன் முன்வைக்கப்படும் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாத விடத்து குறித்த உள்ளூராட்சி மன்றத் தலைவர் பதவி விலக்கப்படுவார் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது தலைவருக்கெதிரான பகைமையை வெளிக்காட்டி- பழிதீர்க்க இதனை சாதகமாக பயன்படுத்துகின்றார்கள்.
இவ்வாறான தனிப்பட்ட விடயங்கள் செல்வாக்கு செலுத்தப்பட முடியாத வகையிலேயே புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையில் இணக்கப்பாட்டை தோற்றுவிப்பது குறித்தும் நாம் யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். எமக்கு தற்போது போதிய கால அவகாசம் உள்ளதனால் இவற்றை படிப்படியாக ஆராய்ந்து நல்ல தீர்மானங்களை மேற்கொள்வோம்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.