BREAKING NEWS

மீன் சந்தைகளை அரசு மூடுமாயின் மாட்டிறைச்சிக்;கடைகளையும் மூடலாம்.- உலமா கட்சி


உரிர்கள் எதனையும் கொல்வது கூடாது என்ற பௌத்த தர்மத்தின் அடிப்படையில் மீன் பிடித்தலையும் அரசாங்கம் முதலில் தடைசெய்யுமாக இருந்தால்   மாடு அறுப்பதற்கான தடையை கொண்டு வர நாம் எதிர்க்கமாட்டோம் என முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி)த்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். மாடு அறுக்கும் நிலையங்களை மூடுவது பற்றிய சிங்கள ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர்; தொடர்ந்து கூறியதாவது,
இந்த நாட்டை பொறுத்தவரை நாம் அறிந்த காலத்திலிருந்த மத விடயங்களில் சகல மக்களுக்குமிடையில் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அண்மைக்காலமாக அதுவும் இன்றைய ஆட்சியில்தான் இத்தகைய மதநிந்தனைகளை காண்கிறோம். 
பௌத்த மதத்தை பொறுத்த வரை அனைத்து உயிர்கள் மீதும் கருணை செலுத்தும்படித்தான் கூறுகிறதே தவிர சில உயிர்கள் மீது கருணையும்; மற்றும் சில உயிர்களை கொல்லலாம் எனவும் சொல்வதாக நான் காணவில்லை. இந்த வகையில் மீனுக்கும் உயிர் இருக்கிறது. அதற்கும் குழந்தை குட்டிகள் இருக்கின்றன. அந்த மீனை கொன்று சாப்பிடுவதை பௌத்த பெரும்பான்மை நாடு என சொல்லிக்கொள்ளும் இந்த நாட்டில் நாம் காண்கிறோம். அதே போல் கோழியும் இறைச்சிக்காக கொல்லப்படுகிறது. இவற்றின் மீது பௌத்த தேரர்களுக்கு கருணை இல்லையா?
அத்துடன் மாடு அறுக்கும் நிலையங்களை பெரும்பாலும் முஸ்லிம்களே நடாத்தி வருகிறார்கள். மாட்டிறைச்சியை சிங்கள மக்கள் உட்பட பெரும்பாலும் முஸ்லிம்களே சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில்  மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்பதாயின் அதனை பௌத்த தேரர்கள் தமது சிங்கள மக்களிடம் சொல்லலாம்.  அதுதான் தர்மம். அதனை விடுத்து முஸ்லிம்கள் விடயத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் பல சாராயக்கடைகள் இருக்கின்றன. உலமாக்களான நாம் சாராயம் குடிக்க வேண்டாம் என எமது மக்களை பார்த்து கூறுகின்றோம். அதே போல் பன்றி இறைச்சி சாப்பிட வேண்டாம் என நாங்கள் முஸ்லிம்களிடம் கூறுகிறோம். அவர்கள்  அதனை ஏற்கிறார்கள். பன்றி இறைச்சி கடைகளை மூடுங்கள் என நாம் உண்ணாவிரதம் இருக்கிறோமா? 
இன்று உலகம் கிராமமாக மாறியுள்ள நிலையில் நமது நாட்டுக்கு அறபு முஸ்லிம்கள் நிறையப்பேர் வந்து செல்கிறார்கள். இங்கு சாப்பிட இறைச்சி இல்லை என அவர்கள் தெரிந்தால் இறைச்சியை பிரதான உணவாகக்கொண்ட அவர்கள் இங்கு வரவே மாட்டார்கள். இதனால் நாட்டுக்குத்தான் நஷ்டம். 
என்னைப்பொறுத்த வகையில் இந்த நாட்டில் உள்ள பல பௌத்த பிக்குகள் மிகவும் நல்லவர்கள், விடயங்களை புரிந்துணர்வுடன் பார்ப்பவர்கள். ஒரு சிலரே இப்பிரச்சினைகளை எழுப்புகின்றனர். அவர்களின் பின்னணியில் அரச சார்பு மொத்த வியாபாரிகள் இருப்பதாகவே எனக்குத்தெரிகிறது. நாட்டில் உள்ள மாடு அறுக்கும் நிலையங்களை மூடி விட்டு வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி கொண்டு வருவதன் மூலம் அவர்களுக்கு பெருத்த இலாபம் கிடைக்கும் என்பதனாலேயே பிக்குகளை ஏவி விட்டுள்ளதாகவே பார்க்கிறோம்.
ஆக ஜீவ காருண்யம் என்ற வகையில் நாட்டில் உள்ள மீன் சந்தைகளை அரசு உடனடியாக மூடும் என்றால் மாட்டிறைச்சிக்கடைகளையும் மூட உலமாக்கள் தலைமையிலான கட்சி என்ற வகையில் நாம் ஒத்துழைப்பு வழங்கத்தயார் என முபாறக் மௌலவி தெரிவித்தார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar