BREAKING NEWS

இனவாத பேச்சுக்களை தண்டனைக்குரிய பாரதூரமான குற்றச் செயலாக மாற்ற சட்டம் இயற்றப்படும்?

!


DSC_0156

பொது மக்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடும் படையினருக்கு எதிராக சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், இனவாதத்தை தூண்டும் விதத்தில் வெறுக்கத்தக்கதாக பேசப்படும் பேச்சுக்களை தண்டனைக்குரிய பாரதூரமான குற்றச் செயலாக ஆக்குவதற்கு சட்டம் இயற்றப்ப
ட இருப்பதாகவும், பெண்களுக்கும், இளவயதினருக்கும் எதிராக புரியப்படும் குற்றச்செயல்களுக்கு கூடுதல் தண்டனை விதிக்கக்கூடிய விதத்தில் சட்டத்தின் மூலம் வழிவகைகள் செய்யப்படவுள்ளதாகவும் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (31) முற்பகல் இலங்கை வந்த ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் பிரஸ்தாப திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அடுல் கெஷாப் மற்றும் அவர்களது குழுவினர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சிஸன் ஆகியோருடன் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் பிற்பகல் சந்தித்ததனர்.
இச்சந்திப்பின் போது நாட்டின் குற்றவியல் சட்டம் தொடர்பாகவும், விரைவில் அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் பரவலாக கலந்துரையாடப்பட்டது.
உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், பிரதி உதவிச் செயலாளர் அடுல் கெஷாப் ஆகியோர் அமைச்சரிடமும், அமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டீ சில்வாவிடமும் சில முக்கிய கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.
குறிப்பாக இலங்கையில் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், எரியூட்டல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது பற்றி விசனம் தெரிவித்த நிஷா தேசாய் பிஸ்வால் அவற்றைத் தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருப்பதையிட்டு கவலை வெளியிட்டார்.
அதன் பின்னணியை எடுத்துரைத்த அமைச்சர் ஹக்கீம் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் வணக்கஸ்தலங்கள் மீதான அவ்வாறான தாக்குதல்களுக்கு தூண்டுகோலாய் அமைந்த இனவாதத்தைத் தூண்டும் சிலரின் வெறுப்பூட்டும் பேச்சுக்களின் விபரீதம் குறித்தும் கூறினார்.
இவ்வாறான வெறுப்பூட்டும் இனவாதப் பேச்சுக்களை குற்றவியல் சட்டக் கோவையில் பாரதூரமான குற்றச் செயலாக உள்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறினார். இது பற்றி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதன் முதலில் அரசாங்கத்திற்கு வழியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
குற்றச் செயல்களை நீதிமன்றங்களில் வெளிப்படையாக தெரிவிப்பதற்கு அச்சம் காரணமாக தயக்கம் காட்டும் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சாட்சிகள் விடயத்தில் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமகின்றன என உதவிச் செயலாளர் தேசாய் பிஸ்வால் வினவிய பொழுது பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான உத்தேச புதிய சட்டம் அந்த விடயத்தில் ஒரு திருப்புமுனையாகவும், மைல்கல்லாகவும் அமையுமென அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.
மூன்று தசாப்தகால யுத்தத்தின் விளைவாக வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் செயலிழந்திருந்த நீதிமன்றங்கள் மீண்டும் செயல்பட்டு வருவதாகவும், அண்மையில் சகல வசதிகளுடனும் கூடிய புதிய மூன்று நீதிமன்றக் கட்டடத் தொகுதிகள் வட மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar