கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்குச் செய்து தருவதாக உறுதியளித்த எதனையுமே செய்யாத அதே அரசியல்வா திகளுக்கு இம்முறையும் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம்.
வெள்ளவத்தையில் ஒரு 30 அடி நீளமான வீதியின் பெயரை மாற்ற முடியாதவர்களுக்கும்,
உறுதியளித்தவாறு ஐந்தாம் குறுக்குத் தெருவில் ஒரு மலசலகூடத்தை அமைத்துத்தர முடியாதவர்களுக்கும் மீண்டும் மீண்டும் வாக்களித்து நீங்கள் ஏன் ஏமாற வேண்டும்? இம்முறையும் அவர்களது பொய்யுரைகளுக்குச் செவிமடுத்து நீங்கள் இவர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் வழமைபோன்று எதிரணியிலிருந்து கொண்டு விதம் விதமான அறிக்கைகளை மட்டுமே விடுவார்கள்.
ஆனால் நான் அப்படியல்லன் வெற்றி பெற்று எண்ணிப் பத்து நாட்களுக்குள் இவ்விரு வேலைகளுடன் இன்னும் பலவற்றைச் செய்து தருவேன். என்னிடம் அதற்கான அரசியல் பலம் உள்ளது என்று மக்களுக்கு உறுதியளிக்கின்றேன் என மேல் மாகாணத்தில் கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளரான கருணாகரன் கந்தசாமி தெரிவித்தார்.
நான் யாரையும் குறை கூறுபவன் அல்லன். அப்படிக் குறை கூறி வெற்றி பெறுவது எனது நோக்கமுமல்ல. நான் உண்மையான யதார்த்தத்தைக் கூறுகிறேன். நான் வெள்ளவத்தையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போது, பலர் என்னிடம் கொழும்பு தமிழ்ச் சங்க வீதியின் பெயர் மாற்றத்தைப் பற்றிக் கூறி அது உங்களால் மட்டுமே முடியும் எனக் கூறினார்கள். அதனாலேயே இந்த உறுதி மொழியை நான் வழங்குகிறேன். யாரையும் தாக்குவது எனது நோக்கல்ல. எனக்கு அதிகாரத்தைப் பெற்று வாக்குகளால் ஆணையைத் தாருங்கள், தந்துவிட்டு உங்கள் குறைகளைக் கூறுங்கள். சகலவற்றையும் தீர்ப்பது எனது கடமை.
அவற்றுள் முதலாவதாக நான் வெற்றிபெற்று எண்ணிப் பத்து நாட்களுக்குள் கொழும்பு தமிழ்ச் சங்க வீதியை ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் மூலமாக அவ்வீதியின் பெயரை மாற்றுவதுடன், நகர திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கூறி ஐந்தாம் குறுக்குத் தெருவில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன மலசலகூடத்துடன் கூடிய குளியல் அறையையும் அமைத்துத் தருவேன் என்பதை பகிரங்கமாக மக்கள் முன் உறுதியளிக்கின்றேன். இல்லாவிடின் எனது மாகாண சபை பதவியை நான் துறப்பேன் எனவும் உறுதியளிக்கின்றேன்.
நான் ஆளுங்கட்சியில் அதிகாரத்துடன் இருப்பதால் என்னால் சாதிக்க முடியும். எதிரணியிலிருந்து எதனையும் பெரிதாகச் செய்துவிட முடியாது என்பது மக்களுக்கு இப்போது நன்கு தெரியும். அரசாங்கத்தை வசைபாடிவிட்டு அந்த அரசிடம் எப்படி உதவி கேட்பது. உள்ளூரில் மட்டுமா வசைபாடல், வெளிநாடுகள் சென்றும் சிலர் இதனைச் செய்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் எதிரணியிலிருந்து எதனையும் செய்ய முடியாது. எனவே ஆளுந்தரப்பில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து என்னை வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் கருணாகரன் தெரிவித்தார்.