BREAKING NEWS

அமைச்சு பதவிக்கு நன்றிக்கடன் தீர்க்கும் பசீர் சேகு தாவுத்.


முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவேண்டியதில்லை


இலங்கையில் உள்ள எந்தச் சமூகமும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான மார்க்கம் இலங்கையிலேயே உள்ளது என்பதில் முஸ்லிம் சமூகம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிக்கும் அதே நேரம்,
இன்றைய காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கும் கொண்டு செல்லும் அவசியம் இல்லை என்பதையும் உணர்ந்திருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், உற்பத்திவள ஊக்குவிப்பு அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போர்வையில் முஸ்லிம்களையும், சர்வதேச இராஜதந்திர வலையில் இழுத்துவிட எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு மத ரீதியிலான அசெளகரியங்கள் உள்ளன என்ற விடயத்தை பிரசாரப்படுத்தி, இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தி ஏற்படுத்துவதை முஸ்லிம் சமூகம் விரும்பவில்லை. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்குலகிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் இராஜதந்திரிகள், இலங்கை முஸ்லிம்கள் குறித்தும் ஆர்வமும், அக்கறையும் காட்டினாலும், இந்த இராஜதந்திரிகளில் பெரும்பாலானோர் தங்களது நாடுகளின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கியே செயற்படுகிறார்கள்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் முஸ்லிம்கள் பங்குபற்றாவிட்டாலும், அவர்கள் பாரிய அளவில் அவலங்களையும், உயிரிழப்புகளையும், உடமையிழப்புகளையும் சந்தித்தவர்களாகவே இருக்கின்றார்கள், இத்தகைய கடந்தகாலப் பாதிப்புகளை பற்றி அன்று அக்கறைப்படாத சக்திகள், அண்மைக்காலமாக ஏற்பட்டிருக்கின்ற மத அசெளகரியங்களைப் பயன்படுத்தி, இலங்கை முஸ்லிம் சமுதாயத்தையும் இராஜதந்திரப் போரில் ஓரங்கமாக இழுத்துவிட முயற்சிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் பிரச்சினைகளையும், இறுதிக்கட்டப் போரின் நிகழ்வுகளையும் பயன்படுத்தியும், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறியும் எடுக்கப்படும் இராஜதந்திர முயற்சி எனும் வலையில் இலங்கை முஸ்லிம் சமுகம் விழுந்துவிடப் போவதில்லை.
இலங்கை முஸ்லிம்கள், கடந்த காலங்களில் தங்களுக்கிருந்த பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு உலகின் முஸ்லிம் நாடுகளை நாடியிருக்கவுமில்லை, சர்வதேச சமூகத்தை வேண்டி நிற்கவுமில்லை. தமிழ்த் தேசியத்தின் வன்முறை அரசியலின் மூலமாக ஏற்பட்ட பிரச்சினைகளின் போதும், பெளத்த தீவிரவாத சக்திகளினால் முஸ்லிம்களுக்கு அண்மைக்காலங்களில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளின் போதும், இவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் உள்நாட்டு மட்டத்திலேயே பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவே முஸ்லிம் சமூகம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
நூற்றாண்டுகாலமாக இலங்கை முஸ்லிம் சமூக முன்னோடிகளும், அரசியற் தகைமையாளர்களும் நாட்டில் அவ்வப்போது தலைதூக்கிய பிணக்குகளுக்கு உள்நாட்டு மட்டத்திலேயே பேசித் தீர்வுக்கு வந்திருக்கின்றார்கள் என்பதை நடை முறையாகவும் வரலாறாகவும் நாம் காண்கின்றோம்.
இதேபோன்றுதான் இன்றைய காலகட்டத்திலும் இலங்கை முஸ்லிம்களை சர்வதேச அரங்குக்குள் இழுத்தெடுத்து அரசியல் இராஜதந்திர வேட்டைகளில் பலியிடப்படுவதை விரும்பவில்லை.
இத்துடன், இலங்கையின் ஜனநாயக நடைமுறைகளிலும், சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கைகளிலும். மூன்று இனங்களையும், உள்ளடக்கிய கனவான் தன்மையுடைய குடிமைச் சமூகத் தலைமைத்துவங்களிலும், இன்னும் எஞ்சியிருக்கின்ற இனவாதமும், மதவாதமுமற்ற பெரும்பான்மையான அரசியற் தலைமைத்துவங்களிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் நம்பிக்கை இழந்துவிடவில்லை.
குடியேற்ற முறைமைகளினால் வஞ்சிக்கப்பட்டு, நாடெங்கும் குடும்பங்களாகச் சிதறி வாழும் சிறுபான்மையினமான முஸ்லிம்கள் எந்வொரு தருணத்திலும் வன்முறை அரசியல் உத்திகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும். பேச்சுவார்த்தைகள் முறிவடைகின்ற தருணங்களிலும் சமாதானத்திற்கான இன்னொரு முயற்சி என்பது. இலங்கையர் களுக்கிடையிலான மற்றுமொரு பேச்சு வார்த்தைதான் என்பதிலேயே முஸ்லிம் சமூகம் உறுதியாக இருந்திருக்கிறது.
இன்னும் தெளிவாகக் கூறுவதாயின், இலங்கையில் உள்ள எந்தச் சமூகமும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான மார்க்கம், இலங்கையிலேயே உள்ளது என்பதில் முஸ்லிம் சமூகம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் அதேநேரம். இன்றைய காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் அவசியம் இல்லை என்பதையும் உணர்ந்திருக்கின்றது. இவ்வாறு அமைச்சர் பசீர் செகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar